PUBLISHED ON : மார் 20, 2022

பா - கே
சனிக்கிழமை மாலை...
சென்னை பெசன்ட் நகர், 'பீச்' நிரம்பி வழிந்தது.
'பீச்' நண்பர்கள் அனைவரும் குழுமியிருக்க, காரில் அமர்ந்தபடி, 'கலர்' பார்த்துக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.
'மணி... 'பீச்' சுண்டல் சாப்பிட்டு நாளாச்சுப்பா... அதோ ஒரு பெரியவர் சுண்டல் வித்துட்டு வர்றாரு பாரு... வாங்குப்பா...' என்றார்.
அந்த பெரியவரை அருகில் அழைத்து, அனைவருக்கும் சுண்டல் கொடுக்கச் சொன்னேன்.
'இரண்டு வருஷமா வியாபாரமே இல்லப்பா... இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வர்றேன்...' என்றவரிடம், 'எவ்வளவு ஆச்சு?' என்றேன்.
கணக்கு போட்டு சொல்ல, 200 ரூபாய் நோட்டு ஒன்று எடுத்துக் கொடுத்தேன்.
'சில்லரை இல்லையேப்பா...' என்றார்.
மீதியை அவரையே வைத்துக் கொள்ள சொல்லி அனுப்பி வைத்தேன்.
சுண்டல் தின்றபடி, நாட்டு நடப்புகளை காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர், நண்பர்கள்.
இருட்ட துவங்கியது. வெளியிலிருந்த தன் பார்வையை, தன் மொபைல் போன் பக்கம் திருப்பினார், மாமா.
'பீச் காத்து வாங்க வந்துட்டு, காரினுள் உட்கார்ந்திருந்தா எப்படி? வெளியே வாங்க, மாமா...' என்றேன்.
'வேண்டாம்பா, இந்த அண்ணாச்சி ஏடாகூடமா எதையாவது சொல்ல, எனக்கு, 'டென்ஷன்' ஆகும்...' என்றவர், 'மணி, இந்த, 'மெசேஜை' பாரேன்...' என்று மொபைல் போனை என்னிடம் கொடுத்து, படிக்க சொன்னார்.
அதில் இருந்த சாராம்சம் இதுதான்:
* ஒரு பனை ஓலை குடிசை வாசலில் இரண்டு வேப்ப மரங்கள் வெளியே ஒரு விசுவாசமான நாய்
* பால் கறக்கும் ஒரு பசு மாடு; இரண்டு உழவு எருதுகள் ஒரு ஏர், இரண்டு மண் வெட்டி பத்து ஆடுகள், ஒரு சேவல், ஐந்து கோழி மற்றும் 30 குஞ்சுகள்
* இரண்டு ஏக்கர் நிலம். அதிலொரு கிணறு சுற்றிலும், 10 தென்னை மரங்கள். ஒரு முருங்கை மற்றும் கருவேப்பிலை மரமும்; பக்கத்தில், 10 வாழை மரம். அடுத்து, ஒரு புளிய மரம்
* பிரண்டை கொடியும், துாதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம். விளை நிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீரைச் செடிகள்
* குடிசைக்கு பின்புறம் மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய் செடிகள். மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும், சோளம், கேழ்வரகும் தானிய குதிருக்குள் சேமிக்கப்படும்.
என்று பெரிய பட்டியலே இருந்தது.
நான் படித்து முடித்ததும், 'யாரையும் எதிர்பாராமல் பேரரசனை போல் ஆரோக்கியத்துடன் அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்கலாம். உலகின் சிறந்த தற்சார்பு பொருளாதாரமும் இதுதான்...' என்றார், மாமா.
'ஓய் லெஞ்சு... இதெல்லாம் உனக்கு ஒத்து வராதுய்யா...' என்று கடுப்பேற்றினார், அண்ணாச்சி.
சண்டைக் கோழி போல், மாமா சிலுப்பிக் கொள்வாரோ என்று பயந்தேன். நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை.
