தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

தேர்தல் மற்றும் ஓட்டுப்பதிவு பரபரப்பெல்லாம் முடிந்த ஒருநாள் மதியம், அலுவலகத்தில் உணவு இடைவேளை...

அலுவலக மொட்டை மாடியில் இருந்த உணவு கூடத்தில் குழுமியிருந்தனர், ஊழியர்கள். ஒரு வரிசை முழுவதும், பெண் உதவி ஆசிரியை மற்றும் மகளிர் அணிவகுத்திருந்தனர். அவர்களது எதிர் வரிசையில் நான் அமர்ந்து, லென்ஸ் மாமா வருவதாக கூறியிருந்ததால், புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன்.

'என்ன மணி... சாப்பிடலையா... மாமா வரணுமோ...' என்று அவர்களாகவே கேள்வி கேட்டு, பதிலும் கூறினர்.

நான் மையமாக தலையசைத்து, புத்தகம் படிப்பதில் கவனம் செலுத்தினேன். பெண்கள் பேசுவது, காதில் விழுந்தபடி தான் இருந்தது.

குடும்பக்கதை, சினிமா, அலுவலக வம்புகள் என்று, சுற்றி வந்த இவர்கள் பேச்சு, 'டிராக்' மாறி, திருமணம், கணவன் - மனைவி உறவு பக்கம் திரும்பியது.

இந்த மகளிர் அணியில், திருமணமான, ஆகாத பெண்கள் இருந்தனர். திருமணமான பெண் உதவி ஆசிரியை ஒருவர் திடீரென, 'உங்கள் கணவர் உங்களை எப்படி அழைத்தால் பிடிக்கும்?' என்று கேட்டார்.

உடனே, இன்னொரு திருமணமான உதவி ஆசிரியை, 'வாடி - போடி... என்று அழைப்பது பிடிக்கும். அதில் ஒரு நெருக்கம் வெளிப்படும். அதேசமயம், பொது இடங்களில், 'வாமா - போமா' என்று அழைத்தால், நன்றாக இருக்கும்...' என்றார்.

'எல்லா நேரத்திலும் வாடி - போடி, 'டயலாக்' சரி வராது. உடம்பு முடியாத சமயங்களில், 'என்னம்மா செய்கிறது; மருந்து சாப்பிட்டாயா; கஞ்சி குடிக்கலையாம்மா...' என்று அன்போடு கேட்கும் போது, பாதி நோய் குணமாகி விடுமே...' என்றார், இன்னொரு திருமணமான பெண்.

திருமணம் ஆகாத இளம்பெண் ஒருவர் இடைமறித்து, 'இதெல்லாம் சரி வராது. 'அம்மு, புஜ்ஜிம்மா, செல்லக்குட்டி, டார்லிங், கண்ணுக்குட்டி' என்று அழைத்தால் தான், அன்னியோன்யம் இருக்கும்...' என்றார்.

'யாரு... இங்க கண்ணுக்குட்டி?' என்று கேட்டவாறு ஆஜரானார், லென்ஸ் மாமா.

'அப்பாடா... இவர்களிடமிருந்து தப்பித்தேன்...' என்று நான் நினைக்க, மகளிர் அணியினரோ, 'ஐயோடா... வந்துட்டாருடி, நம்பியார்... இவரிடம் பேச்சு கொடுத்தால், கலாய்த்து கொன்னுடுவாருடி...' என்று, 'கிசுகிசு'த்தது, காதில் விழுந்தது.

'உங்கள் பேச்சில் என்னையும் சேர்த்துக் கொண்டால், பல ஐடியாக்களை கொடுப்பேன்...' என்றவர், என் அருகில் அமர்ந்து, தன் டிபன்பாக்சிலிருந்து சப்பாத்தி, குருமா எடுத்து, எனக்கு பாதியை கொடுத்து, என்னிடமிருந்து தயிர் சாதத்தை கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்தார்.

மகளிர் அணியினர் சிறிது நேரம் தங்களுக்குள் பட்டிமன்றம் நடத்தி, 'மாமாவை சேர்த்துக்கறோம். பெண்கள் மனசு பற்றி அவருக்கு நன்றாக தெரியும்...' என்றவர்கள், 'மணி... கிணற்று தவளை மாதிரி இருக்காதே. எங்களோடு இந்த பேச்சில் கலந்துக்கோ. பல விஷயங்களை தெரிஞ்சு வச்சுக்கறது நல்லது தானே...' என்றார், ஒரு உதவி ஆசிரியை.

மாமா வருவதற்கு முன் அவர்கள் பேசியதை சுருக்கமாக கூறி, தொடர்ந்து பேச ஆரம்பித்தனர்.

திருமணம் ஆகாத இரு இளம்பெண்கள், 'எப்ப பாரு, 'வாடி - போடி' என்று கூப்பிட்டால் எரிச்சல் தான் வரும். 'வாடா - போடா, ராசாத்தி, செல்லம்மா' என்று கூப்பிட்டு கொஞ்சினால் தான், 'கிக்' வரும்...' என்றனர்.

'உங்களை உங்கள் கணவர் செல்லமாக கூப்பிடுவது இருக்கட்டும். நீங்கள் அவர்களை எப்படி கூப்பிட்டால் பிடிக்கும்...' என்றார், தடாலடியாக மாமா.

