
எந்த வேலை என்றால் என்ன?
குடியிருப்பு வளாகம் ஒன்றில் தனித்தனியாக, 100 வீடுகள். அங்கு வசிக்கும் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலோர், கார் வைத்துள்ளனர். படிப்பை முடித்த நான்கு இளைஞர்கள், கார்களை சுத்தப்படுத்தி கொடுப்பதையே வேலையாக செய்து, மாத வருவாய் ஈட்டுகின்றனர்.
இளைஞர்கள் நால்வரும், காலை 5:00 மணிக்கு, பைக்கில் வருவர். தங்களை ஒப்பந்தம் செய்தவர்களின் கார்களை சுத்தம் செய்வர்.
சிறிய ரக கார்களுக்கு மாதம் 1,000 ரூபாயும், பெரிய ரக கார்களுக்கு 1,500 ரூபாயும் வாங்குகின்றனர். இதன் மூலம், ஒரு இளைஞருக்கு, மாதம், சராசரியாக 40- ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.
காலை, 10:00 மணிக்குள் வேலை முடித்து விட்டு, நான்கு இளைஞர்களும் மெயின் ரோடிலுள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில் சூப்பர்வைசர்களாக, இரவு, 9-:00 மணி வரை வேலை பார்க்கின்றனர். அதில், ஒரு நபருக்கு 30- ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் கிடைக்கிறது. இவ்வாறாக, ஒவ்வொரு இளைஞரும், மாதம், 70- ஆயிரம் சம்பாதிக்கின்றனர்.
உழைப்பையே முதலீடாகக் கொண்டு வருவாய் தேடும் இளைஞர்களின் செயல், மற்றவர்களுக்கு உதாரணமாக உள்ளது அல்லவா!
- டி.ஜெயசிங், கோவை.
தேச பக்தி எனும் விதை!
பல மாத இடைவெளிக்கு பின், உறவினர் ஒருவரை பார்க்க, அவரது இல்லம் சென்றேன். அன்று, ஞாயிறு காலை என்பதால், அவர், ராம நாம ஜெபத்தில் லயித்திருந்தார். சில நிமிடங்களில் அவர் வர, பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது, பக்கத்து வீட்டு சிறுவனும், அவன் அம்மாவும், உறவினரை பார்க்க வந்தனர். வெ ள்ளை நிற சட்டை, காக்கி பேன்ட், கருப்பு ஷூ மற்றும் தொப்பி என, சீருடையில் சிறுவன் இருந்தது, என்னை கவர்ந்தது. அதைப் பற்றி விசாரித்தேன்.
முக மலர்ச்சியுடன், 'மாமா, நமஸ்தே...' என்று சொல்லி, கைகூப்பியபடி, 'எனக்கு, 7 வயது. பக்கத்தில் இருக்கும் மைதானத்தில், பயிற்சி வகுப்புகள் முடித்து வருகிறேன்...' என்றான்.
அவன் அம்மாவிடம், 'பையன் என்ன சொல்கிறான்...' என்றேன்.
'ஒரு வருஷமா, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நடத்தும் வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கிறோம்...' என்றார்.
அச்சிறுவனிடம், 'அங்கே என்னெல்லாம் சொல்லித் தருகின்றனர்...' என்று கேட்டேன்.
'பொழுது புலர்ந்தது....' என்ற பாரதியின் பாட்டில் துவங்கி, ஏகாத்மதா ஸ்தோத்ரம், உடற்பயிற்சி, யோகா, சூரிய நமஸ்காரம், விளையாட்டு, தமிழ் செய்யுள், ஸ்லோகம், பாரத தேச வரலாறு, குழு விவாதம் உட்பட நமஸ்தே ஸதா வத்சலே என்ற பிரார்த்தனையையும் நேர்த்தியோடு பாடிக் காட்டியதும், வியப்பாய் இருந்தது.
இன்றைய காலகட்டத்தில், நம் பாரதத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ராணுவத்திற்கு இணையான இத்தகைய பயிற்சியின் அவசியமும், அடுத்த தலைமுறைக்கான அடித்தளமும் தேவை என்று உணர்த்தியது.
பிற்காலத்தில், இவன் ஒரு சிறந்த மனிதனாக வருவான் என்ற எண்ணத்தில், அந்த சிறுவனின் குடும்பத்தினரையும் வாழ்த்தி, வந்தேன். மேலும், 75வது சுதந்திர தினம் கொண்டாடும் இத்தருணத்தில், இதுபோன்ற வகுப்புகளில், நம் வீட்டு குழந்தைகளையும் சேர்க்க யோசிக்கலாமே!
- பா. சுந்தர், சென்னை.
பாட்டியின் சமயோஜிதம்!
நான் சமையலுக்கான காய்கறிகளை தினமும் ஒரு பாட்டியிடம் வாங்குவேன். ஒருநாள் அந்தப் பாட்டி, தன்னுடன் ஒரு சிறுவனை அழைத்து வந்திருந்தார்.
'என்ன பாட்டி, படிக்கிற உங்க பேரனை வேலை வாங்குறீங்க?' என்றேன்.
'இவனுக்கு அப்பா - அம்மா இல்ல. நான் தான் வளர்க்கிறேன். பள்ளிக்கூடத்துல, இவனுக்கு கூட்டல், கழித்தல் கணக்கே வர மாட்டேங்குதுன்னு சொல்றாங்க, டீச்சர். டியூசன் வைக்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்ல; இவனை படிக்க வைக்கணும்ன்னு ஆசை. அதனால, வியாபாரத்துக்கு வரும்போது கூட்டிட்டு போகலாம்ன்னு முடிவு எடுத்தேன்.
'காலையில மொத்தமா காய்கறி வாங்குறவங்ககிட்ட, இவன் கையில பணத்தை கொடுத்து, எவ்வளவு கொடுக்கிறோம் என்று கணக்கு வைக்க சொல்வேன். அப்புறம், ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து, காய்கறியை வித்து, காசை என் பேரன்கிட்ட கொடுக்க சொல்வேன்.
'எந்த காய்கறி என்ன விலை; கால் கிலோ, அரைகிலோவுக்கு எவ்வளவு காசு வாங்கணும்ன்னு கணக்கு பார்த்து வாங்கச் சொல்லி கொடுத்தேன்.
'நான் படிக்கல. ஆனா, இந்த வியாபாரம் பண்றதுனால காசு கணக்கு மட்டும் பார்க்கத் தெரியும். எனக்கு தெரிஞ்சதைத்தானே பேரனுக்கு சொல்லிக் கொடுக்க முடியும். இப்படி கொஞ்ச நாளா கூட்டிட்டு வர்றதுல, கொஞ்சம் கொஞ்சமா இந்த காசு கணக்கு பார்க்கத் தெரிஞ்சிருக்கான்.
'சமீபத்தில் பேரனின், கணக்கு டீச்சர்கிட்ட கேட்டேன். 'கணக்கை சொல்லிக் கொடுத்தா, ஒழுங்கா போடுறான்'னு சொல்றாங்க...' என்றார், பாட்டி.
அந்த காலத்து பாட்டி, கணக்கு புரியாத பேரனுக்கு, சுலபமா சொல்லிக் கொடுத்து இருப்பதை நினைத்து, ஆச்சரியமடைந்தேன். பாட்டியின் அனுபவத்தையும், சமயோஜித புத்தியையும் பாராட்டி, அந்த பையனின் படிப்புக்கும், என்னால் முடிந்த உதவிகளை செய்வதாக, உறுதி அளித்தேன்.
- வசந்தி ரகு, விழுப்புரம்.