PUBLISHED ON : ஜூன் 12, 2022

பா - கே
மத்திய அரசின், சமூக நலத்துறையில் பணியாற்றும் அதிகாரி அவர். எங்கள் நண்பர் குழுவில் அவரும் உண்டு. பணி நிமித்தம் ஊர் ஊராக செல்பவர். நீண்ட இடைவெளிக்கு பின், 'பீச்' மீட்டிங்குக்கு வந்திருந்தார்.
'என்ன வே... ரொம்ப நாளா இந்த பக்கம் காணோம். எந்த ஊரில், 'டேரா' போட்டீர்...' என்றார் ராமசாமி அண்ணாச்சி.
'விழுப்புரத்தில் ஒரு, 'கேம்ப்!' முடித்து விட்டு நேற்று தான் சென்னை வந்தேன்...' என்றார்.
'ஒருநாள் மாலை, காலாற நடந்து சென்றபோது, ஒரு இன்ட்ரஸ்டிங்கான கூத்தை பார்க்க நேர்ந்தது, சொல்லட்டுமா...' என்றார்.
'வேண்டாம் என்றாலும், விடவா போகிறீர். சொல்லு...' என்று கலாய்த்தார், லென்ஸ் மாமா.
'ஒருநாள் மாலை, நான் சென்ற பாதையில், 'டாஸ்மாக்' ஒன்றிருந்தது. அதன் வாசலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கிருந்த ஒரு ஆசாமிக்கு, பிராந்தி குடிக்கிறதுல சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை வந்திருச்சு போலிருக்கு. 'என் அளவுக்கு யாரும் குடிக்க முடியாது...' என்று கூடியிருந்தவர்களிடம் சவால் விட்டார். கடையிலிருந்து இவர் பாட்டுக்கு சரக்கை வாங்கி, வாங்கிக் குடித்தார்.
அளவுக்கு மீறி போனதும், நிதானம் தவறி போயிற்று. அப்படி இருந்தும், 'இன்னொரு கிளாஸ் கொடு...' என்று கேட்டார். கடைக்காரரும் கொடுத்தார். ஆனால், அதைக் குடிக்கத்தான் முடியவில்லை. எப்படியும் குடித்து விட வேண்டும் என்பதால், அருகில் நின்றிருந்தவரிடம், 'என்னோட வாய் எங்கே இருக்குன்னு எனக்கே தெரியல. நீங்க கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன். இந்த பிராந்தியை அதிலே ஊத்தணும்...' என்றார்.
'இதென்ன கேள்வி, உங்க வாய் உங்க தலையிலே தான் இருக்கு...' என்றார், அருகிலிருந்தவர்.
'ஓ... அப்படியா விஷயம். கண்டுபிடிச்சு சொன்னதுக்கு ரொம்ப தேங்ஸ்...' என்று சொல்லி, அந்த பிராந்தியை அப்படியே தன் தலையில் ஊற்றிக் கொண்டார்.
தலையில் தானே வாய் இருக்கிறது என்று அவர் சொன்னதால், தலையில் அதை ஊற்றி அபிேஷகம் செய்து கொண்டார்.
அதுமட்டுமல்ல, 'அப்பாடா... குடிச்சாச்சு; இன்னொரு கிளாஸ் கொடு...' என்று கேட்க ஆரம்பித்து விட்டார்.
இது நடந்து இரண்டு நாட்களுக்கு பின், இதுபோல் மது போதைக்கு அடிமையான, விழுப்புரத்தைச் சேர்ந்த என் உறவினர் ஒருவர், என்னை சந்திக்க வந்திருந்தார். பக்தி பழமாக இருந்தவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
'நான் இப்ப மது பழக்கத்தை அடியோடு விட்டுட்டேன்...' என்றார்.
என்னால் நம்ப முடியவில்லை.
'அது எப்படி முடிஞ்சுது உங்களாலே...' என்று கேட்டேன்.
மது போதையிலிருந்து விடுபட, சில ஆலோசனைகளைச் சொல்லியுள்ளார், ஒரு ஆன்மிகவாதி.
அவர் சொன்னதைக் கடைப்பிடித்து இவர் நடந்தாராம். அவ்வளவுதான்.
இப்போதெல்லாம் அவர் ஒயின் ஷாப் பக்கமே போவதில்லையாம்.
அந்த ஆன்மிகவாதி சொன்ன வழிமுறைகள் என்ன தெரியுமா?