எதிரணியிடமிருந்து பதிலே வரவில்லை. என்னை பார்த்து, 'எப்படி மடக்கினேன் பார்த்தியா?' என்பது போல் கண்ணடித்தார், மாமா.

சுதாரித்த ஒரு பெண், 'அப்பப்ப 'மூடு'க்கேத்த மாதிரி எதாவது பேர் சொல்லி கூப்பிடுவோம். அது பிடித்ததா, இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை...' என்றார்.

'இது என்ன நியாயம்... ஒருவழிப்பாதை மாதிரி அல்லவா இருக்கிறது. அத, மொதல்ல தெரிஞ்சுக்கோங்க... அப்பறம், அவர்கள் என்ன எதிர்பார்ப்பர் என்று, நான் சொல்லிக் கொடுக்கிறேன்...' என்றார், மாமா.

'அதெல்லாம் ஒண்ணும் வேணாம். புதுசு புதுசா எதாவது சொல்லப் போக, ஏடாகூடமாகி விடும்...' என்றார், அனுபவமிக்க உதவி ஆசிரியை ஒருவர்.

அடுத்து, திருமணம் ஆகாத இளம்பெண்ணிடம், 'உங்க வருங்கால கணவர் எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க?' என்றார், சீனியர் பெண் ஒருவர்.

'பார்க்க, 'பர்சனாலிட்டி'யா, நல்லா சம்பாதிப்பவராக, எனக்கும், அவருக்கும், ஐந்து வயது வித்தியாசம் இருப்பவராக, அன்புடனும், ஆசையுடனும் இருக்கணும்...' என்றார்.

'நீ, இப்படி சொல்றே... ஆனால், இன்றைய இளம் பெண்களின் எதிர்பார்ப்பு ஓவராக இருக்கிறதே... அதை கேட்டு மெர்சலான பையன்கள் நிறைய பேர் இருக்கின்றனர்...' என்று குறிப்பிட்டார், மாமா.

எதிர் வரிசையில் இருந்து, அதற்கும் பதில் இல்லை.

'திருமணத்திற்கு முன், ஏதாவது, 'கண்டிஷன்' போடுவீங்களா?' என்றார், அதே சீனியர் பெண் ஊழியர்.

'ஓ... என் பெற்றோரையும், அவங்க பெற்றோர் போல் மதித்து நடக்கணும். என் பெற்றோருக்கு நான் பணம் கொடுப்பதை தடுக்கக் கூடாது; கேள்வியும் கேட்கக் கூடாது...' என்றார், இளம்பெண் ஒருவர்.

'கணவர் சம்பாதித்ததை யார் யாருக்கு கொடுக்கிறார் என்று, நீங்கள் மட்டும் கேட்கலாமா?' என்று மடக்கிய மாமா தொடர்ந்து, 'குடும்பம் என்றால், சண்டை - சச்சரவு இருக்குமே. எடுத்ததற்கெல்லாம் கோபப்பட்டு, விவாகரத்து செய்வீர்களா?' என்றார்.

'அப்படியெல்லாம் இல்லை. அர்த்தமில்லாமல் சந்தேகப்பட்டு, 'டார்ச்சர்' செய்தால்; எங்களுக்காக சிறு துரும்பு கூட நகர்த்தாமல், அதிகாரம் மட்டும் செய்தால்; வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தால்... யோசிக்கவே மாட்டோம். விவாகரத்து தான்...' என்றார், ஒருவர்.

'அதெல்லாம் சரிப்படாது. குழந்தைகள் இருக்கும்பட்சத்தில், அப்பா பாசம் அவர்களுக்கு தேவை என்பதால், குறைகளை எடுத்துச் சொல்லி புரிய வைப்போம். இருபக்க பெரியவர்களிடமும் சொல்லி, சரிசெய்ய பார்ப்போம். குடும்பத்தில் மனைவி எவ்வளவு அத்தியாவசியமானவள் என்பதை, உணர வைக்க பார்ப்போம். இது எதற்கும் மசியவில்லை என்றால், விவாகரத்து தான்...' என்றார், அனுபவமிக்க உதவி ஆசிரியை.

'எல்லாம் சரி... உங்கள் பக்கம் மேற்கூறிய குற்றம், குறைகள் இருந்தால்...' என்று மாமா இழுக்க, எரித்து விடுவது போல் பார்த்தனர்.

'ஆங்காங்கு ஒரு சில பெண்கள், முறை தவறினால், ஒட்டுமொத்த பெண்களையும் குற்றம்சாட்டக் கூடாது...' என்று கடுப்படித்து, 'வாங்கடி போகலாம். இந்த மாமா எப்பவும் இப்படித்தான். ஆண்களுக்கு சாதகமாகத்தான் பேசுவார்...' என்று, கைகழுவ எழுந்து சென்றனர்.

'நான் எதாவது தப்பா சொன்னேனா மணி... ஏன் இப்படி கோச்சிட்டு போறாங்க...' என்ற மாமாவை, சமாதானப்படுத்தினேன்.

சக பெண் ஊழியர்கள் பேசியதிலிருந்து, பெண்கள், தங்கள் கணவர்களிடமிருந்து என்னென்ன எதிர்பார்க்கின்றனர் என்பது, ஓரளவுக்கு தெரிந்து விட்டதல்லவா... திருமணமான, திருமணம் செய்ய இருக்கும் ஆண்களே, புரிந்து நடந்துக் கொள்ளுங்களேன்; வாழ்க்கை இனிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us