
பா - கே
அன்று காலை வழக்கம்போல், அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, என் பக்கத்து கேபினில் இருந்த, உ.ஆசிரியையின் டேபிளில், தமாஷ் பகுதிக்கு வந்திருந்த ஏராளமான தபால்கள் குவிக்கப்பட்டிருந்தன. அதை ஒவ்வொன்றாக எடுத்து படிப்பதும், வைப்பதுமாக இருந்தார், உ.ஆ.,அச்சமயம் அலுவலகத்தினுள் நுழைந்த லென்ஸ் மாமா, உ.ஆ., டேபிள் முன் ஒரு வினாடி நின்று, 'என்னம்மா தபால் கடலில் மூழ்கி, முத்தெடுக்கிறாய் போலிருக்கு...' என்று, 'கமென்ட்' அடித்தார்.'மாமா... கடுப்பேத்தாதீங்க; நானே, 'டென்ஷனா' இருக்கேன். மூன்று வாரத்துக்கு முன், வாரமலர் இதழில் தமாஷ் பக்கம் இடம்பெறவில்லைன்னு ஏகப்பட்ட வாசகர்கள் புலம்பி தள்ளி விட்டனர். 'இனி, வாரா வாரம் தமாஷ் பக்கம் கண்டிப்பாக இடம்பெறணும்'ன்னு உத்தரவு போட்டுட்டார், பொறுப்பாசிரியர்.'அதான், முன்கூட்டியே தமாஷ்களை தேர்ந்தெடுத்து, பொறுப்பாசிரியரின் இறுதி கட்ட தேர்வுக்கு அனுப்ப வேண்டும்...' என்றார், உ.ஆ.,'சரி, சரி... நான் வேணா தேர்ந்தெடுத்து தரட்டுமா...' என்றார், லென்ஸ் மாமா.'ஐயோடா சாமி... வேண்டவே வேண்டாம். நீர் என்ன மாதிரி தமாஷ்களை தேர்ந்தெடுப்பீர் என, எனக்குத் தெரியும். உம், 'சரக்கு' சமாசாரம் பற்றி, அந்துமணி கேள்வி - பதில் பகுதியில், அறிந்த வாசகர் ஒருவர், 'உம் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைக்கணும்'ன்னு கடிதம் எழுதியிருக்கிறார். அதை, என்னிடமும் காட்டி விட்டார், அந்துமணி...' என்றார்.
'அப்படியா மணி... இதை என்னிடம் சொல்லவே இல்லையே...' என்றவர், உ.ஆ., பக்கம் திரும்பி, 'அதனால் என்ன... அந்த வாசகரின் போன் நம்பர் சொல்லும்மா, கொஞ்ச நாளிலேயே அவரை என் பாணிக்கு மாற்றி, ஒரு சிறந்த எழுத்தாளரா மாற்றிக் காட்டுகிறேன்...' என்று சவால் விட்டார்.'உம்மக்கிட்ட போய் சொன்னேன் பாரு...' என்று அலுத்துக் கொண்ட உ.ஆசிரியையிடம், 'தமாஷ்களை தேர்ந்தெடுப்பது அவ்வளவு சிரமமா...' என்றேன், நான்.'என்ன அப்படி கேட்டுட்ட... சொல்றேன் கேளு, மணி...' என்று கூற ஆரம்பித்தார், உ.ஆ.,: தமாஷ்களில் பல விஷயங்கள் இருக்கிறது, மணி. எழுத்தில் ஆர்வம் உள்ள வாசகர்கள், தொடர்ந்து பல பத்திரிகைகளுக்கும் தமாஷ் எழுதும் தமாஷ் எழுத்தாளர்கள், படித்த தமாஷ்களில் ஓரிரு வார்த்தைகளை மாற்றி காப்பியடித்து எழுதும் ஆசாமிகள் என, மூன்று வகையான நபர்களிடமிருந்து நமக்கு தமாஷ்கள் வருகின்றன.அவற்றில் சில தமாஷ்கள் மட்டுமே, படித்தவுடன் நம்மை சிரிக்க வைக்கும். சிரிப்பே வராத, ஆனால், படிக்க சுவாரஸ்யமான எதுகை மோனை வார்த்தைகளுடன் உள்ள தமாஷ்களும் வருவதுண்டு.மன்னர் தமாஷ், டாக்டர் தமாஷ், 'டிவி' சீரியல் தமாஷ், தலைவர் தமாஷ், கபாலி தமாஷ், மாமியார் - மருமகன் தமாஷ் மற்றும் உ.பா., தமாஷ் என, வகை வகையான தமாஷ்களை எழுதுகின்றனர்.இதைத் தாண்டி சிந்தித்து, சிரிப்பை வரவழைக்கும் தமாஷ்களை எழுதுபவர்கள் மிகச்சிலரே.அனுப்பும் படைப்புகளின் வடிவம் விதவிதமாக இருக்கும். ஒரே நபர், பல முகவரிகளை பயன்படுத்தி, பல்வேறு பெயர்களில் தமாஷ் அனுப்புவதும் உண்டு.