
பா - கே
அன்று, 'பீச் மீட்டிங்' அரசியல் கச்சேரியாக சூடேறிக் கொண்டிருந்தது.
சமீபத்தில், முன்னாள் - இன்னாள் சில அமைச்சர்கள், மக்களை கோபப்படுத்தும் விதமாக, பொது வெளியில் பேசிய பேச்சுக்களும், அது சம்பந்தமாக வலைதளங்களில் வெளியான, 'வைரல் வீடியோ'க்கள் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பேசுவதை கேட்டபடி, சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தேன், நான்.
தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்த லென்ஸ் மாமா, இடையிடையே அவர்கள் பேச்சுக்கு, 'கமென்ட்' செய்து கொண்டிருந்தார்.
'ஏம்பா... இந்த மாதிரி கூத்தெல்லாம் இங்கு மட்டும் தான் நடக்குமா, வெளிநாட்டிலும் நடக்குமா?' என்று திடீரென்று கேட்டார், ராமசாமி அண்ணாச்சி.
'பெரும்பாலும் ஒன்று போல் தான் இருப்பர். தென்னாப்பிரிக்க பார்லிமென்ட்டில் நடந்த சம்பவம் ஒன்றை சமீபத்தில் படித்தேன்...' என்று, 'திண்ணை' நாராயணன் சொல்லி முடிப்பதற்குள், 'ஆரம்பிச்சுட்டார்யா, தகவல் களஞ்சியம்...' என்று முணுமுணுத்தார், மாமா.
'நீர் சொல்லும் ஓய்...' என்று, குப்பண்ணா ஆவலுடன் கேட்க, கூற ஆரம்பித்தார் நாராயணன்:
ஜெனரல் ஸ்மட்ஸ்ன்னு ஒருத்தர், தென்னாப்பிரிக்காவில பிரதமரா இருந்தார்.
பார்லிமென்ட்ல பேசறதுக்கு, அவருக்கு புள்ளி விபரம் தேவைப்பட்டது. மறுநாளே அதைப்பத்தி பேசியாகணும்.
செயலரை கூப்பிட்டு, 'இதோ பாருங்க, நாளைக்கு இந்த புள்ளி விபரங்கள் எனக்குத் தேவை. இதை வச்சுத்தான் எதிர்க்கட்சிகளை திணறடிக்கணும்...' என்றார்.
திகைச்சு போயிட்டார், செயலர்.
'சார், இந்த புள்ளி விபரங்களை சேகரிக்கறதுக்கு குறைஞ்சது ஐந்து வருஷமாகும்...' என்றார்.
'அதெல்லாம் எனக்கு தெரியாது... நீங்க என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ... நாளைக்கு எனக்கு புள்ளி விபரம் குடுக்கறீங்க...' என்றார், ஸ்மட்ஸ்.
ஆனா, செயலரால் அதை கொடுக்க முடியவில்லை.
மறுநாள், பார்லிமென்ட் கூடிச்சு.
புள்ளி விபரத்தை அள்ளி வீசி, எல்லாரையும் ஆச்சரியப்பட வச்சுட்டார், ஸ்மட்ஸ்.
'எப்படி சார் இது... இவ்வளவு புள்ளி விபரங்களை ஒரே ராத்திரியில எப்படி சேகரிச்சீங்க, ஆச்சரியமா இருக்கே...' என்றார், செயலர்.
சிரிச்சுக்கிட்டே, 'இந்த விபரங்களை சேகரிக்க அரசாங்கத்துக்கே அஞ்சு வருஷம் ஆகும்ன்னு சொன்னீங்களே. அப்படின்னா, இதெல்லாம் உண்மைதானான்னு கண்டுபிடிக்க, எதிர்க்கட்சிகளுக்கு, 15 வருஷம் ஆவும். அவங்க கண்டுபிடிச்சு, என்னை மடக்கறதுக்குள்ளே, நான் நிச்சயமா பதவியில இருக்கப் போறதில்லை. அதான் அடிச்சுவுட்டேன்...' என்றாராம், ஸ்மட்ஸ்.
- என்று கூறி முடித்தார், நாராயணன்.
ப
அந்துமணி வாசகர், சென்னிமலை, செந்தில்குமார், 'இ - மெயிலில்' அனுப்பிய கடிதம் இது:
திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்...
இனிவரும் காலங்கள் எளிதாக இருக்கப் போவதில்லை. பண முதலீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தேவையானது, பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்வது தான்.
'ரிட்டையர்மென்ட்' என்பதை மறந்து விடுங்கள். இப்போது நீங்கள், 25 - 45 வயதில் இருந்தால், நீங்களே நினைத்தாலும், 60 வயதில் ஓய்வு பெற முடியாது; 10 - 15 கோடிகள் வங்கியில் இருந்தாலொழிய!
