PUBLISHED ON : ஜூலை 03, 2022

ஹை-டெக் முதல்வர் சந்திரபாபு நாயுடு!
ஒருமுறை, ஆந்திரா மாநில தலைநகர், தற்போது தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத் சென்றிருந்தபோது, காலை, 9:00 மணிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அலுவலகத்திற்கு, 'அப்பாயின்ட்மென்ட்' கேட்டு, 'பேக்ஸ்' அனுப்பி இருந்தேன். அன்று மாலை, 5:30 மணிக்கு சந்திக்கலாம் என்று, 'பேக்ஸ்'சில் பதில் வந்தது.
ராமலிங்க ராஜு என்ற உள்ளூர் நண்பருடன், தலைமை செயலகம் சென்றேன். முதல்வர் அலுவலகம் இருந்த தளத்தில், 10 அடிக்கு ஒருவர் என்ற வீதம், இயந்திரத் துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் நின்று கொண்டிருந்தனர். எங்களைப் பற்றி அறிந்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
முதல்வர் அறை விசாலமாகவும், மிக அழகாகவும் இருந்தது. அவர் மேஜைக்கு எதிரே ஒரே மாதிரியான, 40 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
சரியாக, 5:30 மணிக்கு சந்திரபாபு நாயுடு உள்ளே நுழைந்தார். அப்போது அவரது கம்ப்யூட்டரில், 'லண்டன் எக்னாமிஸ்ட்' பத்திரிகை தெரிந்தது.
'முதல்வர் அவர்களே, லண்டன் எக்னாமிஸ்ட் பத்திரிகை உங்கள் கம்ப்யூட்டர் திரையில் தெரிகிறதே...' என்று கேட்டேன்.
'நீங்கள் வந்தாலும், வராவிட்டாலும் தினமும் இதைப் பார்ப்பது உண்டு. இந்தியாவில் கம்ப்யூட்டர் பற்றி நன்கு தெரிந்த ஒரு சில முதல்வர்களில் நானும் ஒருவன் என்று நிச்சயமாக சொல்ல முடியும்...' என்றார்.
பேட்டியின் போது, ஆந்திர மாநிலத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார், நாயுடு. எந்த பேப்பரையும் பார்க்காமல் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொன்னார். நான் கேட்காமல் ஒரு விஷயம் சொன்னார்.
காட்டமான வார்த்தைகளால் 'அந்த பெண்மணியை, என் மாமனார் என்.டி.ஆர்., சந்திக்காமல் இருந்திருந்தால், இன்று அவர் உயிரோடு இருந்திருப்பார். அதுமட்டுமல்ல, இந்தியாவின் பிரதமராக கூட அவர் இந்நேரம் இருந்திருப்பார்...' என்றார். அவர், லட்சுமி பார்வதியை தான், குறிப்பிடுகிறார் என்று புரிந்தது.
அன்று காலை, 'அசெம்பிளி' பின்னர் மந்திரிசபையில், 'மீட்டிங்' இரவு, வெளியூர் செல்ல வேண்டும். இவ்வளவு நிர்ப்பந்தங்களுக்கு நடுவே, மிகக்குறைந்த நேரத்தில் சந்திக்க நேரம் கொடுத்தது, அவரது பெருந்தன்மையை எடுத்துக் காட்டியது.
ஆங்கில நாளிதழின், 125வது ஆண்டு விழா!
கடந்த, 2003ல், 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ், 125வது ஆண்டு விழாவை கொண்டாடியது. பிரதமர் வாஜ்பாய், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
'தினமலர்' நாளிதழ் கோயம்புத்துார் பதிப்பாளர் ஆதிமூலம், என்னை தொலைபேசியில் அழைத்து, 'ஹிந்து பத்திரிகை, 125வது ஆண்டுவிழா கொண்டாடுவதை ஒட்டி, 'தினமலர்' நாளிதழில், அந்த பத்திரிகையின் வளர்ச்சி, சாதனைகள் பற்றி விரிவான கட்டுரை எழுத வேண்டும்...' என்று, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி விரும்புவதாகக் கூறினார்.
