PUBLISHED ON : மார் 20, 2022

ஆண்டில் ஒரே நாள், அதுவும் ஐந்து மணி நேரம் மட்டுமே பக்தர்களுக்காக திறக்கும் கோவில் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? அதுமட்டுமல்ல, இங்கே இன்னொரு அதிசயம் என்னவென்றால், மார்ச் அல்லது ஏப்ரலில் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரியின் போது, இந்தக் கோவிலிலுள்ள விளக்கு எண்ணெயின்றி தானாகவே எரியும்.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து, 94 கி.மீ., துாரத்தில் கரியாபண்ட் மாவட்டம் இருக்கிறது. இங்கிருந்து மொஹிரா மலைப்பாதையில், 12 கி.மீ., சென்றால், நிரை என்ற கிராமம் வரும். இவ்வூரில், விராஜித் அம்மன் கோவில் இருக்கிறது.
'விராஜித்' என்றால், 'புகழ் பெற்றவள்' என, பொருள். இந்தக் கோவில் சைத்ர நவராத்திரியன்று காலை, 4:00 மணி முதல் 9:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள், வளர்பிறை பிரதமை முதல் ராமநவமி வரை, இந்தக் கோவிலுக்குள் இருக்கும் விளக்கு தானாக எரிய ஆரம்பிக்கும். நவமி திதி முடிந்ததும் அணைந்து விடும். இதை யாரும் ஏற்றுவதில்லை; எண்ணெயும் ஊற்றுவதில்லை.
இதற்கான காரணம் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த தனித்துவம் காரணமாக, இந்த அம்பாளுக்கு, விராஜித் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மற்றொரு விசேஷம் என்னவெனில், இங்கே ஆண்கள் மட்டுமே செல்ல முடியும். பெண்கள் இங்கு சென்றால், அவர்களுக்கு கடும் சோதனைகள் ஏற்படும் என நம்புகின்றனர். இதனால், அவர்கள் அங்கு செல்வதில்லை.
இந்தக் கோவிலுக்கு தேங்காயும், பத்தியும் மட்டுமே காணிக்கைப் பொருளாக பக்தர்கள் வழங்க முடியும். குங்குமம், செந்துாரம், கையில் கட்டும் கயிறு, திருநீறு போன்றவற்றை காணிக்கையாகவும் வழங்க முடியாது; பிரசாதமாகவும் அவற்றை தருவதில்லை.
இவ்வாண்டு ஏப்., 2ல், சைத்ர நவராத்திரி துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. ஏப்., 2ல் கோவில் திறக்கும் ஐந்து மணி நேரமும் கடும் கூட்டமிருக்கும். ஏப்., 3 முதல் 10ம் தேதி வரை கோவிலுக்கு வெளியே நின்று, தானாக எரியும் விளக்கை மட்டும் தரிசிக்கலாம்.
சென்னையில் இருந்து ராய்ப்பூர் 1,200 கி.மீ., திங்கள், வியாழக் கிழமைகளில் ரயில் உண்டு; விமானமும் இருக்கிறது.
தி. செல்லப்பா
