/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (09)
/
நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (09)
PUBLISHED ON : ஜூலை 04, 2021

நாடகத்தில் மிகவும், 'பிசி'யாக இருந்த நேரம். அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு, தயாரிப்பாளர் சங்கம் சார்பில், பாராட்டு விழா நடத்தினர். அதில், '10 நிமிடம் ஜாலியாக ஒரு குறு நாடகம் போடணும் வா...' என்று அழைத்தார், பிரமிட் நடராஜன்.
'முதல்வர் நிகழ்ச்சி மாலை, 5:00 மணிக்கு. 5:30க்கு என் நிகழ்ச்சி முடிந்துவிடும். 7:00 மணிக்கு, நாரதகான சபாவில் நடக்கும் நாடகத்திற்கு போக வேண்டும்; எல்லாம் சரியாக இருக்குமா...' என்று கேட்டார், எஸ்.வி.சேகர்.
'முதல்வர் நிகழ்ச்சி எல்லாம் சரியான நேரத்திற்கு நடக்கும். நீ கவலைப்படாமல் வா...' என்றார்.
போனார், எஸ்.வி.சேகர். நாடகம் முடிந்ததும், காரை வெளியே எடுக்க அனுமதிப்பரா என்ற ஒரு சந்தேகம்.
அங்கே இருந்த அப்போதைய கமிஷனர் நட்ராஜ், 'நான் ஒரு இடத்தை சொல்கிறேன். அங்கே நிப்பாட்டிக் கொள்ளுங்கள். எவ்வித இடையூறும் இருக்காது...' என்றார்.
சரியான நேரத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். பெரிய மாப்பிளே சின்ன மாப்பிளே நாடகத்தை, சிஎம்ஆ பிஎம்ஆ என்று, 10 நிமிட நாடகமாக்கி போட்டார்; விழுந்து விழுந்து சிரித்தார், ஜெயலலிதா.
இரண்டு நாள் சென்றதும், முதல்வர் அலுவலகத்தில் இருந்து
எஸ்.வி.சேகருக்கு அழைப்பு வந்தது. மொபைல் இல்லாத காலம் அது. 'லேண்ட் லைனில்' அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், வீட்டிற்கே தேடி வந்தனர், சில போலீஸ் அதிகாரிகள்.
அப்போது, வீட்டில் இல்லை,
எஸ்.வி.சேகர்; கலைவாணர் அரங்கில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். வீட்டில் இருந்தவர்களோ, என்னவோ ஏதோ என்று பயந்து விட்டனர்.
சில அதிகாரிகள், சபாவிற்கு போன் போட்டுள்ளனர். அவர் மேடையில் இருந்ததால், எந்த அழைப்பையும் ஏற்கவில்லை.
நாடகம் முடிந்ததும், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து ரயிலை பிடித்து தஞ்சாவூரில் நடராஜன் (சசிகலாவின் கணவர்) நடத்தும் நிகழ்ச்சிக்கு செல்வதாக ஏற்பாடு. அதன்படி ரயிலை பிடிக்க, கடைசி நேரத்தில் சென்றார்.
பெட்டியில் அவரது லக்கேஜ்களையும் ஏற்றி விட்டார். அப்போது, ரயில் நிலைய மேலாளர் வந்து, 'உங்களுக்கு, முதல்வர் அலுவலகத்தில் இருந்து போன். அவசரமாக பேச வேண்டுமாம்...' என்றார்.
லக்கேஜ்களை பெட்டியில் விட்டுவிட்டு, ரயில் நிலைய மேலாளர் அறைக்கு சென்றார். முதல்வரின் தனிச்செயலர், ஜவஹர் பேசினார்.
'உங்கள் நாடகத்தை முதல்வர் பெரிதும் பாராட்டினார். நீங்கள், தஞ்சாவூர் நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்றும் சொல்லச் சொன்னார்...' என்றார்.
எஸ்.வி.சேகருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
'முதலில் நீங்கள் தான் முதல்வரின் தனிச்செயலர் என்பது எப்படி எனக்குத் தெரியும். நீங்கள் உங்கள் எண்ணை கொடுங்கள் நான் கூப்பிடுகிறேன்...' என்றார். அவர், தன் எண்ணைக் கொடுத்தார்.
அந்த எண்ணைப் பார்த்த ரயில் நிலைய அதிகாரிகள், 'அது, முதல்வர் அலுவலக எண் தான்...' என்று, உறுதி செய்தனர்.
இவரை பற்றி அவர்
இவனுக்கு இவன் தான் நிகர். இவன் நாடகத்தை யார் பார்த்தாலும், சிரிக்கும் சிரிப்பில் சீராகும் பிரஷர், சுகர்.
இவனுக்கு இஷ்ட தெய்வம். சுகர் - கிளிமுகர். அவருக்காக இவன் கோவில் எழுப்ப அங்கு வந்து நாளும் துதிக்கிறது, நகர். கவிஞர் வாலி
—தொடரும்.
எல். முருகராஜ்