தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஊர் கூடித் தேர்! (11)

ஊர் கூடித் தேர்! (11)

ஊர் கூடித் தேர்! (11)


PUBLISHED ON : பிப் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிகர் விக்ரமை, போலீஸ் ஏன் பிடித்தது?

குவைத்தில், ஈராக்கின் மிரட்டலும், அச்சுறுத்தலும் இருந்ததால், செக்யூரிட்டி கெடுபிடி அப்போது அதிகம்.

யாராக இருந்தாலும், வெளியே வருபவர்களிடம் அடையாள அட்டை இல்லாவிட்டால் போலீஸ் பிடித்து போய் விடும்.

விசிட்டர் விசாவில் வருபவர்களின் கையில் எப்போதும் ஒரிஜினல் விசாவும், பாஸ்போர்ட்டும் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் போலீஸ் பிடிக்கும்.

இதனால், விக்ரமிடம், 'நாங்க இல்லாம தனியா வெளியே போகாதீங்க...' என்று விளக்கியிருந்தோம்.

ஒரு அதிகாலை வேளையில் அவர் பாட்டுக்கு, 'ஜாகிங்' போய் திரும்பும்போது, போலீசார், அரபி மொழியில் கேட்க, இவர் ஆங்கிலத்தில் பதிலளிக்க... கொஞ்ச நேர கண்ணாமூச்சி.

விக்ரமின் நல்ல காலம் பாருங்கள்...

முந்தின நாள் அவரிடம், 'உங்களது பேட்டியும், படங்களும், பிரபல ஆங்கில தினசரியில் அன்று வெளியாகியுள்ளது, பாருங்கள்...' என்று சொல்லியிருந்தேன்.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்தது ஞாபகம் வரவே, சட்டென அதை பிரித்துக் காட்டியுள்ளார், விக்ரம்.

'அவார்ட் நடிகரா...' என்று கை கொடுத்து, பாராட்டி, அவரை அனுப்பியுள்ளனர்.

திருநாவுக்கரசர் எம்.பி., செய்த, 'ட்ரிக்!'

பாட்டுக்கு பாட்டு புகழ், அப்துல் ஹமீதுவின், 40 ஆண்டு சேவைக்கு

பாராட்டு விழா குவைத்தில் ஏற்பாடு செய்து, அதற்கு, திருநாவுக்கரசர் எம்.பி.,யை அழைப்பதென்று முடிவாயிற்று.

லேனாவின் அறிமுகத்தில், எந்தவித கவுரவமும் பார்க்காமல் போனிலேயே அழைப்பை ஏற்றுக் கொண்டவர், 'குவைத்துக்கு பிசினஸ் கிளாஸ்ல வந்து போக விமானக் கட்டணம் எவ்ளோ...' என்றார்.

'எதுக்கு சார்...'

'இல்லே... விசா, டிக்கெட் எல்லாம் எடுக்கணுமே; பட்ஜெட் பார்த்தேன்...'

'அதெல்லாம் உங்களுக்கு ஏன்...'

'அப்புறம் யார் எடுப்பார்களாம்...'

'எல்லாம் எங்க பொறுப்பு. நீங்க வந்து போனால் போதும்...' என்றதும், அவருக்கு நம்ப முடியவில்லை. போகிற இடமெல்லாம் கொடுத்து கொடுத்து பழக்கப்பட்டவருக்கு, இது புது அனுபவம் போல. இவரிடம் தொகுதி மக்கள், ஏன் விசுவாசமாய் இருக்கின்றனர் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

திருநாவுக்கரசர், குவைத்தில் வந்திறங்கியதுமே, அவர் தங்கியிருந்த ேஹாட்டலில் ஏகப்பட்ட கூட்டம். தென் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களின் ஆக்கிரமிப்பு. நள்ளிரவு, 1:00 மணி வரை, முகம் சுளிக்காமல் அனைவரையும் சந்தித்து, நலம் விசாரித்து அனுப்பினார்.

நிகழ்ச்சியிலும், துவக்கத்திலேயே அவர் ஆஜராகி, பிரன்ட்லைனர்ஸ் புத்தகத்தின் ஆறாம் பகுதியை வெளியிட்டார். சிறப்புரைக்கு பின், 'ஊரில், பாட்டுக்கு பாட்டு கேட்க எங்க நேரம்... இங்கேயாவது ரசிக்கிறேனே...' என்று, நள்ளிரவில் முடியும் வரை அமர்ந்திருந்தார்.

அப்புறம், திருநாவுக்கரசருடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி. அப்போது, வேலை, விசா என நம்பி ஏமாந்து, வேலை, சம்பளமில்லாமல் கஷ்டப்பட்ட அப்பாவி தொழிலாளர்களுக்காக, இந்திய துாதுவரை சந்தித்து, நடவடிக்கையும் எடுக்க வைத்தார்.

அவரது அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ். மனிதரிடம் கோபத்தையே பார்க்க முடியாதது ஆச்சரியம். சொந்த தொகுதி என்றில்லை, டில்லியிலும் கூட இவரை பார்க்க எப்போதும் கூட்டம்.

டில்லியில் பிற மாநில - பிற கட்சி எம்.பி.,க்களிடமும் இவரது வீட்டு செட்டி நாட்டு சமையல் பிரசித்தம். 'பிரன்ட்லைனர்ஸ் அடுத்தடுத்த விழாக்களுக்கு, வட மாநில தலைவர்கள் யாரையாவது ஏற்பாடு செய்து தர முடியுமா...' என்று கேட்டேன்.

'யார் வேணும்ன்னு சொல்லுங்க. செலவெல்லாம் நீங்க பார்த்துக்கும்போது, வந்து போக கசக்குமா என்ன...' என்று சிலரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், அருண்ேஷாரி மற்றும் சத்ருஹன் சின்ஹா. அதன்பின், தமிழகத்திலும் என் புத்தக வெளியீடு என்றால், உடனே அவரிடம் பச்சைக்கொடி.

மணிமேகலை பிரசுரத்தின் என் ஆறு நுால்கள் வெளியீடும், அறக்கட்டளைக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியும் திருச்சியில் நடந்தது.

அதற்கு திருநாவுக்கரசர் தான் தலைமை.

'உங்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யணும்...' என்றேன்.

'அழைப்பிதழ் தயாரானதும் அனுப்பி வையுங்க போதும்...' என்றார்.

'உங்களுக்கு எந்த ஹோட்டலில் அறை... பயணம் ரயிலா, இல்லை விமானமா...' என்றேன்.

'இது என்ன குவைத்தா... எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க விழா ஏற்பாடுகளை கவனியுங்க...' என்றார்.

அவர் உறுதிப்படுத்தியிருந்தாலும் கூட, அதே நாளில் மதுரை, புதுக்கோட்டை என பயணத் திட்டம் வைத்திருந்ததை பார்த்து, வருவாரோ, மாட்டாரோ என்ற ஐயம் இருக்கவே செய்தது.

ஆனால், சரியாக வந்தார். அதோடு வழக்கம்போல, அறக்கட்டளைக்கு அவர் சார்பிலும் ஒரு தொகை கொடுத்து, அசத்தினார்.

இப்பேர்பட்ட திருநாவுக்கரசர், அரசியல் அல்லாத ஒரு விஷயத்துக்காக... அரசியல் செய்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

எங்கே, எப்போது, எதற்காக யாரை கவிழ்க்க அந்த அரசியல் செய்தார்?

— தொடரும்

என். சி. மோகன்தாஸ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us