தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஊர் கூடி தேர்... (16)

ஊர் கூடி தேர்... (16)

ஊர் கூடி தேர்... (16)


PUBLISHED ON : மார் 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட இயக்குனர், எஸ்.பி.முத்துராமன் ஊரில் இருந்தார் என்றால், என் சார்பு விழாக்கள் அனைத்திற்கும் வந்து வாழ்த்திவிடும் பேருள்ளம் கொண்டவர்.

'தேசிய விருது பெற்ற நடிகர் விக்ரமுக்கு, நாங்கள் குவைத்தில் எடுத்த பாராட்டு விழாவிற்கு வர வேண்டும்...' என்று, எஸ்.பி.முத்துராமனை கேட்டதும், உடனே சம்மதித்தார்.

'எனக்காக ரொம்ப சிரமப்படாதீங்க. ஜாஸ்தி செலவு வேணாம். என் உறவினர் வீட்டிலேயே தங்கிக்கறேன்...' என்று சொல்லி விட்டார்.

அது, விக்ரமின் விழா என்பதால், அனைத்தும் அவரை முன்னிலைப்படுத்தியே அமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், அந்த நிகழ்வில் வயது வித்தியாசம் பாராமல் இளைஞர்களையும் எஸ்.பி.முத்துராமனின் பேச்சு கட்டிப் போட்டது.

பிறகு, அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தனியாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியிலும் சளைக்காமல் பதிலளித்தார்.

என்னதான் திருப்தி இருந்தாலும், சினிமா சினிமா என்று தன் வாழ்வு தொலைந்து போயிற்று என்றும், அதனால், தன் பிள்ளைகளை வேறு துறைகளுக்கு திருப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

'எனக்கு, தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகர்கள், மனைவி எல்லாரும் நல்லபடியாக அமைந்ததால், லட்சிய வாழ்வு கிடைத்தது. ஆனால், 24 மணி நேரமும் சினிமாவுக்காக என் இளமையை தொலைத்தேன். என் மனைவிக்கு நல்ல கணவனாக நான் இருந்தேன் என்று சொல்ல முடியாது.

'தொழில், லட்சியம், சம்பாத்தியம் முக்கியம் என்றாலும், அதைவிட குடும்பம், மனைவி, பிள்ளைகள் முக்கியம். அதை நம்மில் பலரும் உணர்வதில்லை. என் மனைவிக்கு தேவைப்பட்டபோது, நான் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை.

'பாண்டியன் படம் முடிந்து அவளை சிங்கப்பூருக்கு அழைத்துப் போவதாக சொல்லியிருந்தேன். ஆனால், அது முடியும் முன்பே அவளது வாழ்வு முடிந்து விட்டது...

'என் மனைவிக்கு தேவைப்பட்டபோது, நான் அவளுடன் இல்லாமல், 'பிசி'யாய் இருந்தேன். ஆனால், இப்போது மனைவியின் துணை தேவைப்படும்போது, அவள் என்னுடன் இல்லை. தனி மரமாக காய்கிறேன்.

'இளைஞர்களே... பணம் எப்போது வேண்டுமானாலும் வரும், போகும். இளமையும், குடும்பமும் அப்படியில்லை. வாழ வேண்டிய வயதில் வாழுங்கள்...' என்று உருக்கமாக பேசினார், எஸ்.பி.முத்துராமன்.

நல்லி குப்புசாமியின் வியாபாரம், கலை ஆர்வம் மற்றும் தொண்டுகளை அறியாதவர்கள் இருக்க முடியாது.

இலக்கியம், இயல், இசை, நாடகம் மற்றும் சங்கீதம் பக்கமும் கவனிப்பு செலுத்துவதில் முதலிடம் வகிப்பவர். நம் கலாசார அர்ப்பணிப்புக்கு செய்யும் பணிகள் ஏராளம். படிப்பு, மருத்துவம், அறக்கட்டளைக்கு அவர் செய்வது இன்னும் அதிகம்.

நல்லி குப்புசாமியை, புகைப்பட கலைஞர் யோகா மூலம் தான் அறிவேன். அடுத்து, அதை வலுப்படுத்தியது துார்தர்ஷன் முன்னாள் இயக்குனர், ஏ.நடராஜன்.

