PUBLISHED ON : ஜூலை 03, 2022

பா -கே
அலுவலகம் -
எனக்காக ஒதுக்கப்பட்ட, 'கேபினில்' உள்ள கம்ப்யூட்டரில், 'இ-மெயிலில்' வரும் வாசகர்களின் கேள்விகளை, 'பிரின்ட்' எடுக்கவும், 'கூகுள்' தேடலில் சென்று, முக்கிய தகவல்களை எடுப்பதற்கும், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி அளித்து வருகிறார், உதவி ஆசிரியை ஒருவர்.
டீ வாங்க, தபால்கள் எடுத்து வர உதவியாளர் ஒருவரை ஏற்பாடு செய்து விட்டார், பொறுப்பாசிரியர். இதற்காக வெளியில் செல்லும் நேரம் மிச்சமானதால், மேற்கூறிய பயிற்சிகளை எடுத்து வருகிறேன்.
இதெல்லாம், லென்ஸ் மாமாவுக்கு கடுப்பை ஏற்படுத்த, 'மணி... நீ இப்ப எல்லாம் என்னோடு நேரத்தை செலவிடுவதே இல்லை. வெளியே கூப்பிட்டாலும் வருவதில்லை...' என்று புலம்பினார்.
அவரை சமாதானப்படுத்தி, வேலையில் ஈடுபட்டேன்.
வழக்கம் போல், 'கூகுள்' தேடலில் நுழைந்து, பார்த்துக் கொண்டிருக்க, 'வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவின் இன்றைய நிலை என்ன?' என்ற தலைப்பில், ஆங்கில கட்டுரை ஒன்று தென்பட்டது.
உதவி ஆசிரியை உதவியுடன் படிக்க ஆரம்பித்தேன். அதில்:
கடந்த, 1980ல், புகழ்பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள், 'ஏற்கனவே, சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகி விட்டது. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்து விட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்...' என்று, தீர்க்கதரிசனமாக கூறியிருந்தனர்.
அதாவது, வீட்டில் சமைப்பதை நிறுத்தி, கடைகளில் வாங்கி சாப்பிடும் பழக்கம் வந்தபோது, மேற்கூறிய கருத்தை தெரிவித்திருந்தனர். அவர்கள் எச்சரித்தபடியே, இன்று, பொறுப்பும், பாங்கும் அற்ற அமெரிக்க குடும்ப கட்டமைப்பு அழிந்து விட்டன என்றே சொல்லலாம்.
அன்புடன் சமைப்பது என்றால், குடும்பத்தை இணைப்பது என்று அர்த்தம். குடும்ப கலாசாரத்தின் மையப்புள்ளியும் அதுவே.
சமையல் அறை இல்லாமல், வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால், அது குடும்பம் அல்ல; தங்கும் விடுதி தான்.
சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன ஆனது தெரியுமா?
கடந்த, 1971ல் கணவன் - மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள், 71 சதவீதமாக இருந்தன. 2020ல் அது, 20 சதவீதமாக நலிந்து விட்டது.
அமெரிக்காவில், இன்று பெண்கள் மட்டும் தனித்திருக்கும் வீடுகள், 15 சதவீதம். ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள், 12 சதவீதம். 19 சதவீதம், அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகளானது. 6 சதவீதம் வீடுகள், ஆண் - பெண் சேர்ந்து வாழும் தங்குமிடங்களாயின.
இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில், 41 சதவீதம், திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன. அதில் பாதி குழந்தைகள், பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு பிறந்தவை.
இந்த அலங்கோலத்தால், 50 சதவீதம், முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. 67 சதவீதம், இரண்டாவது திருமணங்களும், 74 சதவீதம், மூன்றாவது திருமணங்களும் விவாகரத்தாகின்றன.
எனவே, வெறும் படுக்கை அறை மட்டும், குடும்பம் அல்ல. சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால், குடும்ப வாழ்வு நிலை குலைந்துவிடும் என்பதற்கு, அமெரிக்கா உதாரணமாகி விட்டது.
* குடும்பங்கள் அழிந்தால், மனநலமும், உடல் நலமும் சீரழியும்
* வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப் போகும்
* ஏராளமான தொற்று வியாதிகள் வரும்
* சேமிப்பு குறையும்.
