PUBLISHED ON : ஏப் 24, 2022

பழைய மொபைல் போனை விற்கப் போகிறீர்களா?
சமீபத்தில், வட மாநில இளைஞன் ஒருவன், இரு சக்கர வாகனத்தில், சிறிய அளவிலான எவர்சில்வர் பாத்திரங்களோடு வந்து, 'பழைய மொபைல் போனுக்கு, விருப்பப்படும் பாத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். பழுதாகி, பயன்படுத்த முடியாமல் இருக்கும் மொபைல் போன்களும் வாங்கப்படும்...' என்று, கூவிக் கொண்டிருந்தான்.
இதைக் கேட்ட என் மனைவி, பழுதாகி, பயனின்றி வைத்திருந்த இரண்டு மொபைல் போன்களை எடுத்து, அவனிடம் தரப்போனார். அப்போது, என்னை பார்க்க வந்திருந்த, 'சைபர் கிரைம்' பிரிவில் பணிபுரியும் உறவினர், என் மனைவியை தடுத்தார்.
மேலும் அவர், 'பழைய மொபைல் போன்களை, அதற்குரிய நிரந்தரமான கடையில் தான் விற்கவோ அல்லது மாற்றவோ வேண்டும். அதைவிட்டு, இப்படி வீதியில் வரும், முன் பின் தெரியாதவனிடம் தரக்கூடாது. நம்மிடம் மொபைல் போன்களை வாங்கி, அதில் நாம், 'டெலிட்' செய்து விட்டதாக நினைத்து கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை, 'ரெகவரி' செய்து விடுவர். அதன் பின், கண்டபடி 'மார்பிங்' செய்து, அதற்காகவே இருக்கும், 'வெப்சைட்'களுக்கு, பணத்திற்கு விற்று விடுவர்.
'சாதாரண படங்களுக்கும், வீடியோக்களுக்குமே இந்த நிலை என்றால், விளையாட்டுத்தனமாகவோ, வேண்டுமென்றோ, ஆபாச படம், வீடியோக்களை எடுத்தவர்களின் மொபைல் போன்கள் கிடைத்தால், அதன் விளைவை எண்ணிப் பாருங்கள்...' என்று, எச்சரிக்கை செய்தார், உறவினர்.
அவர் சொன்ன பிறகு தான், அறிமுகமில்லாதோரிடம் பழைய மொபைல் போன்களை விற்பதில் உள்ள வில்லங்கம் புரிந்தது. வாசகர்களே... விழிப்புணர்வோடு இருங்கள்!
ஆர். ஜெயசங்கரன், வானுார், விழுப்புரம் மாவட்டம்.
திறமையை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!
தஞ்சையிலிருந்து சென்னைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, பார்வையற்ற ஒருவர், தன் இனிமையான குரலில், 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா...' என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
அனைவரும் ரசித்து, 5 - 10 ரூபாய் என, அவரது கையில் தந்து கொண்டிருந்தனர். எனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவர், திடீரென்று எழுந்து, பலமாக கை தட்டி, அவரை கட்டிப்பிடித்தபடி, 'அருமையான குரல் வளம். டி.எம்.எஸ்.,சை அப்படியே என் காதுகளிலும், மனதிலும் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்...' என, பாராட்டினார். அத்துடன், அவரது கையில், 100 ரூபாயும் கொடுத்தார்.
உடனே, அந்த பார்வையற்றவர், 'எல்லாரும் என் மேல் இரக்கப்பட்டு பணம் கொடுத்தனர். நீங்கள் ஒருவர் தான், என் திறமையை மதித்து, பணம் கொடுத்தீர்கள். இதை நான் பெருமையாக கருதுகிறேன்...' என்றார். அந்த கணமே அவர், அனைவர் மனங்களிலும் நின்றார்.
- ரிஷிவந்தியா, தஞ்சாவூர்.
தோல்வியை தாங்குவது அவசியம்!
சமீபத்தில் நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். நுாலிழையில் வெற்றி பறி போகவே, முகம் வாடிப் போனது. என்னை போலவே அங்கு வந்திருந்த அனைவருக்கும் ஏமாற்றத்தையும், துயரத்தையும் அளித்திருந்தது, அந்த தோல்வி.
அப்போது, 'இன்டர்வியூ' செய்த அதிகாரி, எங்களை அழைத்து, 'இந்த வேலைக்கு, நான் தேர்வு செய்ய வேண்டியது ஒருவரை மட்டும் தான். இதற்காக கிட்டத்தட்ட, 20 பேரை, 'ரிஜெக்ட்' செய்ய வேண்டியதாயிற்று. வெற்றி பெற்றவர் முகத்தில் சந்தோஷமும், தோல்வியடைந்தவர்கள் முகத்தில் சோகமும் உண்டாவது இயல்பு தான். என்றாலும், பல பேர் இதனால் மனசு உடைஞ்சு போறீங்க.
'தோல்வியில் சிலர், விரக்தியின் எல்லைக்கே போயிடறீங்க. வாழ்க்கை மீது ஒரு பயம் வந்து, உங்களை நீங்களே தகுதி குறைவாக எண்ணிக் கொள்வது தவறு. 'வாழ்க்கையில் வெற்றியை விட, தோல்வி தான் உங்களுக்கு நிறைய கற்றுத் தரும். இந்த வேலை இல்லாவிட்டால், இன்னொரு வேலை இதை விட உயர்ந்ததா உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்குன்னு நம்புங்க. மனச தளர விடாதீங்க.
'உங்க முயற்சி, உங்களுக்கு நல்லதொரு வேலையை தேடித் தரும். உங்களைப் போலவே நானும் பல இடங்களில் திருப்பி அனுப்பப்பட்டவன் தான்...' என்று, ஆறுதல் கூறினார். மேலும், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும்; எதெல்லாம் செய்யக் கூடாது என, 'டிப்சும்' சொல்லி அனுப்பினார். இது, ஒரு மறக்க முடியாத சம்பவமாக இருந்தது. அவரது பெருந்தன்மையை பாராட்டி, தன்னம்பிக்கையுடன் வெளியேறினோம்.
பெ.பாண்டியன், கழனிவாசல், சிவகங்கை மாவட்டம்.
