தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரும்பிப் பார்க்கிறேன்! (8)

திரும்பிப் பார்க்கிறேன்! (8)

திரும்பிப் பார்க்கிறேன்! (8)


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வங்கி மோசடி!

தேசிய மயமாக்கப்பட்ட பெரிய வங்கி ஒன்றில், உயர் அதிகாரியாக பணியிலிருந்த நண்பரை, அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். வங்கிகளில் அவ்வப்போது நடைபெறும் மோசடிகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அதுபற்றி வங்கி வெளியிட்டிருந்த அறிவிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த தகவல் மற்றும் நான் வேறு இடங்களில் இருந்து சேகரித்த விஷயங்கள் அனைத்தையும் தொகுத்து, ஒரு கட்டுரை எழுதினேன்.

புதுமையாக, சுவாரசியமாக இருப்பதாக, 'குமுதம்' உதவி ஆசிரியர்கள் கூறினர். இந்த கட்டுரைக்கு பொருத்தமாக, ஒரு வங்கி மேலாளரை, போலீஸ் கைது செய்வது போல, என் தம்பி உத்ரா அட்டை படம் எடுத்திருந்தார்.

வெளியூர் சென்றிருந்த, எஸ்.ஏ.பி., திரும்பி வந்த பின், இந்தக் கட்டுரையை படித்தார்.

'திடீரென்று வங்கிகளின் மோசடிகள் பற்றி எழுதி இருக்கீங்களே... இதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும் தெரியுமா? வங்கியில், 5,000 மற்றும் 10 ஆயிரம் ரூபாய், 'டிபாசிட்' செய்திருக்கும் சாதாரண மக்கள் உடனே சென்று, அந்த பணத்தை எடுத்து விடுவர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக பணம் கொடுக்க, வங்கி எங்கே போகும்?

'இது ஒரு பொருளாதார சிக்கலை உருவாக்கி விடும். 'ரன்' என்று ஆங்கிலத்தில் சொல்வர். விஷயம் தெரிந்த நீங்களே இப்படி செய்யலாமா? சமுதாயத்தில் நடக்கும் தவறுகள் பற்றி எழுத வேண்டுமென்றால், தகுந்தவாறு திட்டமிட்டு செய்யுங்கள். வங்கி வாடிக்கையாளர்களை ஏன் பயமுறுத்துகிறீர்கள்?' என்றார்.

கட்டுரை எழுதும்போது பரபரப்பாக இருந்தாலும், யோசித்துப் பார்க்கும்போது ஆசிரியர் சொன்னது சரி என்று பட்டது. அந்தக் கட்டுரையில்...

* நீண்டகாலமாக, 'ஆபரேட்' செய்யப்படாமல் இருக்கும் கணக்குகளில் இருந்து பணத்தை களவாடல் செய்வது

* இல்லாத நபர்களின் பெயரில் கணக்கு ஆரம்பித்து, மோசடி செய்வது

* குறிப்பிட்ட பொருளை ஏற்றுமதி செய்வதாக சான்றிதழ் வாங்கி, அதற்கு பதிலாக பயனற்ற பொருளை ஏற்றுமதி செய்து, அந்நிய செலவாணி மோசடி செய்தல்

- இப்படி எல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.

வங்கி மோசடிகள் பற்றிய கட்டுரையை, நிறுத்தி விட்டார், எஸ்.ஏ.பி., ஆனால், அதற்குள் அட்டைப்படம் அச்சாகி விட்டது. அதை சமாளிக்க. மற்றொரு ஐடியா செய்தார், ஆசிரியர்.

'அட்டைப் படத்திற்கு ஏற்றவாறு கதை எழுதுங்கள்; பரிசு 2,000 ரூபாய்...' என்று அறிவித்து விட்டார். மொத்தத்தில் நான் செய்த தவறு, தக்க தருணத்தில் சரி செய்யப்பட்டது.

லட்சிய தம்பதியர்!

தமிழ் பத்திரிகை உலகின் மாபெரும் சாதனையாளர்; உலகம் முழுவதும் சென்று பயணக் கட்டுரைகள் எழுதி புகழ் பெற்றவர்; எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர், மணியன்.

'இதயம் பேசுகிறது' என்ற இதழை சொந்தமாக ஆரம்பித்து, வெற்றி கண்டவர். திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரது பத்திரிகையில் நான், 20 வார தொடர் எழுதினேன்.

