PUBLISHED ON : ஜூன் 12, 2022

இப்படியும் ஓர் உ.பா., பிரியர்!
அஞ்சலகத்திற்கு சென்று, திரும்பி வந்து, 'டூ வீலரை' எடுத்த போது, 'சீட்' கிழிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். என்னுடையது மட்டுமல்லாமல், மேலும், மூன்று வண்டிகளின், 'சீட்' கிழிக்கப்பட்டிருந்தது. அது குறித்து, பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அங்கிருந்து கிளம்பி சிறிது துாரம் வந்ததும், உ.பா., பார்ட்டி ஒருவன், 'டூ வீலர்' ஒன்றின் அருகில் நின்றபடி எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தான்.
'டூ வீலரை' நிறுத்தி, அவனை கவனித்தேன்.
பிளேடால் அந்த, 'டூ வீலரின்' இருக்கையை கிழித்து கொண்டிருந்தான். அதிர்ச்சியடைந்த நான், சத்தம் போட்டு, பக்கத்தில் இருந்தவர்களை அழைத்தேன்.
ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டியதுடன், அங்கிருந்து தப்ப முயன்றான். அதற்குள் அங்கே வந்தவர்கள், அவனை பிடித்து, உதைத்து விசாரித்தனர்.
'குடிகாரன் என்றால் கேவலமா? சாலையில், 'லிப்ட்' கேட்டால் எவனும் தரவில்லை. அந்த ஆத்திரத்தில், 'டூ வீலர் சீட்'டை கிழித்தேன்...' என்றான், அவன்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.
மொத்தத்தில், 'குடி' மகன்களால், சமூகமே சீரழிந்து விட்டது. போதை தலைக்கு ஏறியதும், ஒவ்வொருவரும் ஒவ்வொருவித கோப - தாபத்தில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், 'டூ வீலர்'களை சேதப்படுத்துவது சமீபத்திய புதுமையான சம்பவம்.
இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்கள், எந்த நேரத்திலும் பிறரது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
ஆகையால், வெளியே செல்லும்போது, ஜாக்கிரதையாக இருப்பதோடு, 'டூ வீலரை' பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி, அவ்வப்போது கண்காணித்துக் கொள்வது நல்லது.
ம. மொவன் குட்டி, நீலாம்பூர், கோவை.
அமைதியே மகிழ்ச்சிக்கு வழி!
என் எதிர் வீட்டில், புதிதாக திருமணமான ஜோடி ஒன்று குடி வந்தது. இள வயது மற்றும் அவர்களுக்குள் புரிதலோ, பக்குவமோ இல்லை என்பதால், அற்ப காரணங்களுக்குக் கூட கடுமையாக சண்டையிட்டுக் கொள்வர். இவர்களுக்கு தகுந்த ஆலோசனை கூறி வழி காட்டி, நெறிப்படுத்தி உதவ, வீட்டுப் பெரியவர்களும் யாருமில்லை.
எதிர் வீட்டு சகோதரியின் கணவர் வேலைக்கு சென்ற பின், நானே வலிய சென்று, அன்போடு அப்பெண்ணுக்கு அறிவுரைகளை, மறைமுகமாக வழங்கினேன். என் கணவரிடம் சொல்லி, அவள் கணவருக்கு அறிவுரை கூறச் செய்தேன்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கவும், நிலைக்கவும், கணவன் - மனைவி இருவரின் அமைதி தான் அவசியம் என்பதை புரிய வைத்தோம். சில தினங்களிலேயே எங்களின் செயல்பாட்டுக்கு பலன் கிடைத்தது. எதிர் வீட்டு தம்பதியர், இப்போதெல்லாம் எதற்குமே சண்டையிடுவதில்லை. ஒருவருக்கொருவர் புரிந்து, விட்டுக் கொடுத்து வாழ்கின்றனர்.
கணவன் - மனைவி பிரச்னையில், ஒருவரிடம் ஒருவர் தோற்பது என்பது அவமானமே இல்லை. அந்த தோல்வி தான், குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு உதவும்!
- எஸ். நாகராணி, மதுரை.
கற்கள் வேண்டாம்!
நான் வழக்கமாக ஏறும் பஸ் நிறுத்தத்தில், தினசரி தன் மனைவியை, பஸ் ஏற்றி விட்டு செல்வார், ஒருவர். அந்த பெண்ணிடம், எனக்கு பழக்கம் இல்லாவிட்டாலும், தினசரி அவர்கள் என் கண்ணில் படுவர்.
சில மாதங்களாக அவர்கள் வருவதில்லை. ஒருநாள், பஸ் ஸ்டாப்பிற்கு வந்த அந்த பெண், உடல் இளைத்து, அமங்கலமாக காணப்பட்டாள். அதிர்ச்சியடைந்த நான், அவளிடம் விபரம் கேட்டேன்.
கணவர், விபத்தில் இறந்து விட்டதாக கூறினாள்.
'எப்படி?' என்றேன்.
அதிகாலை, பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார், அப்பெண்ணின் கணவர். குறுகலான அந்த தெருவில், பாதி அளவுக்கு அடைத்தபடி கோலம் போட்டு, வாகனங்கள் ஏறி கலையாமல் இருக்க, கோலத்தின் நான்கு பக்கமும் பெரிய பெரிய கற்கள் வைத்திருந்துள்ளனர்.
எதிரே வந்த டூ வீலருக்கு வழி விட, அப்பெண்ணின் கணவர் ஓரம் கட்டியபோது, கல்லின் மீது, 'டூ வீலர்' ஏறி, தடுமாறி விழுந்ததில், அவரது பின் தலையில் பலத்த அடிபட்டு இறந்து விட்டதாக தெரிவித்தாள்.
அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென தெரியாமல், தவித்தேன். நிறைய இடங்களில் இப்படி சாலைகளை அடைத்து, கோலம் போட்டு கற்களை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வீட்டு வாசலில் சிறியதாக கோலம் போட்டால் போதாதா?
மற்றவர்கள் நடப்பதற்கோ, வாகனங்களில் செல்வதற்கோ வழி விடாமல், கோலத்தைச் சுற்றி கற்களை வைப்பது பெரிய தவறு. இவ்வாறு செய்பவர்கள், இந்த சம்பவத்தை படித்த பிறகாவது, திருந்துவரா?
இலக்கியா மகேஷ், புதுார், கோவை.