நல்லி குப்புசாமிக்கு, 2003ல், 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டிருந்தது. இந்திராவின் மருமகளான மேனகா தலைமையில் நடக்கவிருந்த, 'பிரன்ட்லைனர்சின்' விழாவில் வைத்து அவரை கவுரவிக்க விரும்பினேன்.

நல்லி குப்புசாமிக்கு, பாராட்டு விழா எனும்போது, தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய் விடுமோ என்று மேனகா நினைப்பாரோ என்று பயந்தோம். ஆனால், மேனகா சந்தோஷமாக கலந்துகொள்ள, விழா மிக சிறப்பாக நடந்தது.

அதன்பின், என் பல புத்தக வெளியீடுகள், நல்லி குப்புசாமி, நடராஜன், யோகா இணைப்பில் பிரம்மகான சபா மூலம் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

யதார்த்தமாக பேசுவார், குப்புசாமி.

எந்த நிகழ்ச்சி என்றாலும், அது சம்பந்தமான விஷயங்களை சேகரித்து இயல்பாய், சகஜமாய் பேசி அனைவரையும் கவர்ந்து விடுவார்.

சாந்தம், மனிதாபிமானம், எளிமை, பண்பாடு, இவற்றுடன் நேரம் தவறாமை, இவரது சிறப்பு குணங்கள். பல நிகழ்ச்சிகளில் விருந்தினராக சொன்ன நேரத்திற்கு போய் நிற்பார்.

யாருடைய உதவியும், ஒத்தாசையும் இல்லாமல் ஒருவர் வளர்ந்துவிட முடியாது. இங்கே நான் நன்றி நவில வேண்டிய, 'லிஸ்ட்' பெரிது.

எழுத்துலகில் ஏற்றி விட்டவர்களை மறக்கலாமா, நேரம் கிடைக்கும்போது அவர்களையும் நினைவு கூர்ந்துவிட வேண்டும்.

என் குடும்பத்தினர். குறிப்பாய் என் மனைவி அருள்மொழி, எனக்கு மிகப்பெரிய பக்கபலம் என சொல்லலாம்.

என் எழுத்து வேட்கைக்காக அவரிடம் ரொம்பவும் குரூரமாய் நடந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. வேலைக்கு அப்பாற்பட்டு ஏதாவது சாதித்திருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் மனைவி, சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பம் தான்.

சின்ன சின்ன பேட்டிகள், சிறுகதைகள் என வளர்ந்து வரும்போது, ஒரு நாவலாவது பிரசுரமான பின்தான் திருமணம் என்பது, என் நிபந்தனையாக இருந்தது. அடுத்து, தொடர்கதை வாய்ப்பு கிடைத்து எழுதிய பின்பு தான் குழந்தை என்பது போன்ற திமிரான வைராக்கியங்கள் கொண்டிருந்தேன்.

நண்பர்கள் மனோகர், ரெங்கராஜ், மதி, என் சகோதரர்கள், பி.வெங்கட்ராமன்; என் எழுத்துக்கு உரு கொடுத்த ஆசிரியர் சாவி, உயிர் கொடுத்த, 'தினமலர்' அந்துமணி, ஊக்கம் கொடுத்த ஆசிரியர் மணியன்,

பாவை சந்திரன், 'குமுதம்' ப்ரியா கல்யாண ராமன், லேனா - ரவி தமிழ்வாணன்.

கலைமாமணி யோகா, எஸ்.வி.சேகர், மாலன், மறைந்த, துார்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராஜன், நல்லி குப்புசாமி, டாக்டர் சீதாராமன், ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், கே.ஜி.ஜவஹர், ஜி.அசோகன் என, இப்படி இன்னும் பலருடன், 'லிஸ்ட்' தொடரும்.

'எனக்கு உழைக்க தெரியும் - பிழைக்க தெரியாது. எனக்கு சங்கீதத்தை விட இங்கிதம் அதிகம் தெரியும். எனக்கு எலெக்ட்ரிசிட்டியை விட பப்ளிசிட்டியில் அதிக பயம்...' குவைத் வந்தபோது, ஒரு பிரபலம் இப்படி, 'பஞ்ச்' அடித்தார். அது யார் தெரியுமா?

தொடரும்

என். சி. மோகன்தாஸ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us