எனவே, சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல. உடல் நலம், மன நலம், பொருளாதாரத்துக்கு கூட அவசியம். ஆதலால் தான், நம் முன்னோர், ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர்.
ஆனால், இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும், 'சுவிக்கி, செமோட்டோ, ஊபர் ஈட்ஸ்' போன்ற நிறுவனங்களில், 'ஆன்லைன் ஆர்டர்' செய்து சாப்பிடுவதும், மெத்தப் படித்த மற்றும் நடுத்தர மக்களிடமும் பல்கி பெருகியுள்ளது. இது, பேராபத்தில் முடியும்.
நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை, அந்த, 'ஆன்லைன்' நிறுவனங்களே தீர்மானிக்கின்றன.
அமெரிக்கா நமக்கு பாடமாக அமைந்துள்ளது. அந்நிலை இங்கும் வராமல் இருக்க, நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.
முன்பெல்லாம் யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும்போது, புளியோதரை மற்றும் தயிர் சாதம் கட்டி எடுத்து செல்வர். ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆகையால், வீட்டிலேயே சமையல் செய்யுங்கள். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள்.
காலையில், எறும்புக்கும், பகலில், காக்கைக்கும், இரவில் நாய்க்கும் உணவிடுங்கள்.
குடும்பமாய் இருங்கள்; ஒற்றுமையாய் வாழுங்கள்!
- இப்படி சென்றது அக்கட்டுரை.
நான் என்ன படிக்கிறேன் என்று எட்டிப் பார்த்த லென்ஸ் மாமா, 'கால மாற்றத்தில் இதெல்லாம் நடப்பது சகஜம் தான். இன்னொரு, 'வெப் - சைட்'டில் நான் படித்ததை சொல்கிறேன் கேளு...' என்று கூற ஆரம்பித்தார்:
எதை சாப்பிட விரும்புகிறீர்களோ, அதை வாங்கி சாப்பிட்டு விடுங்கள். ஏனெனில்,
* உடற்பயிற்சி செய்யும், 'டிரெட்மில்'லை கண்டுபிடித்தவர், 54 வயதில் இறந்தார்
* 'ஜிம்னாஸ்டிக்ஸ்' பயிற்சியை அறிமுகப்படுத்தியவர், 57வது வயதில் இறந்தார்
* உலகின் சிறந்த கால் பந்தாட்ட வீரரான மரடோனா, 60வது வயதில் இறந்தார்.
ஆனால்...
* கே.எப்.சி., எனப்படும் 'கென்டகி பிரைட் சிக்கன்' செய்முறையை உருவாக்கிய, ஹார்லேண்ட் சாண்டர்ஸ், 94 வயதில் இறந்தார்
* பிரபல, 'வின்ஸ்டன்' சிகரெட் தயாரிப்பாளரான ரிச்சர்ட் ஜோஷ்வா ரெனால்ட்ஸ், 70வது வயதில் தான் இறந்தார்
* 'ஹென்னெஸி' என்ற பெயரில், உலக புகழ்பெற்ற பிராந்தியை அறிமுகப்படுத்திய, ரிச்சர்ட் ஹென்னெஸி, 76வது வயதில் இறந்தார்
* நம்மூர் தயாரிப்பான, எம்.டி.எச்., என்ற மசாலா பொருள் தயாரிப்பாளரான தரம்பால் குலாட்டி, 97 ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்தார்.
- என, கூறி முடித்தார்.
'எல்லாம் சரிதான் மாமா... இந்த உணவு வகைகளையும், மசாலா பொருட்களையும் தயாரித்தவர்கள், தாங்களும் அதை சாப்பிட்டு இருப்பரா அல்லது வியாபாரத்துக்கு மட்டுமே தயாரித்திருக்கலாம் அல்லவா...' என்றார், அருகிலிருந்த உ.ஆ.,
'வியாபாரத்துக்காக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருந்தாலும், 'டேஸ்ட்' பார்க்காமல் இந்த அளவுக்கு வெற்றிகரமாக விருத்தி செய்து இருக்க முடியாது அம்மணி...' என்றார், மாமா.
எத்தனை சமாதானம் சொன்னாலும் அமெரிக்காவின் நிலை இங்கு வந்துவிடுமோ என்று கவலை ஏற்பட்டது எனக்கு.
வாசகர்களே... உங்கள் கருத்து என்ன? எனக்கு எழுதுங்களேன்.
