sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 04, 2021

Google News

PUBLISHED ON : ஜூலை 04, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நேர்மையும், உழைப்பும் இருந்தால்...

ஒரு நபர் மூலம், சில மரக்கன்றுகளை அனுப்பியிருந்தார், எங்கள் உறவினர்.

வந்தவரிடம், 'என்ன செய்கிறீர்கள்...' என, விசாரித்தேன்.

என் உறவினர் வசிக்கும் தெருவை குறிப்பிட்டு, அங்கு பணி செய்வதாக கூறினார்.

ஒரு நிறுவனம், அலுவலகம் என குறிப்பிடாது, தெருவில் பணி புரிவதாக அந்த இளைஞர் சொன்னது, வித்தியாசமாக இருந்தது.

உறவினரிடம் விசாரித்தேன்.

'வசதியானவர்கள் வசிக்கும் அந்த தெருவில், கார் மற்றும் ஸ்கூட்டர் துடைப்பது; காலையில் வாசல் தெளித்து கோலமிடுவது; காய், கனி, மருந்துகள் வாங்கி வருவது; மிஷினுக்கு செல்வது...

'துணை இல்லாத முதியோரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வது

மற்றும் தோட்ட வேலைகளில் உதவுவது போன்று, அவரவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதை, ஒரு தொழிலாக மேற்கொண்டு வருகிறார்.

'அவர் மனைவியும், அதே தெருவில் காலையில் பணி பெண்ணாகவும், மாலையில், பூ விற்பவராகவும் பணிபுரிகிறார்.

'படித்தவர்கள் எல்லாம் அரசை, நிர்வாகத்தை குறை கூறி, வாழ்க்கையை கஷ்டமாக உணரும்போது, அதிக படிப்பறிவில்லாத ஒருவர், தன் உழைப்பையும், நாணயத்தையும் மட்டுமே நம்பி, ஓரளவு சம்பாதித்து, நிறைவுடன் வாழ்வது பலருக்கும் பாடம். மேலும், நமக்கு அமையும் சூழலை வைத்து, வெற்றிகரமாக வாழ்வதே புத்திசாலித்தனம்...' என்றார், உறவினர்.

நேர்மையும், நாணயமும், தன்னம்பிக்கையும் இருந்தால், எவரும் வாழ்வில் உயர முடியும்!

- விபு கிருஷ்ணன், சென்னை.

இவைகளிடம் ஜாக்கிரதை!

ஒருநாள் மாலை, மாடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுக்க, நானும், மகளும் சென்றோம்.

நான் எடுத்த துணிகளிலிருந்து, திடீரென்று ஒரு, 'வைப்ரேஷன்!' என்ன என்று சிறிது நேரம் நின்றால், 'வைப்ரேஷன்' நின்று விட்டது. துணிகளை மீண்டும் அடுக்க ஆரம்பிக்க, மீண்டும், 'வைப்ரேஷன்!'

கீழே இறங்கி வந்து, துணிகளை மடிக்க ஆரம்பித்தேன். திரும்பவும் ஒரு துணியை எடுத்த போது, 'வைப்ரேட்டர்' வெளிப்பட்டது. தங்க நிறத்தில், மின்னியபடி அழகான பொன் வண்டு, 'உய்ங்...' என்று பறந்து போய் பீரோவின் மேல் அமர்ந்து கொண்டது. அதை வெளியே அனுப்புவதற்குள், நாக்கு தள்ளி விட்டது.

அதற்கடுத்த வாரம் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

'கட் ஷூ'வை போட்டுக் கொள்வதாய் இருந்தால், நன்றாக தட்டி தான் போட்டுக் கொள்வேன்.

அன்று வெளியே செல்ல, ஷூவை எடுத்து தட்டி விட்டு, கீழே போட்டேன். திரும்பி கதவை மூடும்போது, காலில் ஏதோ வழுவழுப்பாக பட்டது. கீழே பார்த்ததில், என் ஷூவின் உள்ளேயிருந்து, உள்ளங்கையளவில் பெரிய தேரை ஒன்று, குதித்து ஓடியது.

மழை காலத்தில் மட்டுமல்ல, வெயில் காலத்திலும், வெயிலிலிருந்து தப்பிக்க எங்கே பதுங்கிக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டே இருக்கும், இந்த, 'அழையா விருந்தாளிகள்' கிடைத்த இடத்தில் உள்ளே நுழைந்து கொள்கின்றன.

துணிகளோ, காலணிகளோ எதுவாக இருந்தாலும், நன்றாக தட்டி விட்டு, அணிந்து கொள்வதே பாதுகாப்பானது.

- மீரா ஜானகிராமன், சென்னை.

நல்லதொரு முயற்சி!

சமீபத்தில், உறவினரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றிருந்தேன். விழாவில் ஒரு இடத்தில், சில நபர்கள் மட்டும் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர்.

உணவு அருந்தி வெளியே வந்த என்னை அழைத்த, விழா வீட்டினர், 'நீங்களோ அல்லது உங்கள் உறவினரோ, வீடு கட்டுவது என்றால், இந்த நபர்களிடம் வேலையை கொடுங்கள்...' என கூறி, அங்கு அமர்ந்திருந்தவர்களை கை காட்டி, ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார்.

அதில், கட்டட மேஸ்திரி, பெயின்டர், பிளம்பர், எலக்ட்ரீஷியன், தச்சர், டைல்ஸ் மேஸ்திரி என, அனைவரும் இருந்தனர்.

அவர்கள், தங்களது முகவரி மற்றும் போன் எண் அடங்கிய, 'விசிட்டிங் கார்டு'களை தந்தனர். விழாவுக்கு வந்த அனைவரும் அதை பத்திரப்படுத்தியதை காண முடிந்தது. அதோடு, அவர்களின் வேலை நுட்பத்தை நேரடியாய் பார்த்தும், தெரிந்து கொள்ள முடிந்தது.

வீடு கட்டி தந்ததும், அவர்களை தலை முழுகி விடாமல், அவர்களுக்கு மறு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக, விழாவுக்கு வந்தவர்களிடம், அவர்களைப் பற்றி அறிமுகம் செய்து வைத்த உறவினரை, பாராட்டினேன்.

இந்த முயற்சியை, மற்றவர்களும் பின்பற்றினால், இதுபோன்ற தொழில் செய்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதை மற்றவர்களும் செய்யலாமே.

- எம். புனிதா, கோவை.






      Dinamalar
      Follow us