PUBLISHED ON : ஆக 08, 2021

பா - கே
எழுத்தாள நண்பர் ஒருவரது மகள், ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான, சவுதியில் பணிபுரிகிறார். அவரை பார்க்க, நண்பர் சமீபத்தில், சவுதிக்கு சென்றிருந்தார்.
சென்னை திரும்பியதும், ஒருநாள் என்னை சந்திக்க வந்திருந்தார். இங்கு இருக்கும்போது, தலை முடியையும், தாடியையும் நீள நீளமாக வளர்த்து வைத்திருப்பார்; எழுத்தாளர் என்பதற்கு அடையாளம் இது என்பார்.
இப்போதோ, முடியை வெட்டி, 'டிரிம்' செய்து, லட்சணமாக காட்சியளித்தார்.
'முகத்தில் பெரிய மாற்றம் தெரிகிறதே...' என்றேன்.
'என் பொண்ணுதான், 'முடியை, காடு மாதிரி வளர்த்துக் கொள்ளக்கூடாது...' என்று கூறி, அங்கே உள்ள பியூட்டி சலுான் ஒன்றுக்கு கூட்டிட்டு போய், அழகுபடுத்த ஏற்பாடு செய்தாள்...' என்றார்.
'சவுதியில் என்ன விசேஷம்...' என்றேன்.
'ரொம்பவும் வெளியே போகலை மணி... 'கொரோனா' பயம் அங்கும் இருப்பதால், எங்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அரசு, பல ஒழுங்கு முறைகளை செயல்படுத்தி வருவதை காண முடிந்தது. மேலும், அங்குள்ள சில தடை சட்டங்கள் வித்தியாசமாக உள்ளது....' என்றார்.
அது:
* மந்திர - தந்திர வேலைகள், பில்லி - சூன்யம் தடை செய்யப்பட்டுள்ளது
* குதித்து ஆடுவது, தலையை கையில் சாய்த்து ஆடுவது, நடுத்தெருவில் சேஷ்டைகள் செய்வது போன்றவற்றுக்கு தடை
* மன்னர் குடும்பத்தினர் வசிக்கும் அரண்மனைகள், மாளிகைகளை படம் எடுக்கக் கூடாது
* ஒருவரை, அவர் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுத்தால் குற்றம்
* மறந்தும் உங்கள் கேமரா, பெண்கள் பக்கம் திரும்பவே கூடாது
* 'போக்கி மான்' போன்ற வீடியோ கேம்ஸ்களை பார்க்க, 2001ம் ஆண்டு முதலே கெடுபிடி உள்ளது. இதை தொடர்ந்து பல மணி நேரம் பார்ப்பது தெரிந்தால், சூதாட்ட பிரிவில் கைது செய்யப்படுவர்
* 50 விதமான பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டக் கூடாது என, மக்களுக்கு தடை விதித்துள்ளது, அரசு. குறிப்பாக, ஆலிஸ், பென், லிண்டா, லாரன் போன்ற பெயர்கள் இதில் அடக்கம்
* காதலர் தினத்தன்று, பூக்கடை மற்றும் அன்பளிப்பு கடைகளில் சிகப்பு ரோஜா விற்கக் கூடாது. சிகப்பு ரோஜா வைத்த பொக்கே தர தடை. இதயம் போன்ற வடிவிலோ, சிகப்பாகவோ எதுவும் காதலர் தினத்தன்று வழங்குவது மிகப்பெரிய குற்றம்.
'என்னதான் சொல்லு மணி... நம்மூர் போல், 'அவுத்துவிட்ட சுதந்திரம்' அங்கு பார்க்க முடியல...' என்று கூறி முடித்தார்.
'அதுவும் ஆபத்து தான். கட்டுப்பாடான சுதந்திரம் நமக்கு தேவை...' என்று கூறி, அவரிடமிருந்து விடைபெற்றேன்.
ப
கடந்த, 1975ல், அப்போதைய பிரதமர் இந்திரா, பிறப்பித்த நெருக்கடி நிலைமையின் போது, 'துக்ளக்' இதழுக்கு நேர்ந்த சங்கடங்களையும், அதை எதிர்கொண்ட நிகழ்வுகளையும், அதன் ஆசிரியர் சோ, 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' என்ற நுாலில் விவரித்துள்ளார். அப்புத்தகத்தை படிக்கும் சந்தர்ப்பம், சமீபத்தில் கிடைத்தது. அதில், சோ கூறுகிறார்:
எமர்ஜென்சி ஏற்படுத்திய கோபத்தின் விளைவாக, 'துக்ளக்' இதழை நிறுத்தி வைத்து, ஒரு மாதம் ஆனது. என் நண்பர்களும், 'துக்ளக்' வெளியீட்டாளரும், பத்திரிகை வெளிவர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறினர். என்னால், 'துக்ளக்' இதழில் பணிபுரிகிறவர்களுக்கு சிரமம் ஏற்பட வேண்டாம் என்பதையும் நினைத்து, மீண்டும், 'துக்ளக்' இதழை நடத்தத் துவங்கினேன்.
முழுமையான பத்திரிகை தணிக்கை, 'துக்ளக்' இதழ் மீது பிரயோகிக்கப்பட்டது. தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலின்படி தான் எதுவுமே வெளியிட முடியும் என்ற நிலைமை. இதை எதிர்க்க வேறு வழி தெரியாததால், நான் கோமாளித்தனங்களில் இறங்கினேன்.
