PUBLISHED ON : ஜூலை 17, 2022

பா - கே
அலுவலகத்தில், அவரவர் வேலையில் மும்முரமாக இருந்த ஒரு காலை வேளை...
அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, சத்தமாக, 'ச்சே... ஆளும் கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை அடுக்குவதும், அதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் கொடுப்பதும் தொடர்கதையாகி விட்டது.
'இதற்கிடையில், கோவில் நிர்வாகத்துக்கும், அறநிலையத்துறைக்கும் இடையே முட்டல் மோதல். அத்துடன் மடாதிபதிகளின் ஆக்ரோஷ பேச்சு... தினமும் இதே அக்கப்போரா இருக்கு...' என்று அலுத்தபடி, கையிலிருந்த நாளிதழை மேஜை மீது, 'பொத்' என போட்டார்.
'மணி... ஒரே, 'டென்ஷனா' இருக்கு... வர்றியா, கேன்டீனுக்கு போய் டீயும், வடையும் சாப்பிட்டு வரலாம்...' என்று அழைத்தார்.
'நான் வரலை மாமா... நீங்க போயிட்டு வாங்க...' என்று அவரை அனுப்பிவிட்டு, வேலையில் கவனமானேன். ஆனாலும், மாமா சொன்னது மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.
கொஞ்ச நாட்களுக்கு முன், வரலாற்று பேராசிரியர் ஒருவர், சாணக்கியர் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.
மவுரிய வம்சத்தை சேர்ந்த சந்திரகுப்தர் அரசவையில் தலைமை அமைச்சராக இருந்த சாணக்கியர் பற்றியும், அவரது சபதம் பற்றியும் நிறையவே கேள்விப்பட்டுள்ளோம்.
தலைமை அமைச்சராக இருந்தாலும், ஓலைக் குடிசையில், எந்தவித ஆடம்பர வசதியும் இல்லாமல் எளிமையானவராகவே வாழ்ந்து வந்துள்ளார், சாணக்கியர். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை பற்றி, பேராசிரியர் கூறியது இதுதான்:
நாட்டில் உள்ள ஏழைகள் எல்லாம் குளிராலே கஷ்டப்படறதை அறிந்து, நிறைய கம்பளிப் போர்வைகள் வாங்கி, சாணக்கியரோட குடிசைக்கு அனுப்பி, ஏழைகளுக்கு கொடுக்கச் சொன்னார், சந்திரகுப்தர்.
அந்தப் போர்வைகள் எல்லாம் சாணக்கியரோட குடிசைக்குள்ளே ஒரு பக்கமா குவிச்சு வைக்கப்பட்டிருந்தது.
'ராஜா கொடுத்து அனுப்பிய கம்பளிப் போர்வைகள் எல்லாம், சாணக்கியர் குடிசையிலே தான் இருக்கு. இன்னைக்கு ராத்திரி எல்லாரும் துாங்கினதுக்கு அப்புறம் அங்கே போனோம்ன்னா கிளப்பிக்கிட்டு வந்துடலாம்... வேற ஊருக்கு போய் வித்துப் பிழைச்சுக்கலாம்'ன்னு திட்டம் போட்டனர், சில திருடர்கள்.
திட்டமிட்டபடி, நடு இரவில் சாணக்கியரின் குடிசைக்குள் நுழைஞ்சாங்க.
ஒரு பக்கம், கம்பளியெல்லாம் குவிஞ்சு கிடக்க, இன்னொரு பக்கம், தரையில் ஒரு பாயை போட்டு, கிழிஞ்சு போன ஒரு பழைய கம்பளித் துணியாலே போர்த்திக்கிட்டு துாங்கிகிட்டு இருந்தார், சாணக்கியர்.
கம்பளி பூரா கிழிசல் மயமாக இருந்ததால், குளிர்லே அவர் உடம்பு நடுங்கிக்கிட்டிருந்தது.
இதைப் பார்த்ததும், திருடர்களுக்கு ஆச்சரியம்!
'என்ன இது... ஒரு பக்கம் இவ்வளவு புதுக் கம்பளிகள் குவிஞ்சு கிடக்கு... அதையெல்லாம் விட்டுட்டு கிழிஞ்சு போன ஒரு கந்தல் கம்பளியைப் போர்த்திக்கிட்டு கஷ்டப்படறாரே'ன்னு நினைச்சாங்க.
உடனே, அந்த திருடர்கள், வந்த காரியத்தை விட்டுட்டு, சாணக்கியரை எழுப்பி, 'ஐயா... நாங்கள்லாம் திருடர்கள். உங்க வீட்டுல இருக்கிற கம்பளிகளை திருடறதுக்காக இங்கே வந்தோம். ஆனா, உங்க நிலையை பார்த்ததும், எங்களுக்கு ஒரு சந்தேகம். அதைக் கேட்டு தெரிஞ்சுக்கலாம்ங்கிறதுக்காக தான் உங்களை எழுப்பினோம்'ன்னாங்க.
'என்ன சந்தேகம்?'ன்னார், சாணக்கியர்.
