PUBLISHED ON : மார் 20, 2022

காப்பி அடிக்க வேண்டாமே!
திருமணத்துக்கு முன், மணமக்களை வைத்து, 'ப்ரீ - வெட்டிங் ஷூட்' என்றும், திருமணத்துக்கு பின், 'போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட்' நடத்துவதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
காடு, மலை, ஏரி, கடல் என, அலைந்து திரிந்து, மணமக்களை போட்டோ எடுப்பர். இந்த, 'போட்டோ ஷூட்'டில், மலையிலிருந்து அல்லது கடலில் விழுந்து இறந்து போன மணமக்களும் உண்டு.
கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளும், 'போட்டோ ஷூட்' தற்போது பிரபலமாகி வருகிறது. சில நடிகையர், விளம்பரத்திற்காக எடுத்துக் கொண்ட, 'போட்டோ ஷூட்' இப்போது குடும்ப பெண்களையும் தொற்றியுள்ளது.
சமீபத்தில், சமூக வலைதளம் ஒன்றில் காணொளி ஒன்றை பார்த்தேன்...
அதில், ஒரு கர்ப்பிணி பெண்ணை விதவிதமான கோணங்களில் புகைப்பட கலைஞர் படமெடுக்க, அந்த பெண்ணின் கணவர், இந்த, 'போட்டோ ஷூட்'டை தன் மொபைலில் படம் எடுத்து, சமூக வலைதளமொன்றில் போட்டிருந்தார்.
தாய் - சேய் நல மருத்துவர் ஒருவரிடம், இப்படங்களை காண்பித்து கேட்டபோது, 'விதவிதமான கோணங்களில், 'போஸ்' கொடுக்கும் போது, தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தை சுற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
'இதனால், குழந்தையின் உயிருக்கு அல்லது தாய் - குழந்தை இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். நிறைமாத காலத்தில் இதுபோன்ற, 'போட்டோ ஷூட்'களை தவிர்ப்பது நல்லது...' என்று, தன் கருத்தை பதிவு செய்தார்.
சகோதரிகளே... யாரோ சில நடிகையர் விளம்பரத்திற்காக செய்வதை பார்த்து, காப்பி அடித்து பிரச்னையில் மாட்டிக் கொள்ளாதீர்!
ஜெ. கண்ணன், சென்னை.
உங்க மொபைல் நம்பரை, தெரிந்து கொள்ள!
சமீபத்தில், 'ஆண்ட்ராய்டு' போன் பழுதாகி விட்டதால், வேறு ஒரு போனில், புது, 'சிம்' வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தேன். புதிய நம்பர், சரியாக மனதில் பதியாமல் இருந்தது.
'அவசர தேவைக்கு அழைக்க, என் மொபைல் நம்பர் வேண்டும்...' என்று கேட்டார், சக பெண் ஊழியர்.
'என் புது நம்பர் தெரியாது...' என்றதும், 'இதைக் கூட தெரிந்து வைத்துக்கொள்ளா விட்டால் எப்படி...' என்று, கேலி செய்தனர், நண்பர்கள்.
'என்ன கம்பெனி நெட்வொர்க் சிம் கார்டு...' என்றான், நண்பன்.
'பி.எஸ்.என்.எல்.,' என்றதும், தன் பாக்கெட்டில் இருந்த டைரியை எடுத்து, 'பி.எஸ்.என்.எல்., என்றால், *888# என்ற பட்டனை அழுத்திப் பாருங்க, உங்க மொபைல் எண் வரும்...' என்றான்.
என்ன ஆச்சரியம், அவன் சொன்னது போலவே, *888# அழுத்தியதும், 'சிம் நம்பர்' திரையில் தெரிந்தது.
அதுபற்றி அவனிடம் கேட்டபோது, 'நானும் இதுபோல 'சிம் கார்டு' நம்பர் தெரியாமல் அவஸ்தைபட்டேன். மொபைல், 'ரீ - சார்ஜ்' கடையில் கேட்ட போது, ஏர்டெல் என்றால், *282# வோடபோன் என்றால், *199# என்று, 'டைப்' செய்யுமாறு கூறினர்...' என்றான்.
இது, அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.
ஏ.எஸ். யோகானந்தம், ஈரோடு.
போட்டோ ஆல்பமும், சேர்ந்த உறவும்!
சில நாட்களுக்கு முன், வீடு மாறும்போது, கடந்த, 30 ஆண்டுகளில் நடந்த எங்கள் வீட்டு விசேஷங்களின் போது, உறவினர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்பட ஆல்பங்கள் கண்ணில் பட்டன. அதையெல்லாம், 'டிஜிட்டல்' மயமாக்கி பாதுகாக்க, என் மொபைல் கேமராவில் காப்பி செய்தேன்.
அவைகளை, எங்கள் உறவினர்களின் குடும்ப வாரியாக பிரித்து, அந்தந்த உறவினர்களுக்கு 'வாட்ஸ் - ஆப்' மூலம் அனுப்பினேன். இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ந்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
என் துாரத்து சொந்தக்காரப் பெண், அவளது அண்ணன் தம்பிகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு, பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்திருக்கிறாள்.
அவள், நான் அனுப்பிய குடும்ப புகைப்படங்களைப் பார்த்ததும், 'அடடா... சிறு வயதில் நாங்கள் எல்லாம் எவ்வளவு பாசமாக இருந்திருக்கிறோம். அல்ப விஷயத்திற்காக இத்தனை ஆண்டுகள் உறவே விட்டுப்போய் விட்டதே...' என்று மிகவும் நெகிழ்ந்து, அவளது சகோதரர்களின் தற்போதைய தொலைபேசி எண்களைக் கேட்டு வாங்கியுள்ளாள்.
அவர்களிடம் தொடர்பு கொண்டு மனம் விட்டுப் பேசியதில், அனைவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து, சந்தோஷமாகி உள்ளனர். அவளின் சகோதரர்களும் எனக்கு போன் செய்து, நன்றி தெரிவித்தனர்.
பழைய நினைவுகளை பாதுகாப்பதிலும், உறவுகளை புதுபிப்பதிலும் புகைப்பட ஆல்பம் பெரும் பங்கு வகிப்பது, இதன் மூலம் நிரூபணமாகியது.
கே. வெங்கட்ரமணி, சென்னை.
