PUBLISHED ON : ஏப் 24, 2022

படித்தது
மதிய உணவு இடைவேளைக்கு பின், 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். அதில், ஒரு பக்கத்தில், கட்டுரையும், கோவில் கோபுரம் மற்றும் தமிழக அரசின் முத்திரை சின்னமும் இருந்ததைப் பார்த்ததும், 'இது ஏதோ முக்கிய சமாசாரமாக இருக்கும் போலிருக்கே...' என்று, எழுத்துக் கூட்டி படிக்க, அருகில் இருந்த உதவி ஆசிரியை ஒருவர் உதவிக்கு வந்தார்.
பொன்.வசந்த் என்பவர் எழுதிய அக்கட்டுரையின் சுருக்கம் இதுதான்:
தமிழக அரசின் முத்திரை சின்னத்தில் இடம் பெற்றிருப்பது, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் கோபுரம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரம். இதை வடிவமைத்தவர், ஓவியர்
ஆர்.கிருஷ்ணா ராவ். மதுரையில் மேற்கு ஆவணி மூல வீதியில், ௧௯௧௫ல் பிறந்தவர். இவரது வீடு, மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, 300 அடி துாரத்தில் தான் இருந்தது.
தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான இவர், கூட்டுக் குடும்பத்தில் வசித்தவர். பல இரவுகள், இவர் துாங்கியது வீட்டு மொட்டை மாடியில் தான். அதனால், இவரின் மனதில் மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரம் ஆழமாக பதிந்தது.
கடந்த, 1948ல், முதல்வராக ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் இருந்த போது, சென்னையில் உள்ள அரசு கவின் கலை கல்லுாரியில் முதல்வராக பணிபுரிந்த கிருஷ்ணா ராவிடம், தமிழக அரசின் சின்னத்தை வடிவமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கோவில் கோபுரம், தேசியக் கொடி, அசோக சக்கரத்தில் உள்ள சிங்கம் போன்றவற்றை உள்ளடக்கி, தமிழக அரசின் முத்திரை சின்னத்தை இவர் வடிவமைத்து கொடுத்தார்.
அதில் இடம் பெற்றிருந்தது, மதுரை மீனாட்சி கோவிலின் மேற்கு கோபுரம். இளம் வயதில் கிருஷ்ணராவின் ஆழ்மனதில் பதிந்த அந்த கோபுரமே, ஓவியமாக உருவெடுத்திருந்தது.
தமிழக அரசின் முத்திரை சின்னத்தில், 'சத்தியமேவ ஜெயதே' என்ற சமஸ்கிருத வாசகம் முதலில் இடம் பெற்றிருந்தது. பின், 1967ல், தி.மு.க., ஆட்சியில், 'வாய்மையே வெல்லும்' என்று மாற்றம் செய்யப்பட்டது.
'தமிழகம் மதசார்பற்ற மாநிலம்; கோவில் கோபுரத்தை அரசின் சின்னத்தில் இடம் பெறச் செய்வது சரியா...' என, 1948ல், சென்னை மாகாண சட்டசபையில் கேள்வி எழுப்பினர், சில உறுப்பினர்கள். அதற்கு பதில் அளித்த, அப்போதைய சபையின் முன்னவரான பி.கோபால ரெட்டி, 'அரசின் சின்னத்தில் கோவில் கோபுரம் இடம் பெறுவது, எந்த வகையிலும் மதசார்பற்ற தன்மையை பாதிக்காது. தென் இந்திய கலாசாரத்தை பிரதிபலிப்பதில், கோபுரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், எந்த கோவிலுடையது என குறிப்பிடாமல், கோபுரம் மட்டுமே, முத்திரை சின்னத்தில் இடம் பெறும்...' என்றார்.
கிருஷ்ணா ராவின் ஓவியத்தில் உருவான தமிழக அரசின் சின்னம், ஏப்ரல் 19, 1949ல் அமலுக்கு வந்தது. அப்போது, முதல்வராக பதவி வகித்தவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா.
அரசு முத்திரை சின்னம் குறித்து முடிவு செய்யும் முன், ஹிந்து சமய அறநிலைய துறையில் கமிஷனராக பதவி வகித்து ஓய்வு பெற்ற, பிரபல தமிழறிஞரும், ஸ்ரீவில்லிபுத்துாருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவருமான, ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரை கலந்து ஆலோசித்தது, மாநில அரசு.
முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா, ராஜபாளையத்தை சேர்ந்தவர்.
டி.கே.சிதம்பரநாத முதலியாரின் தாயாரும், மனைவியும், ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர்கள். இரண்டு ஊர்களும் 12 கி.மீ., துாரத்தில் உள்ளவை என்பதாலும், தமிழக அரசின் முத்திரை சின்னமாக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் கோபுரத்தை, சிதம்பரநாத முதலியார் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. அதுவே, இன்றும் நிலைத்து நிற்கிறது.
ஆனால், முத்திரை சின்னத்தை வரைந்த ஓவியர் கிருஷ்ணா ராவின் மகனான கே.ஸ்ரீசந்தர், 'என் தந்தை வரைந்த ஓவியத்தில் இடம் பெற்றிருப்பது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரம் தான். அவரின் மனதில் நீண்ட காலமாக இடம்பெற்றிருந்த கோபுரம் என்பதால், அதையே அவர் பதிவு செய்தார்...' என்றார்.
ஆனந்த விகடன் இதழுக்கு, 1970 மே மாதம் அளித்த பேட்டியில், இதை கிருஷ்ணாராவும் தெரிவித்துள்ளார். 'அரசின் முத்திரை சின்னத்திற்காக வரைந்தது, மதுரை மீனாட்சி கோவில் கோபுரம் தான்...' என்று அதில் அவர் கூறியுள்ளார்.
இதன்பின், 1980ல், தமிழ்நாடு ஓவியம் நுண்கலை குழு வெளியிட்ட இதழ் ஒன்றில், 'மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரத்தை, அரசின் சின்னத்தில் இடம் பெறச் செய்த பெருமை, ராவையே சாரும்...' என்று கூறப்பட்டுள்ளது.
ஓவியர் கிருஷ்ணா ராவ் மறைந்த சில மாதங்களுக்கு பின், 2006 ஜூலையில், லலித் கலா அகாடமி வெளியிட்ட விவரக் குறிப்பு ஒன்றிலும், 'அரசின் சின்னத்தில் இடம் பெற்றுள்ளது, மதுரை கோவில் கோபுரம் தான்...' என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று ஆசிரியர் சித்ரா மாதவனும், அரசின் முத்திரை சின்னத்தில் இடம் பெற்றிருப்பது, மதுரை கோவில் கோபுரம் தான் என்று உறுதி செய்துள்ளார். அதாவது, 'ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் கோபுரமும், மதுரை மீனாட்சி கோவிலின் மேற்கு கோபுரமும் ஒன்று போல தோற்றம் அளித்தாலும், அடையாளச் சின்னமாக்கும் அளவுக்கு மதுரை கோபுரம் தனித்துவமானது...' என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், 'அரசின் சின்னத்தில் இடம் பெற்றுள்ளது, எந்தக் கோவில் கோபுரம் என்பது முக்கியமல்ல. தமிழ் கலாசாரத்தை பிரதிபலிப்பதில், கோவில் கோபுரம் முக்கிய பங்கு வகிப்பதால், அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்...' என்று, திராவிட இயக்கம்
பற்றி தகவல்களை ஆவணப்படுத்திய வரலாற்று ஆய்வாளர் கே.திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
- இப்படி கட்டுரையை முடித்திருந்தார், ஆசிரியர்.
