PUBLISHED ON : அக் 16, 2022

சங்கரை தன் படத்தில் ஹீரோவாக நடிக்க வைப்பதாக சொன்னார், 'சிட்டாடல்' நிறுவன தலைவர் தளியத்.
'நடக்கும் காட்சிகள் நிஜம்தானா அல்லது சினிமாவில் வருவது போன்ற கற்பனையா... உறங்கியபடி கனவு கண்டு கொண்டிருக்கிறோமா?' என, பல சிந்தனைகள், சங்கரை சுழன்றடித்தன.
தனக்கு சினிமா வாசலை திறந்து விட்ட தளியத் காலில் விழுந்து வணங்கினார், சங்கர். கண்களில் லேசான ஆனந்தக் கண்ணீர்.
'நல்லா வருவீங்க தம்பி. உங்ககிட்ட நல்ல பண்புகள் இருக்கு. அதை விட்டுடாதீங்க. உங்க திறமை உங்களை இன்னும் மேலே மேலே உயர்த்தும்...' என்றார், தளியத்.
'காட்பாதர்' ஆக, சங்கருக்கு காட்சி தந்தார், தளியத். ஒப்பந்த ஷரத்துகளை படித்துப் பார்க்காமலேயே இறுதிப் பக்கத்தில், சங்கர் பி.ஏ., என, கையெழுத்திட்டார். அப்போது, தளியத் குறுக்கிட்டு, 'சங்கர், ஒரு நிமிடம். சங்கர்ங்கிறது நல்ல பேரு தான். நாடக உலகத்துல சங்கர்ன்னு புகழடைஞ்சுட்டீங்க.
'இனி, நீங்க, சினிமா நடிகன். இந்த பேர்லயே நடிச்சீங்கன்னா, சினிமாவுல நீங்க சக்சஸ் ஆன பின்னாலும் உங்க மேல நாடக நடிகன் என்ற பிம்பமே இருக்கும். அது உங்க சினிமா கேரியருக்கு பலவீனம் தான்.
'ஒரு ராசிக்காக உங்க பேருக்கு முன், 'ஜெய்'ங்கிற வார்த்தையை சேர்த்துக்குவோமா; கொஞ்சம் புதுமையாகவும், தனிச்சு தெரியுற மாதிரியும் இருக்கும்...' என்று வேண்டுகோளாக தான் கேட்டார்.
மறுப்பின்றி ஒப்புக் கொண்டார், சங்கர்; அல்ல அல்ல, 'ஜெய்'சங்கர்!
சம்பிரதாயங்கள் முடிந்து, கிளம்ப தயாரானவரை அழைத்த தளியத், 'அப்புறம் சொல்ல மறந்துட்டேன், தம்பி. நம் யூனிட்ல எல்லாருக்கும் பிடிச்சது உங்க சிறிய கண்கள் தான். அதுமாதிரி, 'இண்டஸ்ட்ரி'யில ஒருத்தருக்கும் இல்லை. அது, உங்க முகத்துக்கு ரொம்ப ப்ளஸ். பெஸ்ட் ஆப் லக்...' என்றார்.
தளியத் வீட்டிலிருந்து சங்கர் நேரே சென்றது, இசையமைப்பாளர் பாப்பா வீட்டுக்கு தான். நன்றி சொல்ல வார்த்தைகளின்றி தவித்து நின்ற சங்கரை, ஆரத்தழுவியபடி ஆசி வழங்கினார், பாப்பா. சங்கரை விட அதிக மகிழ்ச்சியில் திளைத்தார், நண்பர் ராமதாஸ்.
ஜெய்சங்கரின் உலகம், அந்த காலகட்டத்தில் நண்பர்கள் சூழ இருந்தது. எனவே, தன்னை நாடக உலகில் நிலை நிறுத்திய, கூத்தபிரான், சோ உள்ளிட்ட, 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' குழு நண்பர்கள் என, அத்தனை பேரிடமும் தன் லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார், சங்கர்.
காலையில் படபடப்பும், பரபரப்புமாக சென்ற சங்கர், இப்போது சினிமா நடிகர் ஜெய்சங்கராக வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார்.
