PUBLISHED ON : ஏப் 24, 2022

சுப நிகழ்ச்சிகள் நடத்த, நல்ல நாள் பார்ப்பது வழக்கம். குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள், அஷ்டமி, நவமி, பிரதமை போன்ற திதிகள் மற்றும் கரிநாள் ஆகியவற்றையும் தவிர்ப்பர்.
கரிநாள், ஒரு ஆண்டில் 34 நாட்கள் வரும். தை மாதத்தில் மட்டும் அதிகமாக ஐந்து நாட்கள் இருக்கும். ஆண்டுதோறும் இவை மாறுவதில்லை. தமிழ் மாதத்தின் குறிப்பிட்ட நாட்களிலேயே இவை வரும்.
இதன் பெயரில், கரி என்ற சொல் இருப்பதில் இருந்தே, இது ஒரு வெறுப்புக்குரிய நாளாகிறது. இவ்வாறு ஒதுக்கப்பட வேண்டிய ஒருநாளை, நம் முன்னோர் சுட்டிக்காட்டுவதற்கு, ஆன்மிக காரணம் குறைவு தான்; ஆனால், அறிவியல் காரணம் தான் புதைந்து கிடக்கிறது.
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் துவக்க நாளிலும், சூரியன் ஒரு ராசியில் நுழையும். சித்திரை மாதத்தில் மேஷ ராசி துவங்கி, பங்குனியில் மீன ராசி வரை, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் தங்கும். அந்த மாதத்திற்கென ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தை சூரியன் பூமிக்கு அனுப்பும்.
சில நாட்களில் மட்டும் இந்த வெப்பத்தின் அளவு, வழக்கமான அளவை விட உயரும். இந்த நாட்களையே, கரிநாள் என்பர். வெப்பம் அதிகமானால், பயிர்கள் கரியும் என்று சொல்வோம் அல்லவா? அதனால், இதை கரிநாள் என்றனர்.
எந்த நாட்களில் பூமி, அதிக வெப்பத்தைப் பெறுகிறதோ, அன்று உலகில் இருக்கும் எல்லா உயிர்களுமே, தங்கள் வழக்கமான செயல்பாட்டில் மாறுதலைப் பெறும். குறிப்பாக, மனிதர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவர். கோபம் கொப்பளிக்கும். தீர்க்கமான முடிவெடுக்க முடியாத சூழலை உடல் பெறும்.
இப்படிப்பட்ட நாட்களில், சுப நிகழ்ச்சிகள் நடத்தினால் பிரச்னை தான் அதிகமாகும். இதனால் தான், அந்த நாட்களை தவிர்க்கக் கூறினர், நம் முன்னோர்.
கரிநாள் என்பது, காரி என்ற சொல்லில் இருந்து பிறந்தது. காரி என்றால் சனி. சூரியனும், சனியும் பகை கிரகங்கள். இந்த அடிப்படையிலும், கரிநாட்கள் தவிர்க்கப்படுவதாக சொல்வர்.
எது நம் வாழ்வில் திரும்பத் திரும்ப நடக்கக் கூடாது என நினைக்கிறோமோ, அதற்குரிய பரிகாரத்தை கரிநாளில் செய்யலாம். உதாரணமாக, கடன்களை இந்த நாளில் அடைத்தால், அது திரும்ப வராது என்பது நம்பிக்கை. நோய் நீங்க ஹோமம் நடத்தலாம். 'கரி' என்ற சொல்லுக்கு, 'விடுதல்' என்ற பொருளும் உண்டு. கடன் மற்றும் நோய்க்கும், நமக்கும் உள்ள தொடர்பு விட்டுப் போக இதைச் செய்வர்.
இந்நாளில், திருவாரூர் மாவட்டம் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலிலுள்ள ரணருண ஈஸ்வரர் சன்னிதிக்கு சென்று, பூஜை செய்தால், ரணமாகிய நோயும், ருணமாகிய கடனும் விட்டுப் போகும்.
திருவாரூரில் இருந்து, 27 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் இவ்வூர் உள்ளது. நம் முன்னோர், கரிநாளுக்கு வகுத்த அறிவியல் இலக்கணங்களைப் பின்பற்றி நல்வாழ்வு பெறுவோம்.
தி. செல்லப்பா