மேலும், 65 வயது பெரியவர், ஏ.டி.எம்., வாசலில் செக்யூரிட்டியாய் நிற்கிறார். 50+ நபர், 'ஸ்விக்கி டீ - ஷர்ட்'டில், 'ஹாட் சிப்சில்' பார்சலுக்கு காத்திருக்கிறார். ஊரில், 'பிசினஸ்' படுத்து, சம்சாரியான 45+ ஆள், 'ஓலா'விற்காக, 'நைட் டியூட்டி' கார் ஓட்டுகிறார்.
இங்கே, நிரந்தரம் என்று எதுவும் இல்லை. எல்லாம் மாறும். அதனால், தொடர்ச்சியாக உங்களை திறமை உள்ளவர்களாக மாற்றிக் கொண்டால் தான் பிழைக்க முடியும்.
உடல் ஆரோக்கியம்
இந்த முதலீட்டில் முக்கியமானது, உடல் ஆரோக்கியம். 'சிக்ஸ் பேக்'கெல்லாம் தேவையில்லை. நோய்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்தாலே போதுமானது.
தோல்வியிலிருந்து மீண்டு வர...
'எனக்கு, சரியாய் திருமண வாழ்க்கை அமையவில்லை. அப்பவே, 'எக்ஸாம்' எழுதியிருந்தா, 'கவர்ன்மென்ட்' வேலை கிடைச்சிருக்கும். வேலை பார்க்கவே பிடிக்கலை. கடன் இருக்கு...'
இப்படிப்பட்ட புலம்பல்களை விட்டொழியுங்கள். இங்கே, ரஜினியும், மோடியுமே கூட தோற்கின்றனர். அந்த உயரத்தில் இருந்து, அவர்களே தோற்கும்போது, நாமும் சில இடங்களில் மரண அடி வாங்குவது இயல்பு தான்.
தோல்வியிலிருந்து என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது மட்டுமே முக்கியம். இழப்பு, தோல்வி, வீழ்ச்சி பற்றிய மன உளைச்சலிலிருந்து வெளியேறுங்கள்.
'மெமண்டோ மோரி'
இது, ஒரு இத்தாலி வார்த்தை. இதன் அர்த்தம்: நாம் எல்லாரும் ஒருநாள் சாக தான் போகிறோம்; இதை எப்போதும் நினைவில் வையுங்கள், என்பது தான். அந்த ஒருநாள், 50 ஆண்டுகள் கழித்து வரலாம். அடுத்த ஐந்து மணி நேரத்திலும் வரலாம்.
நாளைக்கு காலையில் மரணமென்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்... சாந்தசொரூபியாக மாற ஆரம்பிப்பீர்கள் அல்லவா. அதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மன அமைதி கிடைக்கும். அது, எல்லாவற்றையும் மாற்றும்.
உங்களை நீங்களே மூன்றாவது மனிதர் போல பார்க்கக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தன்னை அறிந்தாலே, பாதி வெற்றி அடைந்ததாக அர்த்தம்.
குடும்பம் + நட்பு
குடும்பமும், நட்பும் மிக முக்கியம். சண்டை, கோபம், மனஸ்தாபம், எரிச்சல் மற்றும் பொறாமை என, எல்லா குடும்பங்களிலும், நட்பு வட்டாரத்திலும் உண்டு.
பணம், புகழ், சண்டை, விவாதங்கள் எதுவும் நிரந்தரமல்ல; அன்றைக்கு கஞ்சி ஊற்றப் போவது குடும்பமும், நண்பர்களும் தான். வானமே இடிந்து தலையில் விழுந்தாலும், குடும்பத்திற்கும், எது நடந்தாலும் துணை நிற்கும் நண்பர்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள்.
விருப்பப்படி வாழுங்கள்
இது, உங்களுடைய வாழ்க்கை. ஒரே ஒரு வாழ்க்கை. அதை உங்கள் விருப்பப்படி வாழுங்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. உங்களுடைய எல்லை எது என்பதை, நீங்கள் தான் வரையறுக்க வேண்டும்.
அடுத்தவருக்கு தொல்லை இல்லாமல் வாழும் எப்படிப்பட்ட வாழ்க்கையும் சரியே. பணம் முக்கியம். சிக்கல்களை தீர்க்க, பணம் அவசியம். அதே சமயம், எல்லா சிக்கல்களையும் பணத்தால் மட்டுமே முழுமையாக தீர்க்க முடியாது.
இனி வரும் காலம், கடுமையான ஏற்றத் தாழ்வுகளை கொண்டதாக இருக்கும் என்பது நிச்சயம். என்ன நடந்தாலும், மேற்சொன்னவைகளை நினைவில் வையுங்கள். வாழ்க்கை இனிக்கும்.
- இப்படி முடித்துள்ளார், வாசகர்.
என்ன... முயற்சி செய்து பார்ப்போமா!

