PUBLISHED ON : அக் 09, 2022

மேடையில் தடுமாறி விழுந்ததும், எம்.ஜி.ஆர்., என்ன சொல்வாரோ என்று பயந்த சங்கர், அவரையே பார்த்தார்; எந்த சலனமும் இல்லாமல் எம்.ஜி.ஆரும் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென சங்கர் மூளைக்குள், ஒரு மின் வெட்டு.
தரையிலிருந்து விருட்டென எழுந்தவர், வாளை மேல் நோக்கி பிடித்தபடி, 'ஆட்சியில் இருப்பவர்களை கவிழ்க்க சதிகாரர்கள், இப்படியும் காலை வாரி விடுவது உண்டு. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், நான் பின்வாங்க மாட்டேன். இறுதி வரை நாட்டுக்காக போராடுவேன்...' என, சொந்த சரக்காக, சில வசனங்களை பேசினார். சங்கரின் சமயோசிதத்தை கண்டு, முதல் நபராக கை தட்டினார், எம்.ஜி.ஆர்.,நாடகம் முடிந்த பின், குழுவினரை பாராட்டி பேசிய எம்.ஜி.ஆர்., சங்கரை பாராட்டத் தவறவில்லை.'ஒரு நடிகன் அல்லது நடிகையின் நடிப்புத் திறனை அளவிட, சிறந்த அளவுகோல் நாடகங்கள் தான். சினிமாவில் தவறு நேர்ந்தால், 'ரீ டேக்' என, எத்தனை முறை வேண்டுமானாலும் சரி செய்து கொள்ள முடியும். ஆனால், நாடகத்தில் அந்த வாய்ப்பு அறவே இல்லை.'இதை உணர்ந்து நாடக நடிகர்கள், நடிப்பில் தவறுகள் நேராதபடியும், நேர்ந்து விட்டால், பார்வையாளர்கள் உணர்வதற்கு முன், அவற்றை சமாளிக்கும் வகையில், தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம்.'இல்லையென்றால், எவ்வளவு சீரியசான நாடகம் என்றாலும், பல மணி நேரம் பார்வையாளர்கள் அதை கண்டுகளித்திருந்தாலும், ஒரு நொடியில் அது கேலிக்குரியதாகி விடும்.'அந்த வகையில் இளைஞர் சங்கர், தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை காட்சிக்கு காட்சி உணர்த்தினார். எதிர்காலத்தில் சிறந்த நடிகர் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் உள்ளன. நாடகத்தில் பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்...' என, முத்தாய்ப்பாய் பேசினார், எம்.ஜி.ஆர்.,அவருக்கு பிறகு பேசிய, நாகி ரெட்டியார், 'இளைஞர் சங்கர், ஒவ்வொரு காட்சியிலும் அநாயசமாக நடித்திருக்கிறார். விரைவில், அவரை சினிமாவில் பார்க்க முடியும் என நினைக்கிறேன்...' என, ஆசிர்வாதமான வார்த்தைகளை அள்ளித் தெளித்தார்.மனம் நெகிழ்ந்து நின்றிருந்தார், சங்கர். தன் லட்சியத்தை அடைவதற்கான துாரம் வெகு தொலைவில் இல்லை என, அவர் மனம் நம்ப, அன்றைய நாள் காரணமானது.சங்கர் குடும்பம் வசித்து வந்த மந்தைவெளியில், அவரது பக்கத்து வீட்டில் ராமதாஸ் என்பவர் குடியிருந்தார். சினிமா துறையில் ஓரளவு பழக்கம் கொண்ட நபர். பின்னாளில், சங்கரின் நெருங்கிய நண்பராக ஆனவர்.நாடகம் இல்லாத நாட்களில் சங்கர், ராமதாசுடன் பொழுதை கழிப்பது வழக்கம். சங்கரின் நாடக ஆர்வம், சினிமா வாய்ப்புக்காக முயல்வது, குடும்பத்தினரது எதிர்ப்பு போன்றவை தெரிந்திருந்த அவர், தன்னாலான வழிகளிலும் ஏதாவது உதவ முடியுமா என யோசித்து வந்தார். அந்த முயற்சிகளில் ஒன்றாக, தனக்கு தெரிந்த பிரபல இசையமைப்பாளர், டி.