'பரபரப்பான சென்னை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு போனவர்களால், கிராமத்துக்கு சென்று வாழ முடியுமா...' என்ற கேள்வி மனதில் எழுந்தது.
'உங்களது பதில் என்ன?' எனக்கு எழுதுங்களேன்.
ப
மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும், வாரமலர் இதழின் நீண்ட கால வாசகருமான மதுரையை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் எழுதிய கடிதம் இது...
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ, அவசியம் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டுள்ளார்.
அது:
* திருமணமான உங்கள் மகன் அல்லது மகளுடன் வசிப்பதைத் தவிர்த்து, அவர்கள் வீட்டின் அருகில் தனியாக வசிக்கவும். இரு குடும்பத்தாரும் சுதந்திரமாக இருங்கள். ஆலோசனைகள் கேட்டால் மட்டும் கூறுங்கள்
* மனைவியை முன்பை விட இப்போது கூடுதலாக நேசியுங்கள்
* உடல்நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை அவசியம்
* சேமிப்பு பணத்தை பத்திரப்படுத்துங்கள். வட்டி அதிகம் தருவதாக ஆசை காட்டும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களைத் தவிருங்கள்
* மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு, விசேஷ தினங்களில் பரிசுகளை வழங்கி மகிழ்வியுங்கள்
* உங்கள் நலம் விரும்பிகள் அனைவரிடமும் நல்ல தொடர்பில் இருங்கள்
* பலரது பெயர்கள், தொலைபேசி எண்கள் மறந்து போகாமலிருக்க, டயரியில் குறித்து வையுங்கள்
* ஆணாக இருப்பின் தினமும், 'ஷேவ்' செய்தும், வெளியே செல்கையில், 'பளிச்' என்று உடுத்திக் கொள்ளுங்கள்
* ஹோட்டல்களில் சாப்பிடுவதை இயன்ற வரை தவிருங்கள்
* வீட்டில் அழைப்பு மணி இருக்கட்டும். உங்களுக்கென வாக்கிங் ஸ்டிக், டார்ச் லைட், விசில் ஆகியவற்றை கண்டிப்பாக வைத்துக் கொள்ளவும்
* வீட்டு வேலைக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பண விஷயங்களை அவர்கள் முன்னிலையில் பேச வேண்டாம்
* வங்கி மற்றும் இதர கணக்குகளுக்கு முறையாக, 'நாமினேஷன்' தாக்கல் செய்யுங்கள்
* உயில் எழுதி அதைப் பதிவு செய்து விடுங்கள். உங்கள் முதலீடுகள், வாங்கிய கடன்கள், வரவேண்டிய பாக்கிகள் அனைத்தையும், 'அப்டேட்' செய்வதுடன், மனைவியிடம் சொல்வதும் அவசியம்
* வயது 60ஐ தாண்டும்போது கல்லறையை நோக்கி அடியெடுத்து வைப்பதாக நினைத்து, ஒவ்வொரு நாளும் இறைவன் அளித்த கொடையாக எண்ணி, அவனைத் துதிக்கவும். நல்லதை எண்ணி, நல்லனவற்றையே செய்து வாருங்கள்
* வயது, 60க்குப் பிறகு உங்களைப் பற்றிய சிந்தனையிலேயே நீங்கள் இருப்பது இயல்பு தான். அதுபோல, 'வயது, 80ஐத் தாண்டிய பிறகும், இவன் ஏன் இன்னும் இருக்கிறான்...' என, உங்களைச் சுற்றி இருப்போர் நினைப்பதும் இயல்பு தான். எதையுமே, 'டேக் இட் ஈசி'யாக எடுத்துக் கொண்டால், எஞ்சிய காலம் இனிமையாகக் கழியும்.
- இப்படி எழுதியுள்ளார்.
நல்ல விஷயம்தானே...
பணி ஓய்வு பெற்ற வாசகர்களே!