அவை அனைத்தும், 'லட்சிய தம்பதி' என்ற தலைப்பில், திரைப்பட தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் - மனைவி சுஜாதா; டைரக்டர் ஸ்ரீதர் - மனைவி தேவசேனா; நடிகர், டைரக்டர் டி.ராஜேந்தர் - மனைவி உஷா; டாக்டர் காமேஸ்வரன் - லலிதா காமேஸ்வரன்; இசைக்கலைஞர் சுதா - கணவர் ரகுநாதன்; பரதநாட்டியக் கலைஞர் சித்ரா - கணவர் விஸ்வேஸ்வரன்.

ஓவியர் ஜெயராஜ் - மனைவி ரெஜினா; டாக்குமெண்டரி பிலிம் தயாரிப்பாளர் கிருஷ்ணசுவாமி - மனைவி மோகனா; கர்நாடக இசைக் கலைஞர் மகாராஜபுரம் சந்தானம் - மனைவி ஞானாம்பாள்; திருச்சூர் ராமச்சந்திரன் - மனைவி சாருமதி ராமச்சந்திரன் என, பலதரப்பட்ட துறைகளில் சாதனையாளர்களை பேட்டி கண்டு, கட்டுரை எழுதினேன்.

அவற்றில் நான் நேரடியாக சந்திக்காத ஒரே தம்பதி, பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவர் சதாசிவம். அவர்களைப் பற்றி மிகவும் நன்றாக அறிந்த அவர்களது குடும்ப நண்பரும், தொழிலதிபருமான, டி.டி.வாசு, ஏராளமான சுவையான தகவல்கள் கொடுத்தார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியை பற்றி, நான் எழுதிய கட்டுரையை அவர்கள் படித்து மகிழ்ந்துள்ளனர். பின்னர் ஒருமுறை அவர்களை சந்திக்க நேர்ந்தபோது, 'எங்களைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறீர்கள், ரொம்ப நன்றி...' என்று கூறினர்.

ஆசிரியர் மணியன், பத்திரிகையாளர்களை மிகவும் மதிப்பவர். 'இதயம் பேசுகிறது' அலுவலகம், கிண்டி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் இருந்தாலும், அபிராமபுரத்தில் உள்ள தனி அலுவலகத்தில் தான், மணியனை சந்திப்பேன்.

நான் அங்கு சென்றதும், அடுத்து வெளிவரவிருக்கும், 'இதயம் பேசுகிறது' இதழின் இரண்டு பிரதிகளை எனக்கு கொடுப்பார். 'அடுத்த வாரம் யாரைப் பற்றி எழுதப் போகிறீர்கள்?' என கேட்பார்.

எழுத வேண்டிய தம்பதியரை பற்றி முடிவு செய்ய, முழு சுதந்திரமும் அளித்திருந்தார். மேலும், பல வாரங்கள் இந்த தொடர் வருவதற்கு பிளான் போட்டோம். ஆனால், சில காரணங்களால், 20 வாரங்களுக்கு மேல் இந்தக் கட்டுரையை தொடர முடியவில்லை.

போக்குவரத்து தடையால் கட்டுரை அனுப்ப இயலாமல் தத்தளித்தது...

— தொடரும்

ரஜத்தின் மனைவி ரஜனி, கனரா வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்தவர். அவரது அம்மாவுக்கு, 'டயாலிசிஸ்' செய்ய, மருத்துவ செலவிற்காக, தி.நகர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து, 75 ஆயிரம் ரூபாய் எடுத்தார். வங்கியில் இருந்து வெளியே வரும்போது, யாரோ ஒருவன், இவர் கைப்பையை பிடுங்கி, அருகில் ஏற்கனவே காத்திருந்த நண்பரோடு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டான்.

ரஜனியும், மற்றொரு நண்பரும் அவனைத் துரத்தியும் அகப்படவில்லை. ஐ.ஓ.பி.,யின் அடுத்த கட்டடமான பாண்டிபஜார் போலீஸ் காவல் நிலையம் சென்று, பணம் திருட்டு போனது பற்றி புகார் எழுதிக் கொடுத்திருக்கிறார். ரஜனி.

அடுத்து, அந்துமணியிடம் நடந்ததை டெலிபோனில் சொன்னார்.

'சிறிது நேரத்தில் உங்கள் வீட்டுக்கு என் நண்பரான போலீஸ் அதிகாரி ஒருவர் வருவார். அவரிடம் நடந்ததை விளக்கமாக சொல்லுங்கள். தேவையான உதவியை அவர் செய்து தருவார்...' என்றார், அந்துமணி.

அவர் சொன்ன மாதிரியே சிறிது நேரத்தில் காவல்துறையில் பெரிய அதிகாரி ஒருவர், ரஜத் வீட்டுக்கு சென்று விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

சில மாதங்களிலேயே அந்தத் திருடன் பிடிபட்டான். அவனிடமிருந்து, 25 ஆயிரம் ரூபாய் மீட்டு தந்தனர்.

எஸ். ரஜத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us