
'உண்மை மட்டுமே பேசுவேன்' என்பவனை, 'இவன் பெரிய அரிச்சந்திரன்...' என்று கேலியாகச் சொல்வதுண்டு.
உலகில் உண்மை மட்டுமே பேசி வாழ்வது இயலாது. ராஜா அரிச்சந்திரனும் தன் மகனைக் காப்பாற்ற, ஒரு உண்மையை மறைத்தான். ஆனால் அது வெளிப்படவே, உண்மையின் பக்கம் நின்றான். படாதபாடு பட்டு, உண்மையைக் காப்பாற்றினான்.
காசி மன்னன் அரிச்சந்திரனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ராஜரிஷி விஸ்வாமித்திரரிடம் பரிகாரம் கேட்டனர்.
'உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஆனால், அது உன்னிடம், 11 ஆண்டுகள் தான் இருக்கும் பிறகு, என்னிடம் ஒப்படைத்து விட வேண்டும். நான், என் பணிக்கு அவனை பயன்படுத்திக் கொள்வேன், சம்மதமா?' என்றார்.
ஒப்புக்கொண்ட அரிச்சந்திரனுக்கு, லோகிதாசன் என்ற மகன் பிறந்தான். குழந்தைக்கு, 11 வயதானதும், விஸ்வாமித்திரரிடம் இருந்து, அவனை மறைத்து விட, திட்டம் தீட்டினான், அரிச்சந்திரன். தங்கள் மகன் என சொல்லி, வேறு ஒரு சிறுவனை விஸ்வாமித்திரரிடம் ஒப்படைத்தனர்.
இதையறிந்த சிவன், சனி பகவானை அழைத்து, ரிஷியை ஏமாற்றிய அரிச்சந்திரனுக்கு, தக்க பாடம் புகட்டி, உண்மையின் வலிமையை உலகுக்கு உணர்த்த அறிவுறுத்தினார்.
விஸ்வாமித்திரரிடம் உண்மையைச் சொல்லி விட்டார், சனி.
கோபமடைந்த விஸ்வாமித்திரர், 'என்னை ஏமாற்றியதற்கு மாற்றாக, நாட்டையே என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இனி, உண்மையே பேச வேண்டும். இப்படி செய்தால், ஏழரை ஆண்டுகள், கடந்ததும் நாட்டை மீண்டும் தருவேன்...' என்றார்; அரிச்சந்திரனும், நாட்டை ஒப்படைத்தான்.
அரண்மனையை விட்டு, மனைவி சந்திரமதி மற்றும் மகனுடன் புறப்பட்டான், அரிச்சந்திரன், விஸ்வாமித்திரருக்கு கொடுக்க வேண்டிய பாக்கிக்காக, மனைவி, மகனை விற்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சுடுகாட்டில் பிணம் எரிக்கும் பணியை செய்தான்.
ஒருநாள், பாம்பு கடித்து, இறந்து விட்டான், லோகிதாசன், அவனது பிணத்தை எரிக்க சுடுகாட்டுக்கு வந்த சந்திரமதி, கணவனின் நிலை கண்டு துடித்தாள்.
தன் முதலாளியின் உத்தரவுப்படி, பணமில்லாமல் பிணத்தை எரிக்க இயலாது என, அரிச்சந்திரன் சொல்ல, விஸ்வாமித்திரரும், சனியும் அங்கு தோன்றினர். சிவனை வரவழைத்து, தாங்கள் வைத்த தேர்வில், அரிச்சந்திரன் வெற்றி பெற்றதைக் கூறினர். குழந்தைக்கு உயிர் கொடுத்தார் சிவன்.
சுடுகாட்டில் பணியாற்றிய அரிச்சந்திரன், பிணங்களின் காதில், 'நமசிவாய' மந்திரம் சொல்லி, முக்திக்கு வழி செய்வான். அதன் அடிப்படையில், காசியிலுள்ள மயானத்திற்கு அரிச்சந்திர கட்டம் என, பெயரிட்டனர்.
தமிழகத்தில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள சில கிராமத்து மயானங்களில் அரிச்சந்திரனுக்கு சிறு கோவில் கட்டியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கணக்கன்குப்பம் கிராமத்திலுள்ள சிறிய கோவில் புகழ்மிக்கது. அரிச்சந்திரனுக்கு பூஜை செய்த பிறகே, பிணங்கள் எரிப்பர்.
தென் மாவட்டங்களில் அரிச்சந்திரனுக்கு கோவில் இல்லை. பதிலாக, பிணத்தின் சாம்பலைக் கரைக்கும் முன், ஒரு சிறு கல்லை நட்டு, அரிச்சந்திரனாகக் கருதி, அதற்கு அபிஷேகம் செய்து, பூச்சூட்டி, இறந்தவர்கள் முக்தி பெற, வழிபடும் பழக்கம் இருக்கிறது.
தி. செல்லப்பா