தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குழந்தைகளின் தெய்வம்!

குழந்தைகளின் தெய்வம்!

குழந்தைகளின் தெய்வம்!


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 12, வைகாசி விசாகம்

வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமான் அவதரித்தார். தன் பிறப்புக்கு விசாக நட்சத்திரத்தை அவர் தேர்ந்தெடுக்க காரணம், ஒரு குருவாக விளங்க வேண்டும் என்பதால் தான். விசாக நட்சத்திரத்திற்குரிய கிரகம், குரு. இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்கள், குரு தசையுடன் தங்கள் வாழ்வைத் துவக்குவர்.

ஓம் என்ற மந்திரத்தின் அடிப்படையில், உலகத்தில் உயிர்களை படைக்கிறார், பிரம்மா. அவரை ஒருமுறை சந்தித்த முருகன், 'உங்கள் படைப்புக்கு ஆதாரமான அந்த மந்திரத்தின் பொருள் என்ன?' என்று கேட்டார். இதற்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

'ஓம் என்றால், 'எல்லாம் நானே' (கடவுளே) என்பது பொருள். கடவுள் என்பவர் எப்போதும் புதியவர். அவருக்கு வயது கிடையாது. அவர் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. முதலும் இல்லை, முடிவும் இல்லை. இப்படிப்பட்ட அரிய சக்தி படைத்த ஒருவர், வாழ்நாள் முழுவதும் உன்னைப் பாதுகாப்பார் என்று சொல்லி அந்த உயிரைப் படைக்கிறீர்கள்...' என்று எளிமையாக விளக்கமளித்தார்.

பிரம்மாவுக்கே அப்போது தான், அந்த உண்மை புரிந்தது. இதன் பின் சிவனிடம் இந்த பிரச்னை செல்ல, ஓம் மந்திரத்தின் பொருளை தெரிந்திருந்தும், தன் குழந்தையின் மழலை மொழியில் விளக்கம் கேட்க ஆசைப்பட்டார்.

தெரியாதவர் போல் அவர் நடிக்க, 'அப்படியானால் குருவான என்னிடம் பாடம் கேட்க, மாணவரான நீங்கள், கை கட்டி வாய் பொத்தி மண்டியிடுங்கள். உங்களுக்கு விளக்கம் சொல்கிறேன்...' என்றானாம், பாலமுருகன். சிவனும் அவ்வாறே செய்து மகிழ்ந்தார்.

தந்தைக்கும், படைப்புக் கடவுளுக்கும் மட்டுமல்ல, தன் எதிரிகளுக்கும் அவரே குரு. பத்மாசுரன் தனக்கு மரணமே கிடையாது என்ற கர்வத்துடன் அவரை எதிர்த்த போது, அவனுக்கு மனித வாழ்வின் தன்மை பற்றி போதனை செய்தார்.

முருகனது ஞானவேல் உடலில் பட்டதுமே, அவனுக்கு சற்றுநேரம் ஞானம் ஏற்பட்டது. உலக வாழ்வு நிரந்தரமற்றது என்பதை, அவன் உணர்ந்தான். எனவே, அவனைக் கொல்லவில்லை.

தன் பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்ற, அவனது உடலை இரு கூறாக்கி, ஒன்றை மயிலாகவும், மற்றதை சேவலாகவும் மாற்றி, வாகனமாகவும், கொடி சின்னமாகவும் ஏற்றார். இதனால் தான் அவனை ஆட்கொண்ட திருச்செந்துார் தலம், குரு ஸ்தலமாக விளங்குகிறது. இங்கே விசாக நட்சத்திரத்தின் கிரகமான குருவுக்கே குருவாக விளங்குகிறார், முருகன்.

விசாகம் என்றால் மலர்தல். உலகுக்கே நல்லதைப் போதிக்க மலர்ந்தவர், முருகன். அவரது பிறந்தநாளில், அந்த குழந்தை தெய்வத்தை வணங்கி, நம் குழந்தைகளையும் அவரைப் போலவே சிறந்த அறிவாளியாக மாற்ற முயற்சி எடுப்போம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us