வீட்டில் இப்போது குழப்பமான நிலை. தன் லட்சியத்தில் வென்று காட்டி விட்ட மகனை பாராட்டி மகிழ்வதை தவிர, அவர்களுக்கு வேறு வழி இல்லை. தன் பேரன் ஜெயித்ததில் பாட்டிக்கு பெரும் மகிழ்ச்சி.
சங்கரின் முதல் படத்துக்கு சூட்டப்பட்ட பெயர், இரவும் பகலும். ஆம், எவ்வளவு பொருத்தம். ஜெய்சங்கரின் வாழ்வின் மீது படிந்திருந்த இருள் விலகி, வெளிச்சம் பரவத் துவங்கி விட்டதை சொல்லாமல் சொல்லும் தலைப்பு.
படத்தில் அவருக்கு இரட்டை வேடம். முதல் படத்திலேயே இரட்டை வேடம் ஏற்ற கதாநாயகன் ஜெய்சங்கர் தான். இதற்கு ஜெய்சங்கரின் திறமையை விட, தளியத்தின் நம்பிக்கையைத்தான் பாராட்ட வேண்டும்.
சில வாரங்களில் படப்பிடிப்பு துவங்கியது. துப்பறியும் கதை என்பதால், 'ஸ்டன்ட்' காட்சிகளுக்கு கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஸ்டன்ட் மாஸ்டர் மாதவன், அதற்கான பயிற்சிகளை அளித்தார்.
படத்தின் கதாநாயகியும் ஜெய்யை போலவே புதுமுகம், சி.வசந்தா. இவர்களுடன் அசோகன், பண்டரிபாய், காந்திமதி ஆகியோர் நடித்தனர்.
முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றவரை வாழ்த்தி, விடை கொடுத்தனர், பெற்றோர், பாட்டி மற்றும் நண்பர்கள். அன்று படப்பிடிப்பில் ஜெய்க்கு கொஞ்சம் பதற்றம் இருக்கவே செய்தது. முதல் முறை சினிமாவுக்காக பிரத்யேக, 'மேக் - அப்' போட்டுக் கொண்டது, அவரது வாழ்வில் மறக்க முடியாத நாள்.
முதல் நாள் படப்பிடிப்பு நல்லவிதமாக முடிந்தது. தளியத்தின் மோதிரக் கை ஜெய்யை குட்டவில்லை, தட்டியே கொடுத்தது. அந்த நொடியிலிருந்து, தான் ஒரு நடிகன் ஆகி விட்டதையே நம்பத் துவங்கினார், ஜெய்.
'ஸ்டன்ட்' காட்சிகள் வரவேற்பு பெற்றிருந்த அந்த நாளில், படத்தில் அவை சிறப்பான முறையில் வரவேண்டும் என, அந்த காட்சிகளை, 'த்ரில்'லான முறையில் அமைத்தார், தளியத்.
புதுமுக நடிகரான ஜெய், எத்தனை முறை, 'டேக்' போனாலும் சலிப்பின்றி, கொஞ்சமும் முக சுளிப்பின்றி நடித்துக் கொடுத்தார். பல சமயங்களில், 'ரிஸ்க்'கான காட்சிகளில் உயிரை பணயம் வைத்தும் நடிக்க வேண்டியிருந்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி, சினிமா தொழிலில் முன்னேறுவது மட்டுமே, அவர் கண்களுக்கு தெரிந்தது.
இரவும் பகலும் படத்தின் படப்பிடிப்பு, 1964ம் ஆண்டு இறுதியில் வெற்றிகரமாக முடிந்தது. 1965, ஜனவரியில் வெளியிடுவது என, தயாரிப்பாளர் தளியத்தால் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு என, பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, 'கல்கி பைன் ஆர்ட்சின்' நாடகம் இருந்ததால், ஜெய்சங்கரால் அதற்கு செல்ல முடியவில்லை.
இருப்பினும், அந்த காட்சிக்கு சென்ற பத்திரிகையாளர்களின் வீடு தேடிச் சென்று, தன் முதல் படத்தின் விமர்சனத்தை கேட்டு தெரிந்து கொண்டார், ஜெய் சங்கர். ஓரிருவரை தவிர அனைவரும் பாராட்டவே செய்தனர்.
முதல் படத்தின் பிரசவத்தை மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார், ஜெய்.
அந்த நாள்...
— தொடரும்
இனியன் கிருபாகரன்

