
பா - கே
ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, தற்சமயம் பெங்களூரில் வசிக்கும் நண்பர், அவர். இந்தியாவிலிருந்து அப்பளம், பொடி வகைகள், வத்தல் மற்றும் ஊறுகாய் வகைகளை, பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். தொழில் நிமித்தமாக, அவ்வப்போது, அந்நாடுகளுக்கும் சென்று வருவார்.
சமீபத்தில், இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வந்ததாகவும், விரைவில், சென்னை வர இருப்பதால், என்னை சந்திக்க விரும்புவதாக தகவல் அனுப்பியிருந்தார்.
'கொரோனா தொற்றால், விமான போக்குவரத்து ரத்தாகியுள்ளதே... எப்படி அவர் வெளிநாடு செல்ல முடியும்...' என, உங்களது, 'மைண்ட் வாய்ஸ்' எனக்கு கேட்கிறது.
வாரத்துக்கு இருமுறை, 'எமிரேட்ஸ்' போன்ற, சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் செயல்படுகின்றன. முக்கியமான வேலை காரணமாக செல்பவர்கள், அரசு அனுமதியுடன் சென்று வரலாம்.
நண்பர், செல்வாக்குள்ள தொழிலதிபர், 'பிசினஸ் கிளாசில்' பயணிப்பவர், அப்புறமென்ன... 'ரைட் ராயல்' ஆக சென்று வருவார்.
'கம்மிங் பேக் டு த பாயின்ட்!'
சென்னைக்கு வந்த வேலையை முடித்து, என்னை சந்திக்க வந்திருந்தார். லென்ஸ் மாமாவும், குப்பண்ணாவும் உடன் இருந்தனர்.
'பிசினஸ் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு...' என்றேன்.
'ரொம்ப நல்லா போயிட்டிருக்கு. நம்மூர் சாப்பாட்டு ஐட்டங்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும், நம் பாரம்பரிய உணவு பழக்கத்தைப் பற்றி, பல வெளிநாட்டினர் அறிந்துள்ளனர்; அதை சாப்பிடவும் துவங்கியுள்ளனர். எல்லாம், 'கொரோனா' தந்த பாடம்.
'நான், எப்போது லண்டன் போனாலும், குஜராத்தி ஒருவர் நடத்தும் ஹோட்டலில் தான் சாப்பிடுவேன். அப்படி நான், அங்கு சாப்பிட சென்றபோது, அந்நாட்டு ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனையை சேர்ந்த அதிகாரி ஒருவர், ஹோட்டல் முதலாளியிடம் எதைப் பற்றியோ விசாரித்துக் கொண்டிருந்தார். என்னை, அந்த அதிகாரியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார், ஹோட்டல் முதலாளி.
'தமிழகத்திலிருந்து சிறு தானியங்களை வாங்கி, அனுப்ப முடியுமா என்றும், அதை அரண்மனையில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த சமையல்காரர் சமைத்து, ராணிக்கும், மற்றவர்களுக்கும் தருவார் என்றும் கூறினார், அந்த அதிகாரி...' என்றார்.
'இங்கிலாந்து நாட்டு ராணியின் அரண்மனையில், தமிழகத்தை சேர்ந்த சமையல்காரரா...' என்று வியந்தேன்.
'நான் கூட முதலில் ஆச்சரியப்பட்டேன். அந்த சமையல்காரரின் பூர்வீகம் பற்றியெல்லாம் கூறிய பின்தான், நம்ப முடிந்தது. வந்த வாய்ப்பை விட்டு விடுவேனா... ஒப்புக்கொண்டு அதற்கான பூர்வாங்க வேலைகளை செய்து வருகிறேன். விரைவில் நம்மூர் சிறுதானிய வகைகள் அரண்மனைக்கு செல்ல இருக்கிறது.
'இன்னொரு விஷயம் மணி... அந்த அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ராணி பற்றி பல விஷயங்கள் கூறினார். அசந்து போய் விட்டேன்.
'அது என்ன...' என்றதும், கூற ஆரம்பித்தார்:
*இங்கிலாந்து ராணி எலிசபெத், கடந்த ஏப்ரல் 2021ல், தன், 95வது வயதை தொட்டார். கணவர் பிலிப் இறந்து, புதைக்கப்பட்ட, நாலாவது நாள் என்பதால், பெரிதாக விழா கொண்டாடப்படவில்லை.
*இங்கிலாந்து ராணிக்கு, ஆண்டுதோறும் இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடுவது வழக்கம்.
ஒன்று, அவருடைய உண்மையான பிறந்த நாள். மற்றொன்று, அரசு எடுக்கும் விழா. இது, ஜூன் மாதம், ஏதாவது ஒரு சனிக்கிழமை கொண்டாடப்படும். அதன்படி, ஜூன் 5, 2021ல், சிம்பிளாக கொண்டாடப்பட்டது.
