தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'மணி... 'கொரோனா' வந்ததிலிருந்து, பீச்சுக்கு, 'வாக்கிங்' போக முடியாம போச்சா, தொப்பை விழுந்திருச்சுப்பா... நாளை, விடிகாலை தயாரா இரு. நான் வந்து, 'பிக் - அப்' பண்ணிக்கிறேன்...' என்றார், லென்ஸ் மாமா.

'இந்த மார்கழி பனியிலா, மாமா?' என்றேன். 'இப்பத்தான் கூட்டம் அதிகமிருக்காது. அதுமட்டுமில்லாமல், கிழடுகளின் தொண தொணப்பும் இருக்காது...' என்றார். 'இவருக்கு, 16 வயது காளை என்ற நினைப்போ...' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

விடிகாலை, 5:30 மணி... ஸ்வெட்டர், மங்கி குல்லா அணிந்தவாறு, வீட்டு வாசலில் காரை நிறுத்தி, 'ஹார்ன்' அடித்தார்.

மப்ளர் ஒன்றை தலையில் சுற்றியபடி வெளியே வந்து, காரில் ஏறியதும், மெரினா பீச் நோக்கி காரை செலுத்தினார், மாமா.

விவேகானந்தர் இல்லம் எதிரே, பீச்சின் உள் சாலையில் வண்டியை நிறுத்தினார்.

'மாமா, நீங்க நடந்து போயிட்டு வாங்க, நான் இங்கேயே இருக்கிறேன்...' என்று அவரை அனுப்பிவிட்டு, சூரிய உதயத்தைக் காண, அங்கிருந்த சிமென்ட் தரையில் அமர்ந்தேன்.

எனக்கு சில அடி துாரத்தில், புல் தரையில், 10 - 12 வயதுள்ள சிறுவர் - சிறுமியருக்கு, கராத்தே பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார், பயிற்சியாளர் ஒருவர். குளிர் காரணமாக, சில குழந்தைகள் சுணக்கம் காட்டினர். தன்னிடமிருந்த பிளாஸ்க்கிலிருந்து, சுடச்சுட மூலிகை கஷாயம் போலிருந்த திரவத்தை, டம்ளர்களில் ஊற்றி, குடிக்க செய்தார், பயிற்சியாளர்.

'சிறிது ஓய்வு எடுத்தபின், மீண்டும் பயிற்சியை தொடங்கலாம்...' என்றவர், என் அருகே இருந்த சிமென்ட் பெஞ்சில், அவர்களை அமர வைத்தார். கூடவே, ஒரு கதையும் கூற ஆரம்பித்தார். காதை கூர்மையாக்கி, அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தேன்.

சாதாரண கப்பல் மாலுமியாகத்தான், தன் வாழ்க்கையை துவங்கினார், கொலம்பஸ். ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து சின்னஞ்சிறிய கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டார், கொலம்பஸ். பசிபிக் பெருங்கடலில் இன்னும் சில மாலுமிகளோடு அவரது பயணம் துவங்கியது.

இருபதுக்கும் மேற்பட்ட நாட்கள் கடலில் தொடர்ந்து பயணம் செய்ததால், அவர்களுக்கு வேண்டிய உணவும், குடிப்பதற்கு தண்ணீரும் இல்லாத நிலை உருவானது. தொடர்ந்து பயணம் செய்தால், உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற பயம், பலருக்கு ஏற்பட்டது. திரும்பி சென்று விடலாம் என்று, ஸ்பெயின் நாட்டை நோக்கி செல்ல முடிவெடுத்தனர்.

ஆனால், அதை எதிர்த்தார், கொலம்பஸ். 'நாம் உலகத்தை சுற்றிப் பார்த்து, நிலப்பரப்பை கண்டுபிடிக்க புறப்பட்டோம். ஆனால், நடுவில் வந்த வழியே திரும்பிச் செல்வது வெற்றிக்கு வழி வகுக்காது...' என்றார்.

கொள்கை பிடிப்போடு தீவிரமாக தன் கருத்தை வலியுறுத்திய கொலம்பசை எதிர்க்க வழி தெரியாமல் தவித்தனர், மாலுமிகள். 'இன்னும் ஒரே ஒருநாள் மட்டும் நாம் முன்னோக்கி பயணம் செல்வோம். அதற்குள் கரை எதுவும் தெரியாவிட்டால் நாம் திரும்பி, ஸ்பெயின் நாட்டுக்கே செல்வோம். அதுவரை எனக்கு உணவும், தண்ணீரும் வேண்டாம்...' என, பிடிவாதமாக சொன்னார், கொலம்பஸ்.

