PUBLISHED ON : ஏப் 24, 2022

எஸ்.ரஜத் - தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழின் பிரபல இதழ்கள் அனைத்திலும், இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய பல கட்டுரைத் தொடர்கள், புத்தகமாகவும் வெளிவந்துள்ளன. இதுவரை, 2,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி, தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர்.
சென்னை, 'பாரி அண்டு கம்பெனி'யில் விற்பனை வரி, வாட் வரி நிபுணராக, பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். 'சென்னை வர்த்தக சபை' என்று அழைக்கப்படும், 'மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்சில்' விற்பனை வரி நிபுணர்கள் குழுவுக்கு, நான்கு ஆண்டுகள் தலைவராக பணியாற்றியவர்.
தமிழக முதல்வரை தலைவராகக் கொண்ட, தமிழ்நாடு மாநில விற்பனை வரி ஆலோசகர்கள் குழுவிலும் அங்கத்தினராக பணியாற்றியவர்.
இந்தியாவின் பிரபல வி.ஐ.பி.,களில் பெரும்பாலானவரை சந்தித்து, பேட்டி எடுத்துள்ளார். அப்படி அவர்களை சந்திக்கும் போது, தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை, வாரமலர் இதழ் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் கட்டுரைத் தொடர் இது.
பேட்டி, கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு இவரது அனுபவங்கள் நல்ல வழிகாட்டியாக அமையும்.
-பொறுப்பாசிரியர்.
என் பெயரை கேட்டதும் பலர், ரஜத் என்பது இயற்பெயரா, புனைப்பெயரா என்றும், ஹிந்துவா, முஸ்லிமா அல்லது ஆங்கிலோ இந்தியனா என்றும் கேட்டுள்ளனர். ஜெமினி ஸ்டுடியோவில், 'ஆர்ட் டைரக்டர்' ஆக இருந்த என் தாத்தா, கே.ஆர்.சர்மா தான், இப்பெயரை எனக்கு சூட்டினார்.
'பிற்காலத்தில் நீ கலைத்துறையில் ஈடுபடும் போது, இப்பெயர் உனக்கு தனி இடத்தை தேடித் தரும்...' என்று கூறினார். அவரது வாக்கு மெய்யானது. ரஜத் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு, வெற்றி என்று அர்த்தம்.
'குமுதம், ஆனந்த விகடன், வாரமலர், குங்குமம்' உட்பட பல இதழ்களில், ரஜத் என்ற பெயரில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இதுதவிர, எஸ்.ஆர்.ரஜினி, உத்ரா, ரோமியோ, ஆதித்யா, குயிலி தம்பி, நாராயணி போன்ற பல புனைப்பெயர்களிலும் என் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
பத்திரிகைத் துறையில் வந்ததற்கு, தாத்தா மற்றும் அக்கா குயிலி ராஜேஸ்வரிக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மூன்றும் பள்ளியில் படித்து கற்ற மொழிகள். கல்லுாரியில் பிரெஞ்ச் படித்தேன். அதன் பின், மாக்ஸ்முல்லர் பவனில் ஜெர்மன் மொழியும் கற்றேன். மேலும், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த, மூத்த சகோதரரின் படப்பிடிப்புகளுக்கு உடன் சென்ற போது, அந்தந்த மொழிகளையும் கற்றுக் கொள்ள முடிந்தது.
வெவ்வேறு மொழி பேசும் வி.ஐ.பி.,களை சந்திக்கும் போது, அவர்கள் மொழியிலேயே பேசினால், நிறைய தகவல்களை பெற முடியும் என்று, என் அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன். முப்பது ஆண்டு கால பத்திரிகை பணியின் அனுபவங்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இனி, தொடருக்கு செல்வோம்.
-எஸ்.ரஜத்.
ஆரம்ப காலத்தில், 'குமுதம்' இதழில் எழுத விரும்பி, இணை ஆசிரியர்
ரா.கி.ரங்கராஜனை தொடர்பு கொண்டேன். அவரும், ஆசிரியர் எஸ்.ஏ.பி.,யும் என்னை வரவேற்று, யாராவது ஒரு, 'ஹிப்பி'யை சந்தித்து பேட்டி எடுக்க கூறினர்.
