
பா - கே - ப
'மணி... இந்த, 'ஆர்ட்டிகளை' படித்துப் பாரேன்; விவகாரமா இருக்கு...' என்று கூறி, ஆங்கில நாளிதழ் ஒன்றை, என் கையில் திணித்தார், உதவி ஆசிரியை.
இப்போதெல்லாம் ஆங்கில மொழியில் நன்கு தேறி விட்டதால், நாளிதழில் வெளியான கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன்.
அதில்:
கேரள மாநிலம், திருச்சூரிலிருந்து சில கி.மீ., துாரத்தில் உள்ள ஆற்றின் கரை ஓரம், அடர்ந்த மரங்களுக்கிடையே அமைந்துள்ள நவீன வசதிகளுடன் கூடிய விடுதி ஒன்றில், வெவ்வேறு வயதுள்ள ஆண் - பெண்கள் கூடியிருந்தனர்.
சிலர், யோகா செய்தனர்; சிலர், காலை டிபன் சாப்பிட்டனர்; சிலர், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தனர்; சிலர், அமர்ந்து புத்தகம் படித்தனர். மேலும் சிலர், விவாதங்களில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை. அனைவரும், உடலில் பொட்டு துணி இல்லாமல் அம்மணமாக இருந்தனர்.
திடீரென மழை வர, உடனே, அனைவரும் வாசலுக்கு ஓடிச்சென்று, மழையில் நனைந்தனர். மழை நின்றதும், விடுதிக்குள் சென்று விட்டனர்.
ஒருத்தர் கிதார் வாசிக்க, மற்றவர்கள் சேர்ந்து ஏதோ ஒரு பாடலை பாடினர்.
இந்த அம்மண கூட்ட சந்திப்பினருக்கு சூட்டப்பட்டுள்ள பெயர், 'கேரள இயற்கையாளர்கள்!'
அதாவது இவர்கள், இயற்கையை கொண்டாடுபவர்கள் என்று அர்த்தம். ஆள் நடமாட்டமில்லாத ஏதாவது ஒரு இடத்தில் வாரக் கடையில் அல்லது அரசு பொது விடுமுறை நாளன்று, இவர்கள் கூடுவர். சிலசமயம், யாருடைய வீட்டிலாவது, கூட்டம் நடத்துவதும் உண்டாம்.
இதற்கு, சென்னை மற்றும் பெங்களூரிலிருந்தும் பலர் கலந்து கொள்கின்றனராம்.
அம்மணமாக இருப்பதில் சுதந்திர உணர்வு ஏற்படுவதாகவும், மற்றவர்களோ அல்லது சமூகமோ என்ன நினைப்பரோ என்ற கவலையும் குறைவதாக, இவர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற அம்மண குழுக்கள் மும்பை, ஜெய்ப்பூர், கோல்கட்டா, கான்பூர் மற்றும் ஹைதராபாத் என, பல நகரங்களிலும் பரவியுள்ளதாம்.
வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கும்போது, இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருப்பர். ஆனால், வெளியில் வந்து விட்டால், கூட்டத்துக்கு ஏற்றார்போல் வேஷம் போட்டுக் கொள்வர்.
இவர்களில் ஒரு ஜோடி, நாங்கள் வீட்டில் இருக்கும்போது, அம்மணமாய் இருந்தபடிதான் வீட்டு வேலைகள் எல்லாம் செய்வோம். 'டிவி' பார்ப்போம். வெயில் காலத்தில் இப்படி இருப்பது மிகவும் சவுகர்யமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
பெங்களூருரைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி, ஐந்து, 'அம்மண' குழுக்களை வைத்து, மாதத்துக்கு ஒருமுறை, 'கெட் டு கெதர்' நடத்தி வருகிறாராம்.
'வாட்ஸ் - ஆப்' மற்றும் 'டெலிகிராப்' மூலம் இவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். இதனிடையே, 'செக்ஸ்' ஆசையுடன் உள்ளே நுழைபவர்களை, கண்காணித்து, கடுமையாக எச்சரித்து உடனே வெளியேற்றி விடுவாராம்.
