PUBLISHED ON : பிப் 13, 2022

பா - கே
அன்றைய தபாலில் வந்த, வாசகர் கேள்விகளை படித்து, பதில் எழுத வேண்டியவைகளை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருந்தேன்.
பக்கத்து, 'கேபினில்' சல சல என்று சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தேன்.
இரு உதவி ஆசிரியைகள், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியது, நேதாஜியா, செண்பகராமனா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.
'ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதன் முதலில் சொல்லி, ஆங்கிலேயரை மிரள வைத்தவர், செண்பகராமன் தான்...' என்றேன்.
அப்போது, உள்ளே வந்த, 'திண்ணை' நாராயணன், 'செண்பகராமன் பற்றி இன்னொரு விஷயமும் இருக்கு, சொல்லட்டுமா...' என்று ஆரம்பித்தார்:
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டில் பிறந்து, ஜெர்மனியில் வாழ்ந்து, ஹிட்லரை நேரில் சந்தித்து பேசியவர், செண்பகராமன். இரண்டாம் உலகப் போரில், ஹிட்லரின், 'எம்டன்' என்ற நீர்மூழ்கி கப்பலில் உதவி கேப்டனாக இருந்தார், செண்பகராமன்.
அவரிடம் விலை உயர்ந்த வேட்டை நாய் ஒன்று இருந்தது. அது, அவருக்கு மெய்காப்பாளன் போல எப்போதும் உடன் இருக்கும். ஒருநாள், அவரை பேட்டி எடுத்தபோது, 'இந்த நாய் உங்களின் மெய்காப்பாளனா...' என்று கிண்டலாக கேட்டுள்ளார், ஒரு நிருபர்.
'ஆம்... யாராவது என்னை கொல்ல நினைத்து துப்பாக்கியை எடுத்த அடுத்த வினாடி, அவர்களின் குரல்வளையை இது கவ்வி விடும்...' என்றார்.
உடனே, அந்த நிருபர் சட்டென்று ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து அவர் முன் நீட்ட, அந்த நாயோ பேசாமல் அவரையே பார்த்தபடி படுத்திருந்தது.
நிருபர் சிரித்தபடி, 'இதுதான் உங்களை பாதுகாக்கிற நாயோட லட்சணமா...' என்றார்.
செண்பகராமன் மென்மையாக, 'நண்பரே... நீங்கள், என்னை நோக்கி நீட்டிய துப்பாக்கியில் குண்டு இல்லை தானே...' என கேட்டார்.
'ஆம், உண்மை தான்...' என்று சங்கடத்துடன் நிருபர் சொல்ல, 'அதனால், நீர் பிழைத்தீர். இந்த நாயின் மோப்பத் திறன் வியக்கத்தக்கது. துப்பாக்கி தோட்டாவின் வாசனையை இது நன்கு அறியும். தோட்டா வாடை காற்றில் பரவாததால், இந்நாய் அமைதி காத்தது...' என்று, செண்பகராமன் சொல்லவும், வாயடைத்து நின்றார், நிருபர்.
- இவ்வாறு நாராயணன் கூறியதும், 'செண்பகராமன் பயணித்த, 'எம்டன்' கப்பலின் பெயரும் இன்றும் நிலைத்திருக்கிறது அல்லவா?
'வீராதி வீரன், சூராதி சூரனை குறிப்பிட, 'அவன் பெரிய எம்டன்டா...' என்று சொல்வோமே!' என்றேன்.
'சரியா சொன்னே மணி... சுதந்திரம் வாங்கி, 75 ஆண்டுகள் ஆயிற்று... இதெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?' என்று, உதவி ஆசிரியைகளுக்கு ஒரு, 'கொட்டு' வைத்தார்.
ப
'பழைய கணக்கு' என்ற நுாலில்,பத்திரிகையாளர் சாவி எழுதியது இது:
பல ஆண்டுகளுக்கு முன், கோவையில் நடைபெற்ற, ஜி.டி.நாயுடுவின் மகன் கோபால் திருமணத்திற்கு அழைத்திருந்தார். நானும் போயிருந்தேன்.
என்னை கண்டதும், விருந்து தயாராவதை பார்வையிட, சமையல்கட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே, சமையல் ஏக தடபுடலாய் நடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் கூடை கூடையாய் அப்பளங்களை பொரித்து தள்ளிக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த நாயுடுவின் முகம் மாறியது. விறு விறுவென்று எல்லா அப்பள கூடைகளையும் குழாயடிக்கு இழுத்துச் சென்று, குழாயை திறந்து விட்டார். சில வினாடிகளில் அவ்வளவு அப்பளங்களும் நனைந்து ஊறி, பஞ்சாய் அமுங்கிப் போயின. அப்புறம் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார், நாயுடு.