ஒரு மாதம் எங்கெல்லாமோ அலைந்து, ஒரு, 'ஹிப்பி'யை கூட சந்திக்க முடியாமல், என் தோல்வியை கவுரமாக ஒப்புக் கொண்டேன். ஆனால், 'முடியும், முயன்று பாருங்கள்...' என்று தொடர்ந்து வலியுறுத்தினார், ரா.கி.ரங்கராஜன்.
சில நாட்களில் ஒரு அயல்நாட்டு, 'ஹிப்பி'யை, என் இளைய சகோதரரும், புகைப்படக்காரருமான, உத்ரா சந்தித்தார்.
சமுதாயத்தின் கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கு உட்படாமல் மனம் விரும்பியபடி இந்தியாவை சுற்றி வந்த, நினோ என்ற அந்த இத்தாலியரை சந்தித்தேன்.
சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி., கட்டடம், மெரினா பீச், ரெஸ்டாரன்ட் என, அவருடன் சுற்றியபடியே பேட்டி எடுத்தேன். 28 பக்கங்கள் எழுதி, ரா.கி.,யிடம் கொடுத்து, 'இன்னும் ஆறு பக்கங்கள் வரும்...' என்றேன். அன்று மாலை மீண்டும் அவர் வீட்டுக்கு சென்றேன். கட்டுரையை படித்து திருத்தி, அழகான கதையாக மாற்றியிருந்தார்.
'குமுதம்' இதழில், என் முதல் கட்டுரை, ஒரு ஹிப்பியின் உண்மை கதை;
12 பக்கங்களில் வெளியானது; கூடவே உத்ராவின், 12 புகைப்படங்கள். தொடர்ந்து, 25 ஆண்டுகள், 'குமுதம்' இதழில், ஏராளமான பேட்டி கட்டுரைகள் எழுதும் வாய்ப்புகளும் கிடைத்தன.
ஜெயலலிதாவின் வாழ்க்கை தொடர் பிறந்த கதை!
பொதுவாக நான் பேட்டி எடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர்களின் அனுமதி பெற்ற பின், செல்வது வழக்கம். ஆசிரியர் அனுமதியின்றி ஒரு பேட்டிக்கு சென்றேன். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பல ஆண்டுகளுக்கு முன், 'குமுதம்' இதழில், உள்ளங்கை அளவில் ஒரு இலவச இணைப்பு கொடுப்பர். அதற்கு முயற்சி செய்யலாமே என்று நினைத்தேன்.
ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்டு, அவர் வீட்டுக்குச் சென்றேன். என் ஐடியாவை அவருக்கு சொல்லி சில விஷயங்களை, 'டேப் ரிகார்டரில்' பேசும்படி கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார்.
'நான் ஜெயலலிதா, 'குமுதம்' இதழுக்காக, ரஜத்திடம் பேசிக் கொண்டிருக்கிறேன்...' என்று ஆரம்பித்து, 'நான் சீதையோ, திரவுபதியோ அல்ல. ஒரு சாதாரண பெண். என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, உள்ளதை உள்ளபடி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதைப் படித்துவிட்டு, என்னை பற்றி நீங்கள் முடிவு செய்யுங்கள்...' என்று பேசினார்.
அந்த பதிவு கேசட்டுடன், 'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி.,யின் பங்களாவுக்கு சென்றேன்.
அவர் அனுமதி பெற்று, 'டேப் ரிக்கார்டர்' பதிவை ஓட விட்டேன். ஒரு நிமிடம் கேட்டவர், 'அதை நிறுத்துங்கள்...' என்றார்.
எனக்கு குழப்பமாகி விட்டது. 'ஒருவேளை ஆசிரியருக்கு இந்த முயற்சி பிடிக்கவில்லையோ...' என்று நினைத்தேன்.
அடுத்து அவர் என்ன செய்தார் தெரியுமா?
- தொடரும்.