'உங்க குடிசைக்குள்ளே ஒரு பக்கம் நல்ல கம்பளியெல்லாம் குவிஞ்சு கிடக்கு. அதை விட்டுட்டு கிழிந்து போன கம்பளியாலே போர்த்திக்கிட்டு கிடக்கறீங்களே... எதுக்காக இப்படி செய்யணும்?'ன்னு கேட்டாங்க.
'அந்தக் கம்பளியை நான் எடுத்தேன்னா, நானும் உங்களை மாதிரித்தானே! நான் வச்சிருக்கிறது கிழிந்து போன கம்பளி தான். ஆனால், கிழிந்து போன கம்பளி கூட இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்கறதுக்காக, சந்திரகுப்தர் கொடுத்தனுப்பியிருக்கிற கம்பளிகள் அதெல்லாம்.
'அந்த ஏழைகள் தான் இந்தப் புதுக் கம்பளிகளுக்குச் சொந்தக்காரங்க. அதை எடுத்து நான் போர்த்திக்கிட்டேன்னா, நானும் திருடன்னுதான் ஆகும். அதனால, அதை நான் எடுக்க மாட்டேன்'னார்.
திருடர்கள் மனசுல முள்ளாலே குத்தினது மாதிரி இருந்தது. 'இனி, திருடவே மாட்டோம்'ன்னு சொல்லி, மன்னிப்பு கேட்டுட்டு போனாங்க...
- இப்படி அவர் கூறியிருந்ததை நினைத்ததும், 'எல்லாரும் சாணக்கியர் ஆயிட முடியுமா? அதுமட்டுமல்ல, உயர்ந்த பதவியில இருக்கிறவங்களுடைய நேர்மை தான் அடிமட்டத்துலே உள்ளவங்க மனசை துாய்மைப்படுத்தணும். இந்தக் காலம் அப்படியா இருக்கு...' என்று நினைத்துக் கொண்டேன்.
ப
'இளமையில் வறுமை' வாழ்க்கை முன்னேற்றத்தை தடுக்குமா?
கண்டிப்பாக தடுக்காது. வறுமையான குடும்பத்தில் பிறந்த எத்தனையோ பேர், தங்களின் எதிர்காலத்தையே மாற்றியிருக்கின்றனர். அதற்கு விடாமுயற்சியும், உழைப்பும் தான்
தேவை. அதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
* தி மாஸ்க் புகழ் நடிகர் ஜிம்கேரி, குடும்ப சூழ்நிலை காரணமாக, பள்ளிப்படிப்பை நிறுத்தி, 15 வயதிலேயே வேலை தேட வேண்டிய நிலைமை. ஒரு பழைய வேனில், தன் குடும்பத்துடன் தங்கிக் கொண்டு முயற்சி செய்தார்.
* பாடகி, நடிகை, நடனப் புகழ் பெற்றவர், ஆடையலங்கார நிபுணர், கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்டவர், ஜெனிபர் லோபேஸ்.
இவரது தாய், நாட்டியத்தில் ஆர்வமுள்ள மகளை, படிப்பை தவிர, வேறு எதிலும் நாட்டம் இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தாராம். விளைவு, வீட்டை விட்டு வெளியேறி, நடனப் பள்ளியில் சேர்ந்த ஜெனிபர், தங்க இடமில்லாமல் ஸ்டுடியோவிலேயே படுத்து உறங்கினார்.
* சிறு வயதிலேயே தந்தையை இழந்தார், சார்லி சாப்ளின். மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டார், தாய். வறுமையின் உச்சகட்டமாக, தங்க இடமில்லாத சார்லி சாப்ளின், லண்டன் நகர வீதிகளில் படுத்து உறங்கி, தன் இளமையை கழித்தார்.
* ராக்கி, ராம்போ படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற, சில்வெஸ்ட்டர் ஸ்டாலோன், சினிமாவுக்கு வருவதற்கு முன், தங்க இடமில்லாமல், பேருந்து நிலையத்தில் படுத்துக் கொள்வார்.
* ஆப்பிள் கம்பெனியின் நிறுவனர், ஸ்டீவ் ஜாப்ஸ். கல்லுாரியில் படித்தபோது, தங்குவதற்கு அறை வசதி இல்லாமல், நண்பர்கள் தங்கியிருந்த அறையில் ஒரு மூலையில் படுத்துக் கொள்வார். தான் சேர்த்து வைத்திருந்த, கோக் பாட்டில்களை கடையில் கொடுத்து, அதில் கிடைக்கும் பணத்தில் உணவு வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும், 11 கி.மீ., துாரம் நடந்து போய், ஹரே கிருஷ்ணா கோவிலில் கிடைக்கும் இலவச உணவை வாங்கிச் சாப்பிட்டு பொழுதைக் கழித்துள்ளார்.
ஆக, வறுமையோடு பிறப்பது, நம் கையில் இல்லை. ஆனால், வறுமையோடு இறப்பதற்கு நாம் தான் காரணம். நம் வாழ்க்கை நம் கையில். நாம் தான் மாற்ற வேண்டும்.