'இவ்வளவு அப்பளங்களையும் தண்ணீரில் நனைத்து வீணாக்கி விட்டீர்களே...' என்பது போல், நான், 'ச்சூ' கொட்டினேன்.
'ஒருசமயம், கேரள மாநிலம், பாலக்காட்டில் அப்பளத்துக்கான மாவு தயார் செய்கிற இடத்தை பார்த்தேன். அதிலிருந்து எனக்கு இந்த அப்பளத்தின் மீதே ஒரு வெறுப்பு வந்து விட்டது. அங்கே ஒரு ஆள், தன் அழுக்கு கால்களால் அப்பள மாவை மிதித்துக் கொண்டிருந்தான்.
'அந்த இடமும், சுகாதார கேடான சூழ்நிலையில், ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. அந்த காட்சியை பார்த்தது முதல், 'இனி, கடையில் அப்பளம் வாங்கி சாப்பிடுவதில்லை' என்று முடிவெடுத்து விட்டேன். எனவே தான், 'இந்த கல்யாணத்தில், யாருக்கும் அப்பளம் போடக் கூடாது...' என்று கண்டிப்பாய் உத்தரவு போட்டிருந்தேன்.
'ஆனால், என்னையும் மீறி, வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது செய்திருப்பரோ என்ற சந்தேகம் இருந்தது; அதனால் தான் இங்கு வந்து பார்த்தேன். பார்த்தீங்களா, நான் நினைத்தது போலவே இங்கு நடந்திருக்கிறது...' என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சில காலம் கழித்து, மீண்டும் நாயுடுவின் பங்களாவுக்கு போயிருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் மேஜையிலிருந்த பழத் தட்டிலிருந்து, ஒரு வாழை பழத்தை எடுத்து என்னிடம் கொடுத்து, 'இதைச் சாப்பிட்டு விட்டு, இது என்ன ஜாதி பழம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்...' என்றார்.
சாப்பிட்டுப் பார்த்தேன். ரொம்பவும் ருசியாக இருந்தது.
'ரஸ்தாளி...' என்றேன்.
'உங்க சொந்த ஊர், வட ஆற்காடு மாவட்டமா...' என்று கேட்டார், நாயுடு.
வியப்புடன், 'ஆமாம்; அதெப்படி கண்டுபிடித்தீர்கள்...' என்றேன்.
'இந்த மாதிரி என் வீட்டுக்கு வருகிறவர்களுக்கு எல்லாம் இந்த பழத்தை கொடுத்து சாப்பிடச் சொல்வேன். அவரவர்கள் தங்கள் மாவட்டத்தில் எந்த வகை வாழை பழம் கிடைக்கிறதோ, அந்த பெயரை சொல்லி, அது மாதிரி இருக்கிறது என்பர். அவர்களுக்கு பழக்கமானதால் அப்படி சொல்லி விடுவர். இதிலிருந்தே அவரவர் மாவட்டத்தை கண்டுபிடித்து விடுவேன்...' என்று கூறி, சிரித்தார்.
'அப்படியானால் உண்மையிலேயே இது என்ன ஜாதி...' என்று கேட்டேன்.
'இது, எந்த ஜாதியும் இல்லை. தனி ஜாதி. கோபால் கல்யாணத்தின்போது, அப்பளத்தின் மீது குழாய் தண்ணீர் கொட்டியது ஞாபகம் இருக்கிறதா... தண்ணீரில் ஊறிப்போன அந்த அப்பளங்களை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்து, மூன்றாவது நாள் வெளியே எடுத்தேன்.
'என் தோட்டத்திலுள்ள வாழை மரங்களின் அடிபாகத்தில் துளைப் போட்டு, அதில் ஊறிய அப்பளங்களை போட்டு அடைத்தேன். ஆச்சரியப்படும் அளவுக்கு மரம் வேகமாக வளர்ந்து, பழங்கள் பெரியதாகவும், ரொம்பவும் ருசியாகவும் இருக்கின்றன. அந்த பழம் தான் நீங்கள் இப்போது சாப்பிட்டது.
'இப்படித்தான் நான் எதையாவது செய்யப் போக, அதுவே, ஒரு புதுமை கலந்த விந்தையாகி விடுகிறது. உடனே, 'தாவர விஞ்ஞானி நாயுடு' என்று, உங்களை போன்ற பத்திரிகை நண்பர்கள், எனக்கு பட்டம் சூட்டி விடுகின்றனர்...' என்றார், நாயுடு.
