
இப்படியும் விபத்து நடக்கலாம்!
அலுவலகத்திற்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்த போது, எனக்கு முன், ஒரு இளம் பெண், டூ வீலரில் சென்றார். ஒரு கட்டத்தில் அதிவேகமாக, செவியை கிழிக்கும் சத்தத்துடன் வந்த, டூ வீலர் ஒன்று, எங்களை கடக்க, மறு விநாடியே, சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு, அரண்டு போய் சாலையின் குறுக்கே வந்தது.
இதனால், எனக்கு முன்னால் சென்ற பெண், நிலை தடுமாறி விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, ஆம்புலன்சை வரவழைத்து, அவளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அதிவேகமாக, அலறும் சத்தத்துடன் அந்த இளைஞர், டூ வீலரில் வந்ததால் ஏற்பட்ட விளைவு தான் என்றாலும், கண்டுகொள்ளாமல் பறந்து விட்டார்.
ஒரு குறிப்பிட்ட அளவைவிட, வித்தியாசமான சத்தத்தில், அதிவேகமாக டூ வீலர்கள் செல்வதால், சாலையோரம் மேய்ந்து கொண்டிருக்கும் விலங்குகள் அரண்டுபோய் வாகனங்களுக்கு இடையே வந்து குறுக்கிடுகின்றன. மேலும், இது, சக டூ வீலர் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கும், பெரும் பாதிப்பை தருகிறது.
இப்படி சக மனிதர்களையும், விலங்குகளையும் அலற விட்டு, டூ வீலரில் பறப்போர், என்று தான் திருந்தப் போகின்றனரோ!
ம.காவியா, கோவை.
ஓசி, 'மேக் - அப்' உஷார்!
என் பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு, திருமண ஏற்பாடு செய்தனர். நிச்சயதார்த்த நிகழ்வின்போது, மாப்பிள்ளையின் தங்கையே பெண்ணுக்கான, 'மேக் - அப்'பை இலவசமாக செய்து விட விருப்பப்பட்டதும், அதற்கு ஒத்துக்கொண்டனர்.
அவ்வாறு, 'மேக் - அப்' செய்யும்போது, பெண்ணின் கண்ணில், 'பேஸ் கிரீம்' பட்டு விட்டது. கண் எரிச்சலை கண்டுகொள்ளாமல், நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொள்ளச் செய்தனர். சில மணி நேரத்தில், பெண்ணின் பார்வை மங்கவே, கண் மருத்துவமனை அழைத்துப் போய் பரிசோதித்தனர். தரமற்ற, 'பேஸ் கிரீமில்' கலக்கப்பட்டிருந்த மோசமான ரசாயனத்தால், பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளானதை அறிந்தனர்.
அதன்பின், ஆயிரக்கணக்கில் செலவு செய்து, அப்பெண்ணின் பார்வையை மீட்டனர். சற்று தாமதித்திருந்தாலும், பெண்ணின் கண் பார்வை, முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்குமாம்.
வாசகர்களே... 'மேக் - அப்' விஷயத்தில், அதற்கென பயிற்சி பெற்ற, தரமான பொருட்களை பயன்படுத்தும் நபர்களையே அணுகுங்கள். ஓசியிலோ, குறைந்த கட்டணத்திற்கோ கிடைக்கின்றனர் என்பதற்காக, கத்துக்குட்டிகளிடம் சிக்கி, தோல் அலர்ஜி, கண் பார்வை பாதிப்பு போன்ற விபரீதத்திற்கு, ஆளாகி விடாதீர்கள்!
எஸ். நாகராணி, மதுரை.
இப்படியும் ஓர் ஏமாற்று!
தோழியுடன் பஜாருக்கு சென்று, சில பொருட்கள் வாங்கி, திரும்பும் வேளையில், 'மாதுளம் பழம் வாங்க வேண்டும்' என்றாள், தோழி. சாலை ஓர தள்ளுவண்டி கடை ஒன்றில், ஒரு கிலோ மாதுளை எடை போட சொன்னாள், தோழி.
பழத்தை எடை போட்ட கடைக்காரர், 'பாலீத்தீன் பை பயன்படுத்துவதில்லை...' என்றவர், பழத்தை பேப்பரில், 'பார்சல்' செய்து, 'ரப்பர் பேண்ட் தீர்ந்துடுச்சு, சணல் கயிறு இருக்கிறதா பார்க்கிறேன்...' என கூறி, கீழே குனிந்து, சணலை எடுத்து கட்டினார்.
ஆங்கில செய்தி தாளில், 'பார்சல்' கட்டிய நிலையில், தமிழ் செய்தி தாளில், 'பார்சல்' இருந்தது. இதில் ஏதோ, 'கோல்மால்' இருக்கிறது என முடிவு செய்து, விஷயத்தை தோழியின் காதில் போட்டேன்.
பின், இருவரும் கடைக்காரரிடம், பழத்தை திரும்ப எடை போடச் சொன்னோம். அதற்குள் சுதாரித்த கடைக்காரர், 'சாரிம்மா... ஆஸ்பத்திரிக்கு என, ஒருத்தர் மாதுளம் பழம் வாங்கினார். அதற்குள் பஸ் வந்தது, சென்று விட்டார். அந்த பார்சலை மாற்றி எடுத்து விட்டேன்...' என கூறினார்.
அவரின் ஏமாற்று வேலையை புரிந்துகொண்ட நாங்கள், 'அவசரமாக கிளம்பறோம். வரும்போது, பழம் வாங்கிக்கறோம். இந்த பார்சலையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்...' என்று கூறி, 'எஸ்கேப்' ஆனோம்.
பெரிய கடைக்காரர் முதல் பெட்டிக்கடைக்காரர் வரை, வாடிக்கையாளர்களை எப்படி ஏமாற்றுவது என்ற சிந்தனையில் தான் இருக்கின்றனர். கொஞ்சம் அசந்தால், சுலபமாக ஏமாற்றி விடுவர்.
வாசகர்களே... இந்த சம்பவம் உங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்!
— அ. சாரதா, தருமபுரி.

