PUBLISHED ON : ஜன 09, 2022

வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்துார், செங்கல்பட்டு: கனிமொழிக்கு, உண்மையிலேயே ஹிந்தி தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறாரா?
எனக்கு நன்கு பழக்கமான, டில்லி செய்தியாளர் ஒருவர், கனிமொழி, 'ஹிந்தியில் வெளுத்துக் கட்டுவார்... அதேபோல ஆங்கிலத்திலும்...' என, கூறி இருக்கிறார்!
கே. வேலுச்சாமி, தாராபுரம், திருப்பூர்: முன்னாள், அ.தி.மு.க., அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, இப்படி ஓடி, ஒளியலாமா?
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் ஏன்? இவர், மடியில் ஏகப்பட்ட கனம் இருக்கும் போலிருக்கு!
* எஸ். மூர்த்தி, திருச்சி: என் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன்... முக்கியமான மூன்று வழிகளை சொல்லுங்களேன்...
அறிவு, மனம், உடல் மூன்றும் ஒருமைப்பட்டு இயங்க வேண்டும்... இதுவே முன்னேற்றத்திற்கு வழி!
அ. இந்துமதி, அவிநாசி, திருப்பூர்: வாசகர் மூளைக்கு வேலை கொடுக்க, நம் இதழில் இடம்பெறும், குறுக்கெழுத்து போட்டியின் விடைகளை, 'யூ - டியூப்'ல் வெளியிடுகின்றனரே... மக்களை சிந்திக்க விடாமல் செய்வது நியாயமா?
நீங்கள் ஏன் அதைப் பார்க்கிறீர்கள்... இனி, விட்டு விடுங்கள்!
ஆர். குணசேகர், சென்னை: எனக்கு, 63 வயதாகிறது... துாக்கம் சரியாக வருவதில்லை! முதியவர்கள் எவ்வளவு நேரம் துாங்க வேண்டும்?
முதுமையில், 5 - 7 மணி நேர துாக்கமே போதுமானது; துாக்கமின்மை என்பது ஒரு நோயல்ல... (மருத்துவ நண்பரிடம் வாங்கிய பதில்!)
எம். ரேவதி, கோவை: எதிரிகள் உண்டா உங்களுக்கு?
மேடம் ரேவதி... எதிரிகள் இல்லை எனக்கு... ஆனால், என் பதில்களுக்கு எதிர் கருத்து உடைய ஒரே ஒரு வாசகர் உண்டு... வாரா வாரம் பிய்த்து எடுத்து விடுவார்!
* த. சிவாஜி மூக்கையா, சென்னை: பெண்களின் திருமண வயதை, 18லிருந்து, 21 ஆக்கியது பாராட்டுக்குரியதா?
நிச்சயமாக... 21 வயதில், 'டிகிரி' முடித்திருப்பர்... நிச்சயமாக, தனியார் நிறுவனத்திலோ, அரசு வேலையோ கிடைத்து விடும்! அவர்களால் சுய காலில் நிற்க முடியும் அல்லவா?
