தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

கோவையில், பள்ளி ஆசிரியையாக இருப்பவர், என்னுடைய தீவிர வாசகியும் கூட. சமீபத்தில், பணி நிமித்தமாக, சென்னை வந்தவர், என்னை சந்திக்க, அலுவலகம் வந்திருந்தார்.

எடுத்த உடனேயே, 'என்னமோ மணி... பிரச்னை எந்த ரூபத்தில் வரும் என்றே சொல்ல முடியல...' என்று ஆதங்கப்பட்டார்.

'என்னாச்சு மேடம்... ரொம்ப, 'டென்ஷன்' ஆக இருக்கீங்க. ஸ்கூலில் ஏதாவது பிரச்னையா?' என்றேன்.

'அதெல்லாம் ஒண்ணுமில்ல மணி... நாடு போற போக்கை நினைச்சு தான் கவலையா இருக்கு. இப்ப நான் சொல்லப் போற விஷயத்தை, பா.கே.ப., பகுதியில் நிச்சயம் எழுதணும்...' என்ற பீடிகையோடு சொல்ல ஆரம்பித்தார்:

ஒருநாள் மாலை, கடை வீதிக்கு சென்று திரும்பி வரும்போது, வழியில் ஒரு வயதான அம்மாள், கூடையில் கொய்யாப்பழம் வைத்து விற்றுக் கொண்டிருந்தார். 'பிரஷ்' ஆக, கண்ணை பறிப்பது போல் இருந்தது.

எனக்கு கொய்யாப்பழம் பிடிக்கும் என்பதால், அவர் அருகில் சென்று, விலை விசாரித்து, 'செங்காயாக எடுத்து கொடும்மா...' என்றேன்.

அந்த அம்மாளும், காயும் அல்லாத பழமாகவும் இல்லாததை எடுத்து, தராசில் வைத்து எடை போட ஆரம்பித்தார். அப்போது, சற்று துாரத்தில், நின்றிருந்த நடுத்தர வயதுள்ள, லுங்கி கட்டிய ஆசாமி ஒருவன், என்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.

முதலில், அசட்டையாக இருந்த நான், தொடர்ந்து அவன் என்னையே நோட்டமிடுவதை அறிந்து, சற்று கலவரமானேன்.

அவனும் பழம் வாங்க வந்து, நான் நீண்ட நேரம் இங்கு நிற்பதால் எரிச்சலுடன் இருக்கிறானோ என்று நினைத்து, 'அம்மா, எனக்கு சீக்கிரமா கொடுங்க. இல்லாவிட்டால், அதோ அங்கு நின்று என்னையே பார்த்தபடி இருக்கும் அந்த ஆளுக்கு கொடுத்த பின், எனக்கு கொடுங்க...' என்றேன்.

மெதுவான குரலில், 'அட... நீ ஒண்ணும் கவலைப்படாதே தாயி... எல்லாம் குடிகார பயலுங்க... 'டாஸ்மாக்'குல பாட்டிலை வாங்கிட்டு, நேரா இங்கு வந்து, கொய்யாக் காய்களை வாங்கிட்டு போவாங்க. முன்னெல்லாம் ஊறுகாயை நக்கிட்டு, சரக்கு அடிப்பானுங்க. இப்ப, கொய்யாக்காயில் மிளகாய் பொடி துாவி, மெல்லுறாங்க...' என்றார்.

'அடடா... இதில் இப்படியொரு வில்லங்கம் இருக்கிறதா... பழமாக வாங்காமல், செங்காயாக வாங்குவதை பார்த்துட்டு, நானும், 'சைடு'காக தான் வாங்குகிறேன் என்று நினைத்து, அப்படி பார்த்தானோ...' என்று உணர்ந்ததுமே, உடல் கூசி போயிற்று.

வாங்கியவைகளை, திருப்பி கொடுத்துடலாமா என்று கூட நினைத்தேன். 'பாவம், இவங்க வியாபாரம் பாதிக்குமே...' என்று, விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்தேன்.

இதேபோல், இன்னொரு சம்பவம் மணி... வீட்டிற்கு விருந்தாளிகள் வர இருந்ததால், அவர்களுக்காக, ஸ்வீட், காரம் வாங்க, பிரபல ஸ்வீட் கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன். தேவையானதை வாங்கிய பின், என் மகனுக்கு காரம் போட்ட கடலை மிகவும் பிடிக்குமே என்று, 200 கிராம் கடலைக்கு, 'ஆர்டர்' செய்தேன். என் பக்கத்தில் நின்றிருந்த ஒரு ஆசாமி, என்னையும், காரக் கடலையையும் வித்தியாசமாக பார்த்தான்.