ஆர்.பாப்பாவிடம், சங்கரை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.சில தினங்கள் கழித்து நினைவுபடுத்துமாறு கூறி, அவர்களை அனுப்பி விட்டார், பாப்பா.இந்நிலையில், 'சிட்டாடல்' நிறுவனம், திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டிருந்த தகவல், பாப்பாவுக்கு வந்தது. பழம் நழுவி பாலில் விழுந்தது. சிட்டாடலின் ஆஸ்தான இசையமைப்பாளர் அவர் தான்.ராமதாசின் கோரிக்கையை நிறைவேற்ற, இதுவே உகந்த நேரம் என கருதினார், பாப்பா. ராமதாஸ் மூலம், மறுநாள் காலை தன்னை வந்து சந்திக்கும்படி, சங்கருக்கு தகவல் சொல்லி அனுப்பினார்.மறுநாள் விடியற்காலை, வாயில் பல் குச்சியை வைத்தபடி, தன் வீட்டின் மாடியில் உலவிக் கொண்டிருந்த பாப்பா, கீழே சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு படியேறிக் கொண்டிருந்தார், சங்கர்.அவ்வளவு காலையில் வந்த சங்கரின் ஆர்வம் அவருக்கு புரிந்தது. எப்படியாவது சங்கருக்கு சிட்டாடல் நிறுவன தலைவர், ஜோசப் தளியத்தின் படத்தில் வாய்ப்பு பெற்று தரவேண்டும் என, தனக்குள் சொல்லிக் கொண்டார்.குளித்து முடித்து தயாராகி வந்த, பாப்பா, சங்கரை தன் காரில் தளியத் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அறிமுகப்படுத்தினார். கேமரா டெஸ்ட் எடுத்து, வாய்ப்பு அமையும்போது, சொல்லி அனுப்புவதாக கூறினார், தளியத்.மறுநாள், தன் நந்தனம் இல்லத்தில், நாடக ஒத்திகைக்கு செல்ல, தன் ஸ்கூட்டரை உதைத்து, 'ஸ்டார்ட்' செய்து கொண்டிருந்தார், சங்கர்.அப்போது, 'சார், இங்க சங்கர் பி.ஏ., யாருங்க?' என்றது ஒரு குரல்.ஏறிட்டு பார்த்தார், சங்கர். குரல் வந்த திசையில் ஓர் ஆண். அவருக்கு பின், இன்ஜின் இயங்கிய நிலையில் விலை உயர்ந்த கார் நின்று கொண்டிருந்தது. 'ஆமாம், நான் தான் சொல்லுங்க...''சிட்டாடல் ஸ்டுடியோவிலிருந்து வர்றேன். அய்யா உங்களை கையோடு கூட்டி வரச் சொல்லி, கார் அனுப்பி இருக்காங்க...'அதிர்ச்சியா, ஆனந்தமா அல்லது இரண்டும் சேர்ந்த ஓர் உணர்வா. சங்கருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. 'இதோ இப்பவே கிளம்பறேன், போகலாம்...' சிட்டாடல் ஸ்டியோ அலுவலகம்.'ஹாய் சங்கர்...' என, தானே வந்து கை குலுக்கினார், தளியத். மற்றவர்களை மதிக்க அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.'தம்பி, நம் படத்துல நீங்க தான், ஹீரோ. சம்மதம்னா இப்பவே ஒப்பந்தம் போட்டுடலாம். படத்துக்கு பெயர் முடிவாகலை. ரெண்டொரு நாள்ல கதைய நம்ம யூனிட் இறுதி பண்ணிடும். அப்புறம் ஒருநாள் சாவகாசமா வந்து கதை கேட்டுக்கங்க.'உங்க சம்பளம் இவ்வளவு தான்னு முடிவு பண்ணி வெச்சிருக்கோம். உங்க எதிர்பார்ப்பு எதாவது இருந்தாலும் தாராளமா சொல்லுங்க...' என்றார், மலையாளம் கலந்த தமிழில்.இதைக் கேட்டதும், சங்கர் என்ன செய்தார்...
- தொடரும்.- இனியன் கிருபாகரன்