1. தினமும், காலையில் இளம் சூடான நீரில் பழச்சாறு கலந்து சாப்பிட்டு அன்றாட வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்
2. தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். ஒவ்வொரு வேளை குளித்தவுடனேயும் வெந்நீர் அல்லது எலுமிச்சை சாறு பருக வேண்டும்
3. ஒரு சாப்பாட்டு வேளைக்கும் இன்னொரு சாப்பாட்டு வேளைக்கும் இடையே குறைந்தது ஐந்து டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்
4. சில குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்தால் கொஞ்சம் மது அருந்தலாமா என்று மனது துாண்டும். அப்படிப்பட்ட இடங்களில் உட்காரக்கூடாது
5. சாப்பாட்டிற்கு பிறகு வெளியே போய் சில நிமிடங்கள் காலாற நடந்து விட்டு வரவேண்டும்
6. சில நண்பர்கள் வீட்டுக்கு போனால், உடனே மது கோப்பையை நீட்டுவர். அது ஓர் உபசரிப்பு. அப்படிப்பட்ட நண்பர்கள் வீட்டுக்கு போகக் கூடாது. மது அருந்துகிற இடங்களுக்கும் போகக் கூடாது.
7. இப்ப கொஞ்சம் மது சாப்பிட்டால் தேவலை என்று ஒரு எண்ணம் வரும். உடனே, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்
8. தேநீர், காபி, புகையிலை, இனிப்பு வகைகள், மீன், பொரித்த உணவு வகை, சிகரெட் இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை
9. புரதச்சத்து அதிகமுள்ள ஆகாரங்களான பழம், பால், தயிர், தேன், பழச்சாறு, காய்கறிகள் இவற்றையெல்லாம் தாராளமாக சாப்பிடலாம்
10. தியானம், யோகாசனம் இவை இரண்டும் மிகவும் உதவும். இழந்த தேக பலத்தையும், மன உறுதியையும் இவற்றின் மூலம் மீட்க முடியும்
மது பழக்கத்திலிருந்து விடுபட விரும்புவோர், இந்த பத்து குறிப்புகளையும் கொஞ்சம் கவனத்தில் வைத்துக் கொண்டால் போதும், என்றார் அந்த நண்பர்.
- இப்படி அந்த அதிகாரி சொல்லி முடித்ததும், கடுப்பான லென்ஸ் மாமா, நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சி ஒன்று சொல்லட்டுமா என்றபடி தொடர்ந்தார்:
விருந்து ஒன்று நடந்து கொண்டிருந்தது. எல்லாரும் உற்சாகமாக மது அருந்திக் கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் ரொம்ப சாதுவாய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். அவரை கவனித்த இன்னொருவர், கையில் ஒரு மது கோப்பையை கொண்டு வந்து அவரை நெருங்கி,'இந்தாங்க சாப்பிடுங்க...' என்றார்.
'தயவுசெய்து என்னை மது சாப்பிட சொல்லிக் கட்டாயப்படுத்தாதீங்க...' என்றார், அந்த நபர்.
'ஏன் அப்படி சொல்றீங்க...' என்று கேட்டார்.
இதற்கு அவர், 'சார், மறுபடியும் சொல்றேன். என்னை வற்புறுத்தாதீங்க. இதை வேணாம்ன்னு நான் மறுக்கறதுக்கு மூன்று காரணங்கள் இருக்கு. முதல் காரணம்: மது சாப்பிடறது கெடுதல்னு ஒரு புஸ்தகத்துல படிச்சேன். இரண்டாவது காரணம்: மது சாப்பிடறதில்லைன்னு என் மனைவிகிட்ட சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன். மூன்றாவது காரணம்: இப்ப நான் நிறைய மது சாப்பிட்டிருக்கேன்...' என்றார்.
இதைக் கேட்டதும், அதிகாரியின் முகம், 'ஞ்ஞே' என்றானது.
ராமசாமி அண்ணாச்சியும் மற்றவர்களும், 'திருதிரு' என முழிக்க, சிரிப்பை அடக்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தேன், நான்.
ப
பல துறை சார்ந்த நிபுணர்களின் தொழிலும், அவர்களுக்கு பொருத்தமான பெயரையும் இப்படி வைத்துக் கொண்டால், நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருக்கும் அல்லவா...
உதாரணத்துக்கு,
வைத்தியர் - வைத்தியநாதன்
பல் மருத்துவர் - பல்லவன்
வக்கீல் - கேசவன்
நிதி ஆலோசகர் - தனசேகரன்
இதய நோய் மருத்துவர் - இருதயராஜ்
குழந்தை மருத்துவர் - குழந்தைசாமி
கல்யாண தரகர் - கல்யாணசுந்தரம்
கண் மருத்துவர் - கண்ணாயிரம்
காது, மூக்கு, தொண்டை மருத்துவர் - நீலகண்டன்
நீரழிவு சிறப்பு மருத்துவர் - சக்ரபாணி
ஊட்டசத்து நிபுணர் - ஆரோக்யசாமி
மேஜிக் செய்பவர் - மாயாண்டி
கட்டட பொறியாளர் - செங்கல்வராயன்
வர்ணம் தீட்டுபவர் - சித்ரகுப்தன்
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
