sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திரும்பிப் பார்க்கிறேன்! (17)

/

திரும்பிப் பார்க்கிறேன்! (17)

திரும்பிப் பார்க்கிறேன்! (17)

திரும்பிப் பார்க்கிறேன்! (17)


PUBLISHED ON : ஆக 14, 2022

Google News

PUBLISHED ON : ஆக 14, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஷோபாவும், நானும்!' - பாலு மகேந்திரா!

நடிகை ஷோபா தற்கொலை செய்து இறந்து போன சமயம்.

'பாலுமகேந்திராவை பேட்டி கண்டு, எழுத வேண்டும்...' என்றார், ரா.கி.,

என் நெருங்கிய நண்பரும், சென்னை தேவி குரூப் தியேட்டர்களின் இயக்குனருமான, கே.என்.வி., என்று அழைக்கப்படும் வரதராஜனிடம் பேசினேன்.

'என் உறவினரான, கவுரி சங்கர், பாலுமகேந்திராவிடம் தொடர்பில் இருக்கிறார். அவர், பாலுவை சந்திக்க ஏற்பாடு செய்வார்...' என்றார்.

தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம், அழியாத கோலங்கள். அதை தயாரித்தது, தேவி பிலிம்ஸ் தான். மறுநாள், சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு அருகே உள்ள, பாலுமகேந்திரா வீட்டிற்கு அழைத்துச் சென்றார், கவுரி சங்கர்.

அவசரமாக அவரை சந்திக்க வந்ததன் காரணத்தை விளக்கினேன்.

'என்னப்பா இது, நான் இப்போது இருக்கும் நிலைமையில், என்கிட்டே பேட்டி கேட்கிறாயே...' என்றார், பாலு.

'எனக்கு நிலைமை புரிகிறது. ஆனாலும், நீங்க நடிகை ஷோபா மேல் வைத்திருந்த அன்பு, காதல், பிரியம் எல்லாம் வாசகர்களுக்கும் தெரியணும். உங்கள் காதல் அவர்களுக்கு புரியணும். அதற்காகவாவது நீங்கள் என்னிடம் பேச வேண்டும்...' என்றேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு சம்மதித்தார்.

'ஷோபாவும், நானும்' என்ற தொடர் கட்டுரை, 17 வாரங்கள் வெளியானது.

கணவன் - மனைவி இருவருக்கிடையே உள்ள அன்பு, காதல், அக்கறை, சில இடங்களில் அந்தரங்கம் ஆகியவற்றை, தெளிந்த நீரோடை போல உணர்வுப்பூர்வமாக சொல்லியிருப்பார், பாலு மகேந்திரா.

மந்திர எண்!

'தமிழுக்கு பெருமை சேர்த்த எஸ்.ஏ.பி.,' என்ற தலைப்பில், 'நமது செட்டிநாடு' என்ற இதழில், பேட்டிக் கட்டுரை எழுதினேன்.

பேட்டி கொடுத்தவர், நெருங்கிய நண்பரும், 'குமுதம்' இதழ் முன்னாள் துணை ஆசிரியருமான, ஜ.ரா.சுந்தரேசன். எஸ்.ஏ.பி., உடன் மிகவும் நெருக்கமாக பழகி இருக்கும் சுந்தரேசன், ஆசிரியரைப் பற்றி, பிறர் அறியாத நிறைய செய்திகளை குறிப்பிட்டுச் சொன்னார்.

'ஆசிரியர், தொலைபேசியில் பேசும்போது, 'ஹரி ஓம்' என்று சொல்வார். முடிக்கும் போதும், 'ஹரி ஓம்' தான். 10,73,001. இது ஒரு மந்திர எண். ஒருமுறை எஸ்.ஏ.பி., கனவில் தோன்றிய மந்திர எண் இது. 10,73,001 'குமுதம்' பிரதிகள் விற்க வேண்டும்; விற்பனையில் சாதனை செய்ய வேண்டும் என்று, ஆசிரியரின் கனவில் தோன்றியது.

'ஏன் அந்த கனவு வந்தது என்பது, அவருக்கு தெரியாது. வாரம்தோறும், 'குமுதம்' அலுவலகத்தில் நடைபெறும் பிரார்த்தனையின் போதும், இந்த மந்திர எண்ணுக்காக பிரார்த்தனை செய்வோம். பல ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனையாகும் வாரப் பத்திரிக்கை என்ற சிறப்பை, 'குமுதம்' இதழ் பெற்றிருந்தது.