ஒருமுறை, பழைய வானொலி இதழ் - அதாவது, அகில இந்திய ரேடியோ நிகழ்ச்சிகளை தரும் ரேடியோ இதழிலிருந்து சில பக்கங்களை அப்படியே அப்பட்டமாக காப்பியடித்து, 'டைப்' செய்து, அதற்கு ஒரு தலைப்பிட்டு, கட்டுரையாக அனுப்பினேன்.
இதைப் படித்துப் பார்த்ததில், சென்சார் அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அவர், மீண்டும் மீண்டும் அதை படித்துப் பார்த்து, ஒன்றும் புரியாமல், கடைசியில், 'அது ஆட்சேபிக்கத் தகுந்தது...' என்று, முழுமையாக அதை, 'கட்' செய்து, எனக்கு திருப்பி அனுப்பி விட்டார்.
'துக்ளக்' இதழிலிருந்து வருகிற கட்டுரை என்றால், அவ்வளவு சந்தேகம்!
வந்தே மாதரம், தேசிய கீதம், ஆன்மிக சம்பந்தமான நிகழ்ச்சிகள் போன்றவை எல்லாம் கொண்ட அந்த ரேடியோ நிகழ்ச்சிகளின் பட்டியல், சென்சாரால் ஆட்சேபிக்கத் தகுந்தது என்று கூறி அனுப்பப்பட்டவுடன், நான், அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
'தேசிய கீதம் உங்களுக்கு ஏன் ஆட்சேபிக்கத் தகுந்ததாகப்படுகிறது; வந்தே மாதரம் ஏன் ஆட்சேபிக்கப்படுகிறது; ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு, நெருக்கடி காலத்தில் தடை உண்டா?' என, அந்த கடிதத்தில் விளக்கம் கேட்டு எழுத, சென்சார் அதிகாரிக்கு மேலும் குழப்பம் அதிகமாகி விட்டது.
அவர் என்னை நேரே அழைத்து, 'இது என்ன விவகாரம்?' என்று கேட்டார்.
'உங்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள, எனக்கு வேறு வழி தெரியாததால், இப்படிச் செய்தேன்...' என்று கூறினேன்.
அவர், 'நான் வெறும் அம்பு. எய்தவர்கள் இருக்க, என்னை நீங்கள் இப்படி பாடுபடுத்துவது தவறு. நானொரு அரசு அதிகாரி. எனக்கு தரப்பட்டிருக்கும் பணியை செய்கிறேன். இனிமேல், இந்த மாதிரியெல்லாம் என்னுடன் வம்பு செய்து, என் கழுத்தை அறுக்காதீர்கள்...' என்று கேட்டுக் கொண்டார்.
அந்த அதிகாரி மாறி, வேறொரு சென்சார் அதிகாரி வந்தபோது, பிரச்னை மேலும் அதிகமாயின.
அப்போது நான், அரசாங்க, 'கெஜட்' மற்றும் அரசாங்கத்தின் சில சர்க்குலர்கள் ஆகியவற்றிலிருந்து பல பகுதிகளை வெட்டி, சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவற்றை இணைத்து, முழுப் பிதற்றலாக ஒரு கட்டுரையைத் தொகுத்து, சென்சார் அதிகாரிக்கு அனுப்பினேன்.
அதைப் பலமுறை படித்துப் பார்த்த புதிய சென்சார் அதிகாரிக்கு, பெரும் சந்தேகம் வந்து விட்டது. நாட்டில், சம்பந்தா சம்பந்தமில்லாமல் நிகழ்ச்சிகள் நடப்பதை சுட்டிக் காட்டுவதற்காகவே நான், இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன் என்ற சந்தேகம் அவருக்கு வந்து விட்டது.
அதை முழுமையாக அடித்து, 'ஆட்சேபிக்க தகுந்தது...' என்று கூறி, எனக்கு அனுப்பினார்.
நான் உடனே, எந்தெந்த சர்க்குலர்களிலிருந்தும், கெஜட்டின் எந்தப் பகுதிகளிலிருந்தும் அந்தக் கட்டுரையில் உள்ள வாசகங்கள் எடுக்கப்பட்டன என்பதை விவரித்து, அவருக்கு கடிதம் எழுதினேன்.
அதில், 'அரசாங்க கெஜட் ஆட்சேபிக்கத் தகுந்தது என்று, நீங்கள் கூறுவது விந்தையாக இருக்கிறது. இதை, நான் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டியது தான்...' என்று எழுத, அவர், பதறியடித்து, எனக்கு டெலிபோன் செய்து, 'இந்த மாதிரியெல்லாம் செய்ய வேண்டாம்...' என்று கேட்டுக் கொண்டார்.
இப்படி சென்சார் அதிகாரிகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதோடு திருப்திப்பட வேண்டிய நிலையில் தான், 'துக்ளக்' இதழை நடத்திக் கொண்டிருந்தோம்.
ஆசிரியர் சோ அவர்களிடம், சென்சார் அதிகாரிகள் சிக்கி, பட்ட அவஸ்தைகளை, கற்பனையில் ஓட விட, சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. உங்களுக்கு?