இந்த குழுக்களுக்கு முக்கிய விதிமுறைகள் உள்ளன. அவை:
* ஒருவருக்கொருவர் தொட்டுப் பேசுதல் கூடாது
* டிஜிட்டல் சார்ந்த உபகரணங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை
* எப்போதும் கையில் ஒரு டவல் தயாராக இருக்க வேண்டும். வெளியாட்கள் யாராவது திடீரென வந்துவிட்டால், டவலால் உடலை மறைத்துக் கொள்வது கட்டாயம்
* வீட்டில் அல்லது பொது இடங்களில் மறந்தும், அம்மண கூட்டத்தை பற்றி மூச்சு விடக் கூடாது.
ஒரு அம்மண நபர் கூறிய கருத்து இதுதான்:
நாம் உடுத்தும் ஆடைகளை துவைக்க, ஏராளமான தண்ணீர் செலவாகிறது. துணிகளை தயாரிக்க, மரங்களையும், மிருகங்களையும் கொல்கின்றனர். இதையெல்லாம் தவிர்க்க தான், அம்மணத்தை ஆதரிப்பதாக சொல்கிறார்.
மற்றொரு பெண்மணி, அம்மண பெண்களுக்காக ஒரு, 'மேப்' தயார் செய்து, 'ஆர்வம் உள்ளவர்கள், இந்த இடத்தில் இவர்களை தொடர்பு கொண்டால், கூட்டத்தில் இணைந்து கொள்ளலாம்...' என, ரகசிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த அம்மண குழுவில் இருப்பவர்கள், மாதாந்திர சந்திப்பை இந்தியாவுடன் நிறுத்திக் கொள்ள விரும்புவதில்லை. மாறாக, உலகில் எங்கெங்கு இதற்கு வாய்ப்பு உள்ளதோ அங்கு செல்ல, 'வெகேஷன்' மாதிரி 'ரெகேஷன்' என்ற பெயரில், அம்மண இருப்பிடங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர்.
டெயில்பீஸ்:
* உலகின் முதல் நிர்வாண கிளப், பிரிட்டிஷ் இந்தியாவில், 1891ம் ஆண்டு, தானே நகரில், 'நேக்கட் டிரஸ்ட்' என்ற பெயரில், மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதியால் ஆரம்பிக்கப்பட்டது. அவர், 1894ல் இறந்ததும், இந்த அமைப்பும் முடிவுக்கு வந்தது.
* கோல்கட்டாவில், 'அம்மண' குழுக்கள் அதிகம் இருக்கிறதாம். அடுத்து, பெங்களூரு, மும்பை, அசாம் மற்றும் கேரளா.
* இப்படி வருபவர்களில், 60 சதவீதம் பேர், ஆண்கள் தான். தன் கணவருடன் ஜோடியாக கலந்து கொள்ளவே ஆர்வம் காட்டுகின்றனர், பெண்கள்.
* பொதுவாக, இயற்கையாளர்கள் என அழைக்கப்படுபவர்கள் யார் தெரியுமா? பொது இடங்களில், தைரியமாய் நிர்வாணமாய் நடமாடுபவர்கள் தான்.
* வெளிநாடுகளில் ஏதாவது ஒரு காரணத்துக்காக, அம்மண ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.
* விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது, அம்மணமாக, மைதானத்திற்குள் ஓடுபவர்களும் உண்டு.
* 'பீச்'களில், அம்மணமாக வலம் வரும் ஆண்கள், பெண்கள் அதிகம்.
'நம் நாட்டில் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது. அதனால் தான் விடுதிகளில் சந்திப்பதைக் கூட, ரகசியமாய் செய்ய வேண்டியிருக்கிறது...' என, அலுத்துக் கொள்கிறார், ஒரு அம்மண விரும்பி.
'அம்மாடியோவ்... உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு...' என்று நினைத்துக் கொண்டேன்.
லென்ஸ் மாமாவிடம் விஷயத்தைக் கூற, 'ஏன் மணி... இந்த குழுவோட, 'வாட்ஸ் ஆப்' எண் ஏதாவது கிடைக்கிறதா பார்ப்போம். நாமும் ஒருமுறை போய் தான் வருவோமே...' என்றதும், தலையில் அடித்துக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்தார், உதவி ஆசிரியை.