'இன்னும் பல ஆண்டுகள், எஸ்.ஏ.பி., உயிருடன் இருந்திருந்தால், இதுவும் சாத்தியமாகி இருக்கும் என எனக்கு தோன்றுகிறது...' என்றார், சுந்தரேசன்.

சில்க் ஸ்மிதா பாணி!

கடந்த, 80 மற்றும் 90களில், தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை வகுத்து, தவிர்க்க முடியாத சக்தியாக சாதித்துக் காட்டியவர், சில்க் ஸ்மிதா. தமிழ் படங்கள் மற்றும் பிற மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

'தினமலர் தீபாவளி மலரு'க்காக, அவரை சந்தித்து ஒரு கட்டுரை செய்யலாம் என்று பொறுப்பாசிரியரிடம் அனுமதி கேட்டேன்; அவரும் ஒப்புக் கொண்டார்.

சில்க் ஸ்மிதாவிடம், முழுமையான, 'ப்ரொபஷனல்' பேட்டிக்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும் நேரம் கேட்டேன்; உடனே ஒப்புக் கொண்டார்.

எந்த மாதிரி உடைகள் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று, நாங்கள் கூறிய ஆலோசனைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். சாதாரணமாக இருப்பதற்கும், புகைபடத்திற்கு, 'போஸ்' கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

'ஷாட் ரெடி...' என்று சொன்னால், அடுத்த வினாடியே தன் கண்களில், 'கிளாமரை' வரவழைத்துக் கொள்வார். என் சகோதரர் உத்ரா நிறைய படங்கள் எடுத்தார்.

என்னுடைய மோட்டர் பைக்கின் மீது படுத்தபடி புகைப்படத்திற்கு, 'போஸ்' கொடுத்தார். நாங்கள் நினைத்ததை விட, சிறப்பாக புகைப்படங்கள் கிடைத்தன. 'தினமலர் தீபாவளி மலரில்' சில்க் ஸ்மிதாவின் பல படங்களுடன், இந்த பேட்டி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

முட்டை அபிஷேகம்!

அக்., 20, 1983, 'குமுதம்' இதழில், 'தேர்தலில் ஜெயித்தால் முட்டை அபிஷேகம்' என்ற தலைப்பில் ஒரு பேட்டியை எழுதி இருந்தேன்.

சென்னை மருத்துவக் கல்லுாரி யூனியனுக்கு தலைவராக, முதன்முறையாக கீதா பாலன் என்ற மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டார்; சென்னை பல் மருத்துவக் கல்லுாரி, இறுதி ஆண்டு மாணவி. அவர் பெற்ற ஓட்டுகள் 546. அடுத்து வந்தவரை விட, 36 ஓட்டுகள் அதிகம்.

கீதாவிற்கும் அவரது நண்பர்களுக்கும் பெருமகிழ்ச்சி. கீதாவை கல்லுாரியில் இருக்கும் அழுக்கு நீர் குளத்தில் துாக்கி போட்டனர். இதுதான் அங்கு வழக்கமாம். பெண்கள் விடுதியில், அடுத்து முட்டை அபிஷேகம் தான். ஆண்கள் விடுதியில் ரங்கோலி பவுடர், 'ஷேவிங் க்ரீம்' அபிஷேகம் நடைபெறும். எதையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சென்னை மருத்துவக் கல்லுாரியில் சாதனை படைத்த கீதா பாலன், 'ஆனந்த விகடன்' ஆசிரியர் பாலனின் மூன்றாவது மகள். கீதாவை பேட்டி எடுக்க, ஜெமினி ஹவுஸ் சென்றிருந்த போது, எஸ்.எஸ்.வாசனின் மனைவியும், கீதாவின் பாட்டியுமான பட்டம்மாள் வாசனை சந்தித்தேன். நாங்கள் குடும்ப நண்பர்கள்.

என் அக்கா குயிலி ராஜேஸ்வரி எழுதிய, 'குடும்பத்தின் குலவிளக்கு' என்ற நுாலுக்கு பட்டம்மாள் வாசன் முன்னுரை எழுதி கொடுத்திருந்தார்.

பெண்கள் கல்லுாரியில் நடந்த அசம்பாவிதம் பற்றி அடுத்த இதழில்...

தொடரும்

எஸ். ரஜத்







      Dinamalar
      Follow us