கொலம்பசின் கோரிக்கையை ஏற்று கப்பலை முன்னோக்கி செலுத்தினர். சுமார், 20 மணி நேரம் முடிவதற்குள் புதிய கண்டமான அமெரிக்காவை கண்டுபிடித்தார், கொலம்பஸ். தான் எடுத்த முயற்சியில் தோற்று விடுவோம் என்ற நிலை வந்தபோது கூட, தயங்காமல் தைரியமாக முடிவெடுத்தார். தன்னோடு இருந்த மாலுமிகள் அனைவரும், எதிர் குரல் எழுப்பிய பின்பும், தன் வெற்றிச் சிந்தனையை நிறைவேற்றுவது மட்டுமே நோக்கமாக வைத்திருந்தார், கொலம்பஸ்.

இந்த கொள்கைப் பிடிப்புதான், புதிய நிலப்பரப்பை கண்டுபிடிக்க முடிந்தது. இன்றும் நினைவுகூறும் வகையில் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. வெற்றியை நோக்கி பயணம் செய்யும்போது, ஏராளமான தடைகளும், எதிர்ப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், தடை கல்லை எல்லாம் படிக்கல்லாக மாற்றும் அளவுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்தால், வாழ்க்கையில் வெற்றிகளை பெற முடியும்... என, கூறி முடித்தார்.

கதை கேட்ட குழந்தைகள், புது உற்சாகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டனர். 'இவரைப் போன்ற பயிற்சியாளர்கள் இருந்தால், நம்மவர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் பல சாதனைகளை செய்வரே...' என்று எண்ணியபடி, லென்ஸ் மாமாவுக்காக காத்திருந்தேன்.

நடை பயிற்சி முடித்து வந்த மாமா, 'மணி... காலையில், 'வாக்' போவதில் இருக்கும் சுகமே தனி தான்...' என்றார். கடலிலிருந்து எழும்பிய செக்க செவேலென்ற சூரிய பந்தை சிறிது நேரம் பார்த்த பின், அங்கிருந்து கிளம்பினோம்.



சமீபத்தில் மரணமடைந்த, நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர், இளசை சுந்தரம் எழுதிய, 'வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்' என்ற புத்தகத்தில் படித்தது இது: 'உங்கள் பக்கத்து வீட்டுக்காரர், நிறைய கோழி வளர்க்கிறார். உங்கள் வீட்டுக்குள் அவை வராமல் எப்படி சமாளிக்கிறீர்கள்...' என, மற்றொருவரிடம் கேட்டார், ஒருவர்.

அதற்கு அவர் சொன்ன பதில்: என் வீட்டுக்குள் நிறைய கோழிகள் வந்து கொண்டுதான் இருந்தன. கடையிலிருந்து நான்கைந்து முட்டைகள் வாங்கி வந்து என் வீட்டு கொல்லைப்புறத்தில் அங்கங்கே போட்டு வைத்தேன். இதைக் கவனித்த அந்த வீட்டுக்காரர், தன் கோழிகள் இங்கு வந்து முட்டையிடுவதாக நினைத்து, அவராகவே இங்கு கோழிகள் வராமல் பார்த்துக் கொள்கிறார். என் தலைவலி தீர்ந்து விட்டது.

சிலருக்கு ஆலோசனை சொன்னாலே, ஆபத்தாக முடியும். ஒருவரை வெறி நாய் கடித்து விட்டது. அழுது கொண்டிருந்தவரிடம், 'உடனே மருத்துவமனைக்கு போங்கள்...' என்று ஆலோசனை சொன்னேன்.

'ஐயோ, அங்கே போக மாட்டேன். ஊசி போடுவாங்க. அந்த வலியை வேறு தாங்கணுமா...' என்றார். 'ஊசி போடாவிட்டால் ஆபத்து...' என்றேன். 'என்ன ஆகும்...' என்றார். 'கொஞ்ச நாளில் நீங்கள் வெறி நாயா மாறி எல்லாரையும் கடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...' என்றேன்.

உடனே அந்த ஆள், ஒரு தாள் எடுத்து, பேனாவால் ஏதோ வரிசையாக எழுதினார். 'என்ன எழுதுறீங்க...' என்றேன். 'எனக்கு வெறி வந்தால், யாரையெல்லாம் கடிக்கலாம்ன்னு ஒரு பட்டியல் போடுகிறேன். கடிக்க வேண்டிய ஆட்கள் அவ்வளவு பேர் இருக்காங்க...' என்றார். பட்டியலை வாங்கிப் பார்த்தார், ஆலோசனை சொன்னவர். அதில், அவர் பெயர்தான் முதலில் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us