பெயர், முகவரி, ஊர் எல்லாமே வேறு வேறாக இருக்கும். ஆனாலும், கையெழுத்தும், தமாஷ்களை எழுதும் பாணியும் அவை ஒரே நபரின் படைப்புகள் என்பதை எளிதில் காட்டிக் கொடுத்து விடும். இப்படி, எண்ணிக்கையை கூட்டுவதற்காக, ஒரிஜினலாக அவர்கள் எழுதும் தமாஷ்களோடு, ஏற்கனவே வெளிவந்த ஒரு சில தமாஷ்களையும் ஊடே செருகி விடுவர். செருகப்பட்ட இந்த காப்பி தமாஷ்களை படிக்கும்போது, அவர் எழுதிய பிற தமாஷ்களும் காப்பியாக இருக்குமோ என்று, அனைத்தும் நிராகரிக்கப்படுவதும் உண்டு.ஒரே தமாஷை இரண்டு பேர் எழுதியிருந்தால், அது வேறு பத்திரிகையில் வெளிவந்த தமாஷின் காப்பி என, உடனே புரிந்து கொள்ளலாம். தமாஷை எழுதிய இருவருமே பரிசீலனையிலிருந்து நிராகரிக்கப்படுவர். 'வாட்ஸ் ஆப்'பில் வலம் வரும் துணுக்குகளை, தமாஷாக மாற்றி சிலர் அனுப்புவர்; அவையும் நிராகரிக்கப்படும்.தங்கள் முகவரியையும், வாரமலர் இதழ் முகவரியையும் ரப்பர் ஸ்டாம்ப் செய்து, பயன்படுத்துபவர்களும் உண்டு. சிலரது ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை தெளிவாக இல்லாமல், அவர்கள் முகவரியை கண்டுபிடிப்பது, தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும்.ஒரே போஸ்ட் கார்டில் நுணுக்கி நுணுக்கி சிலர் எழுதும் தமாஷ்களை படிப்பதற்குள் கண் வலியே வந்து விடும்.மயிலாப்பூர் - சாரதி டேச்சு, விழுப்புரம் - பி.சி.ரகு, கோவிலாம்பூண்டி - பாலாஜி கணேஷ், மாடம்பாக்கம் - அஜித், தஞ்சாவூர் - வி.ரேவதி மற்றும் காரைக்குடி - பெ.பாண்டியன் போன்றோர், குண்டு குண்டான எழுத்தில், தெளிவாக எழுதுவதால், படித்து, பரிசீலிக்க சுலபமாக இருக்கும்.கோவை - டி.கே.சுகுமார், தமாஷ்களோடு, ஓரிரு வரி கடிதமும் எழுதியிருப்பார்.வந்தவாசி - பா.ஜெயகுமார், அஞ்சல் அட்டையின் இரண்டு பக்கமும், பக்கத்துக்கு ஒரு தமாஷ் வீதம் எழுதி அனுப்புவார்.அ.பேச்சியப்பன் மற்றும் மேற்கு மாம்பலம் லெ.நா.சிவக்குமார் ஆகியோர் அஞ்சல் அட்டையின் ஒரு பக்கத்தில், இரண்டு தமாஷ்களை மட்டும் எழுதுவர்.தென்காசி மாவட்டம், பாப்பான்குளம் - ஆ.மாடக்கண்ணு, திருநெல்வேலி - எஸ்.முகமது யூசுப், சென்னை - அம்பை தேவா, பி.ஜி.பி., இசக்கி, திருத்தங்கல் -ஆர்.சுப்பு, வேம்பார் - மு.க.இப்ராஹிம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆலுவா சி.ஆர்.ஹரிஹரன் உள்ளிட்ட பலரும், தற்போது, 'இ - மெயில்' வழியாக தமாஷ்களை அனுப்ப ஆரம்பித்து விட்டனர்.'இ-மெயில்' மூலம் அனுப்பப்படும் தமாஷ்கள் தெளிவாகவும், படிப்பதற்கு எளிதாகவும் இருப்பதால், அவை உடனுக்குடன் பரிசீலிக்கப்படுகின்றன. தகுதியான தமாஷ்களை, பொறுப்பாசிரியர் தேர்வு செய்ய வசதியாக, ஒவ்வொரு நாளும் மாலைக்குள் அவரின் டேபிளுக்கு சென்று விடும்.- இவ்வாறு கூறி முடித்தார், அந்த உதவியாசிரியை.'தமாஷில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா...' என்று, நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பொறுப்பாசிரியரிடமிருந்து அழைப்பு வர, தேர்ந்தெடுத்த சில தமாஷ்களை எடுத்துக் கொண்டு ஓடினார், உ.ஆ.,

