sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 11, 2022

Google News

PUBLISHED ON : செப் 11, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே



பல்கலைக் கழகம் ஒன்றில், சில ஆண்டுகள் மட்டுமே வரலாற்று பேராசிரியராக பணிபுரிந்தவர், அவர். அப்போது, அவரை சந்தித்துள்ளேன். அதன்பின், வெளிநாடு சென்று, 'ஆர்க்கியாலஜி' எனப்படும், தொல்பொருள் ஆராய்ச்சியில் மேற்படிப்பு படித்து, இந்தியா முழுக்க சுற்றி, பல ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். கீழடி அகழ் ஆய்வு பணியிலும், இவருக்கு பங்குண்டு.

அன்று, ஆசிரியரை சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். அவரது கையிலிருந்த, 'மாவீரன் ராஜேந்திர சோழன்' என்ற ஆங்கில புத்தகத்தை, நான் வெறித்து பார்ப்பதை அறிந்து, 'ஆசிரியரை சந்தித்த பின், பலருக்கும் தெரியாத, ராஜேந்திர சோழன் பற்றி உனக்கு சொல்கிறேன்...' என்று கூறிச் சென்றார்.

ஆசிரியர் அறையிலிருந்து திரும்பி வந்தவர், என் கேபினுக்கு வந்து, ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் பற்றி கூற ஆரம்பித்தார்:

மாவீரன் என்றாலே, அலெக்சாண்டர், நெப்போலியன் மற்றும் செங்கிஸ்கான் என்று கூறுவதை, இனிமேல் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய துணைக் கண்டத்திலேயே, மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர், மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே.

தன் ஆயுட் காலத்தில், 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டு, 35 நாடுகளை வெற்றி கண்டவர். அவரது போர்ப்படையில், 60 ஆயிரம் யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக கூறுகின்றன, செப்பேடுகள்.

இன்றைய காலகட்டத்தில், ஒரு பசு மாட்டிற்கு தினமும் ஆகும் தீவன செலவு, 200 ரூபாய். 10 மாட்டிற்கு ஆகும் செலவு, 2,000 ரூபாய். ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக, 60 ஆயிரம் ரூபாய்.

ஒரு மாட்டை வளர்த்தால், அதன் மூலம் பெறப்படும் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றால் லாபம் ஈட்ட முடியும். ஆனால், எந்த லாபத்தையும் வழங்காத, 60 ஆயிரம் யானைகளையும், 5 லட்சம் குதிரைகளையும், ராஜேந்திர சோழன் பராமரித்தது எதற்காக தெரியுமா? போர் புரிவதற்காக மட்டும் தான்.

யானைப் படை மற்றும் குதிரைப் படையே லட்சக்கணக்கில் வைத்திருந்தவனின், காலாட் படை எவ்வளவு இருந்திருக்கும்?

தன், 17ம் வயதில், இளவரசனாக இருந்த ராஜேந்திர சோழன் ஈடுபட்ட போர்களில், அவனுடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை, 90 ஆயிரம்.

கடந்த, 1016ம் ஆண்டுக்கு பிறகு, சோழர் படை முழுவதும், அவன் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது, 20 லட்சம் வீரர்கள், அவன் படையில் இருந்தனர். தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு மற்றும் பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்கும்? நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்.

அத்தனை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவன் நாட்டை எவ்வளவு செழிப்பாக வைத்திருந்திருப்பான் என்பதை, கற்பனை செய்யுங்கள். மாதக்கணக்கில் வீரர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போதும், அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பர் அல்லவா... தஞ்சை, டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு, ராஜேந்திர சோழனே முதற்காரணம்.

எதிரிகள், தன் நாட்டை அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக, தன் தந்தை ராஜராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து, ஜெயங்கொண்ட சோழ புரத்திற்கு, தன் தலைமை இடத்தை மாற்றினான், ராஜேந்திர சோழன்.

உழவர்களின் மேல் அவ்வளவு வாஞ்சை. ராஜேந்திர சோழன், தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக, காடுகளை வெட்டி, சீர்படுத்தினான் என்பதற்கு, இன்றைய அரியலுார் மாவட்டத்தில் உள்ள, 'படை நிலை காடுவெட்டி' என்ற ஊரே சாட்சி.

மேலும், 9,656 கி.மீ.,க்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை, 10 ஆயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பதை, கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இந்தியாவை பிடிப்பதற்கு பிரிட்டிஷ், பிரெஞ்ச் அரசுகள் கூட அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை.

ஒரு நாட்டைப் பிடிக்க, ஆறு மாதங்கள் முதல், இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தன் யானைகள், குதிரைகள் மற்றும் காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றான் என்றால், அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?

உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக்கணக்கான வீரர்களுக்கும், குதிரைகளுக்கும், மாதக்கணக்கில் துாய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்? அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படியானால், கடல் நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை அறிந்தவனா அவன்?

போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவனுடன் சென்றிருக்க வேண்டும்? மருத்துவத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற குழுவை அவன் பெற்றிருக்கவில்லை என்றால், 60 ஆண்டுகளாக, தொடர் வெற்றி பெற்றிருக்க முடியுமா?

தற்போதைய, இந்தோனேஷியா, மலேஷியா, சீனா, கம்போடியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளை, கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன் அவன். அதுவும் குறிப்பாக, ஸ்ரீவிஜய நாடு, பெரும் வணிக நாடாக விளங்கியது.

உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம். நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர் வீரர்கள் அவசியம்! அப்படிப்பட்ட சிறந்த போர் வீரர்களை துவம்சம் செய்து, பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவன், ராஜேந்திர சோழன்.

தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில் தான் உலகம் முழுவதும் பயணம் செய்து, பெரும் பணம் ஈட்டினர்.

நம் அறிவுசார் காப்பியங்களான, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சிவபுராணம், திருக்குறள் மற்றும் மன்னரின் நுால்கள் உள்ளிட்ட பலவற்றையும், பாடசாலைகள் அமைத்து, அதன் மூலம் பாதுகாத்தவன் அவன்.

முக்கியமாக, பல்வேறு பொழுதுபோக்குகள் இருக்கும் இந்த நவ யுக காலத்திலேயே, நமக்குள் தேவையில்லாத ஜாதி சண்டைகள் வருகிறது. ஆனால், அந்த காலத்தில் பல ஜாதி பிரிவை உள்ளடக்கிய லட்சக்கணக்கான போர் வீரர்கள் இடையே எந்தவித, ஜாதி சண்டையும் வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஏடுகளும் கூறவில்லை.

சமூகநீதியின் படி செம்மையான ஆட்சிபுரிந்த சக்கரவர்த்தி அவன்.

தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் அவன் ஒருவனே.

நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை, நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தரணும்.

- என்று கூறி முடித்தார், பேராசிரியர்.

பேராசிரியர் கூறியதைக் கேட்டதும், பிரமித்துப் போனேன்.






      Dinamalar
      Follow us