நானும், 'தினமலர்' கோவை பதிப்பாளர் ஆதிமூலமும் இதை பற்றி விவாதித்து, 'தி ஹிந்து' பத்திரிகை நிர்வாகிகளிடம் கேட்க வேண்டிய, 40 கேள்விகளை தயாரித்து, பரிசீலனைக்காக இயக்குனர் முரளிக்கு, 'பேக்ஸ்' மூலம் அனுப்பி வைத்தோம்.
அவர்கள் அழைத்ததை அடுத்து, 'தி ஹிந்து' அலுவலகம் சென்றேன். 'தினமலர்' ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சார்பாக, 'தி ஹிந்து' நாளிதழ் விரைவில், 10 லட்சம் பிரதிகளை விற்க வேண்டும் என, அவர்களை பாராட்டி, மலர்ச்செண்டு அளித்தேன். இரண்டரை மணி நேரம், 'ஹிந்து' ஆசிரியர் என்.ராம் மற்றும் இயக்குனர் என்.முரளி, பேட்டி அளித்தனர்.
'என் வாழ்க்கையில் இதுவரை இவ்வளவு நேரத்துக்கு யாருக்கும் பேட்டி கொடுத்ததில்லை...' என்று என்னிடம் கூறினார், என்.ராம்.
மறுநாள், 'தினமலர்' ஆசிரியர் ஆர்.கிருஷ்ண மூர்த்தியின் ஆலோசனைபடி, இன்னொரு இயக்குனர், என்.ரவியையும் பேட்டி எடுத்தேன். 'தினமலர்' நாளிதழில் ஒரு பக்கத்திற்கும் கூடுதலாக, இக்கட்டுரை வெளியாகி இருந்தது.
பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு, எனக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர். ஒரு பத்திகையாளராக நானும் சென்றேன்.
அப்போது அங்கே என்னை சந்தித்த, 'தினத்தந்தி' அதிபர், சிவந்தி ஆதித்தனார், 'நீங்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...' என்று பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் அருகில் இருந்த அவரது புதல்வர் பாலசுப்பிரமணிய ஆதித்தனையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
'ஹிந்து' பத்திரிகையின் வளர்ச்சி, சாதனைகள் பற்றி, 'தினமலர்' நாளிதழில் நீண்ட கட்டுரை வெளியிட்டதற்கு, என்.ராம் மற்றும் என்.முரளி இருவரும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து,
'தினமலர்' ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி கடிதம் எழுதினர்.
அதில், மற்ற பத்திரிகைகளுக்கு 'தினமலர்' நாளிதழ் கொடுத்து வரும் மதிப்பை அறிந்து மகிழ்ச்சியாக உள்ளதாகவும், உங்களது நிருபருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன்னை எப்படி சொல்லிக் கொள்ள ஆசைப்படுவார்...
கடந்த, 1947ம் ஆண்டு துவக்கப்பட்ட, 'குமுதம்' இதழுக்கு, 1997ம் ஆண்டு பொன் விழா. அப்போது, 'பொன்விழா புதையல் - பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்' என்று, 96 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டனர். அதில், கடந்த 50 ஆண்டுகள் வெளியான இதழ்களில், தமிழர்களின் சிறப்பான கதைகள், பேட்டிகள் என்று, பல்வேறு விஷயங்களை தேர்ந்தெடுத்து தொகுத்து இருந்தனர்.
இந்த புத்தகத்தில், ரஜத்தின், 'மனம் திறந்து சொல்கிறேன்...' என்ற பெயரில் ஜெயலலிதாவுடன் பேட்டி மற்றும் 'களத்துார் முதல் கல்யாணராமன் வரை' என்ற பெயரில் கமல்ஹாசன் பேட்டியும் இடம்பெற்றன.
— தொடரும்
எஸ். ரஜத்