*உண்மையான பிறந்த நாள் அன்று, மூன்று இடங்களில் 41, 21, 62 என, துப்பாக்கி ஏந்திய, அணிவகுப்பு மரியாதை உண்டு
*ராணியாக பதவியேற்று, 2022ம் ஆண்டு ஜூன் மாதம், 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை, நான்கு நாள் விழாவாக, பக்கிங்ஹாம் அரண்மனை கொண்டாட உள்ளது
* இத்தகைய சூழலில், ராணி எலிசபெத்தால் முன் போல், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள இயலவில்லை. நேரடி பங்கை குறைத்துக் கொண்டே வருகிறார்
*தற்போது, அவருடைய மகன் சார்லஸ், ராணியின் பணிகளில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார்
*ராணி, ஆண்டுக்கு, 2,000திற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். இனி, திருமண வரவேற்பு, அரச குடும்பத்து நிகழ்வுகள், தோட்ட, 'பார்ட்டி'கள் நடக்கும்போது, இவற்றில் ராணி சார்பாக, அவரது குடும்பத்தினர் பங்கெடுத்துக் கொள்வர்
*காமன்வெல்த் மற்றும் பல நாடுகளில் நடக்கும் தேசிய நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்கள், ராணி சார்பாக, குடும்பத்தினர் பங்கேற்பர். குறைந்தது, 3,000 பொது நிகழ்ச்சி இயக்கங்களுக்கு தலைவராகவோ அல்லது போஷகராகவோ இருக்கிறார், ராணி
*அரண்மனைக்கு, ஒரு நாளைக்கு பல ஆயிரம் கடிதங்கள் வரும். அவை அனைத்துக்கும், ராணி சார்பில் பதில் எழுத வேண்டும்
* ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளை அழைத்து, ராணிதான் பரிசு வழங்குவார்
*ராணியின் அரண்மனையில் அவர் புழக்கத்துக்கென்று, தனி ஏ.டி.எம்., உண்டு
*ராணிக்கென தனியாக கவிஞரை நியமித்துக் கொள்ளலாம்
*இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தும் புதிய சட்டங்களில், ராணி தான் கையெழுத்திட வேண்டும்
*மேல் சபையின், 'லார்ட்ஸ்' என்ற கவுரவம் மிக்க பதவிக்கு, வியாபாரம், கலை மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் சாதித்தவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பர். அதற்கு, ராணியின் ஒப்புதல் பெற வேண்டும்
* அரசு அமைக்க, உத்தரவிட, ராணிக்கு முழு அதிகாரம் உள்ளது. அதேபோல், கலைக்கவும் முழு அதிகாரம் உண்டு
*மதத்தின் தலைவி, சர்ச் ஆப் இங்கிலாந்தின் தலைவியான, ராணிதான் ஒவ்வொரு ஆண்டும், ஈஸ்டரின்போது, தன் வயதுக்கு ஏற்ப, சீனியர் சிட்டிசன்களுக்கு, சிறப்பு வெள்ளி காசுகளை வழங்கி கவுரவிப்பார்
*ராணியை கைது செய்ய முடியாது; வழக்கு போட முடியாது; அவர், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்
*ராணிக்கு பாஸ்போர்ட் தேவை யில்லை. எந்த நாட்டுக்கு, எப்போது வேண்டுமானாலும் போகலாம். ஆனால், ராணியின் குடும்பத்தினருக்கு பாஸ்போர்ட் தேவை
* எதற்கும் வரி கட்ட வேண்டாம். ஆனால், 1992ம் ஆண்டு முதல், ராணி, சொந்த விருப்பத்தின்படி, வரி கட்டி வருகிறார்
*தேம்ஸ் நதியில், குறிப்பிட்ட துாரத்திற்குள் நீந்தும் வாத்துகள் அனைத்தும், ராணிக்கு சொந்தம்
*கடலின் கரையை ஒட்டிய, 5 கி.மீ., துாரத்தில் பிடிபடும் கடற் பன்றிகள், உணவுக்கு பயன்படும் பெரிய மீன் வகைகள் மற்றும் சுறாக்கள், ராணிக்கு சொந்தம்
*ஆண்டிகுவா, படுவா, திபகாமாஸ், பார்புடா, பெலிஸ், கனடா, க்ரேனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்பா நியூ கயானா, செயின்ட் கீட்ஸ், நெவிஸ், க்ரேனாடைன்ஸ், சாலமன் தீவுகள் மற்றும் துவலு நாடுகளுக்கும், எலிசபெத் தான், ராணி. ராணிக்கு பின், அவரது மகன் சார்லஸ், ராஜாவாக இருப்பார்.
'அம்மாடியோவ்... இவ்வளவு, 'பவர்புல்' ஆனவரா ராணி...' என்றார், லென்ஸ் மாமா.
'ஏம்பா... 'இல்லுமினாட்டி'ன்னு கேள்விப்பட்டிருக்கிறீரா... அந்த குழுவுக்கு ராணி தான் தலைவின்னும் சொல்றாங்களே உண்மையாப்பா...' என்றார், குப்பண்ணா.
'ஆளை விடுங்க சாமி...' என்று, 'எஸ்கேப்' ஆனார், நண்பர்.