'இதென்னடா சோதனை... இவனுக்கும் காரக் கடலை பிடிக்குமோ... தேவை என்றால் வாங்கிக் கொள்ள வேண்டியது தானே...' என்று முணுமுணுத்தேன்.

நான் சொன்னது, அவன் காதில் விழுந்ததா தெரியவில்லை. ஆனால், கடை பையனுக்கு கேட்டு விட்டது.

'மேடம்... கேஷியரிடம் பணம் செலுத்த வாருங்கள்...' என்று, என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

எனக்குரிய பில்லை, காசாளரிடம் கொடுத்த அந்த பையன், 'மேடம்... தப்பா எடுத்துக்காதீங்க... காரக் கடலை, குடிகாரர்களின், 'பேவரிட் சைடு - டிஷ்!' அதான், அவர் உங்களை ஒரு மாதிரியாக பார்த்தார்...' என்றான்.

அட கண்றாவியே... குடிகாரர்களுக்கு எதுவானாலும், 'சைடு - டிஷ்' ஆக இருந்துட்டு போகட்டும். அதற்காக, அதை மற்றவர்கள் வாங்கி சாப்பிடுவது தவறா... அப்படி வாங்குபவர்கள், குடிகாரர்களாகதான் இருப்பர் என்பது இவர்கள் எண்ணமா... நீயே சொல்லு மணி...

- என, கூறி முடித்தார், அந்த வாசகி.

'மேடம், காரக் கடலை என்பது, மசாலா வேர்க்கடலையா?' என்றேன்.

'அதில்லை மணி... கடலை பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, நிழலில் காய வைத்து, எண்ணையில் பொரித்து, காரம், உப்பு சேர்த்து செய்வரே... அதுதான்...' என்று விளக்கியவர், மேலும் தொடர்ந்தார்:

இப்படித்தான் மணி... ஒரு காலத்தில், இளம் பெண்கள், 'மெடிக்கல் ஷாப்'பில், 'சானிட்டரி நாப்கின்' கேட்பதற்கு எவ்வளவு சங்கடப்படுவர் தெரியுமா!

'ஷெல்ப்'பில் அடுக்கி வைத்திருப்பதை சுட்டிக் காட்டி கேட்பர் அல்லது வீட்டிலிருந்து கிளம்பும்போதே, ஒரு துண்டு சீட்டில், அதன் பெயரை எழுதி, எடுத்துச் சென்று கடைக்காரரிடம் கொடுப்பர். அவரும் ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி கொடுப்பார்.

அப்படியும், சில விடலை பசங்க, கண்டுபிடித்து, 'பன் - பட்டர் - ஜாம்' என்று, கிண்டல் செய்வர்.

அதுபோன்ற ஒரு தர்ம சங்கடமான நிலை, மீண்டும், நான் கூறிய பொருட்களை வாங்கும்போது வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. விரும்பியது எதையும் சாப்பிடக் கூட விடமாட்டாங்க போலிருக்கே.

இனிமே, குடிகாரர்களின், 'சைடு - டிஷ்' என்னென்ன என்பதை, 'லிஸ்ட்' போட்டு, அறிவித்து விட்டால், நாங்களும் அதையெல்லாம் வாங்குவதைத் தவிர்த்து விடுவோம்.

- என, புலம்பினார், வாசகி.

அப்போதுதான், அலுவலகத்தினுள் நுழைந்த லென்ஸ் மாமா, வாசகி கடைசியாக கூறியதை மட்டும் காதில் வாங்கியவர், 'மேடம்... உங்க, 'வாட்ஸ் - ஆப்' எண்ணை கொடுங்க. 'லிஸ்ட்'டை அனுப்பி வைக்கிறேன்...' என்றார் தடாலடியாக.

அவரை எரித்து விடுவதை போல் முறைத்த வாசகி, 'மணி... லென்ஸ் மாமாவிடம் அதிகம் சேராதே...' என்று கூறி, விடை பெற்றுச் சென்றார்.

வாசகியின் கூற்று பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். எழுதுங்களேன் எனக்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us