
பண பரிமாற்றம் செய்யும்போது...
சமீபத்தில், வங்கியில் பணம் செலுத்த, 100 ரூபாய் நோட்டுகளுடன், வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, என்னிடம் வந்த ஒரு இளைஞர், 'சார், 5,000 ரூபாய்க்கு சில்லரை தர்றீங்களா... எப்படியும் வங்கியில தானே கட்ட போறீங்க, 'கவுன்டர்'ல சில்லரை கேட்டா, தர மாட்டாங்க சார்...' என்றார்.
உடனே, என்னிடமிருந்த, 100 ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து, அவரிடமிருந்த, 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டேன். என் முறை வந்ததும், 'கவுன்டரில்' பணத்தைக் கொடுத்தேன்.
பணத்தை இருமுறை கள்ளநோட்டு கண்டறியும் மிஷினில் போட்டு பார்த்து, 'என்ன சார் இது... அத்தனையும் கள்ள நோட்டா இருக்கே... ஒரு நிமிஷம் மேனேஜர் அறைக்கு வாங்க...' என்று, அனைவர் முன்னிலையிலும் கத்த ஆரம்பித்து விட்டார், காசாளர்.
எனக்கு பணம் நஷ்டமானதுடன், அவமானத்தால் கூனிக் குறுகிப் போனேன்.
இனி, முன்பின் தெரியாதவர்களிடம், பணப் பரிமாற்றம் செய்யக் கூடாது எனும் உருப்படியான பாடத்தை அன்று கற்றேன்.
இதைப் படிக்கும் நீங்களும், உஷாராக இருக்க வேண்டுகிறேன்.
- ஆர். பிரசன்னா, திருச்சி.
புதுவிதமான, 'சேலஞ்ச்!'
என் மகன், கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். முதல் ஆண்டு முழுவதும், டிபன் பாக்சில் சாதம், குழம்பு மற்றும் காய் வைத்து கொடுத்தேன். சாப்பிட்டு வந்தான்.
'இந்த ஆண்டு, யாருமே சாப்பாடு கொண்டு வருவதில்லை. பணம் கொடுத்து, 'கேன்டீனில்' வாங்கி சாப்பிடுகின்றனர். எனக்கும் பணம் கொடுங்கள்; நான் மட்டும் தான் சாதம், குழம்பு மற்றும் காய் கொண்டு போய் சாப்பிடுகிறேன்...' என, கோபப்பட்டான்.
பெற்றவர்கள் சீக்கிரமாக எழுந்து, பிள்ளைகளுக்கு, சாப்பாடு செய்து கொடுத்தால், ஒருவரை பார்த்து மற்றவரும் சாப்பிடுவர். சீக்கிரம் எழ சோம்பல்பட்டு, பணம் கொடுத்து அனுப்புவதால், ஹோட்டல் சுவைக்கு அடிமையாகி விடுகின்றனர்; புரோட்டா, 'பிரைடுரைஸ்' என, கண்டதையும் வாங்கிச் சாப்பிடுகின்றனர். இப்பழக்கத்தால், விரைவில் சிறுநீரகமும், கல்லீரலும் பாதிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
வீட்டில் சமைத்த ஆரோக்கியமான மதிய உணவை சாப்பிட வைப்பது எப்படி என, யோசித்தேன். சக கல்லுாரி நண்பர்கள் அனைவரும் ஒரே, 'வாட்ஸ் ஆப்' குழுவில் இருந்ததால், என் மகனிடம், 'சேலஞ்ச்... நாளை வெள்ளை சுண்டல் குழம்பு...' என்று கூறினேன். 'சேலஞ்சை' ஏற்று, 20 பேர், அதே சாப்பாட்டை எடுத்து வந்திருந்தனர்.
மறுநாள், பருப்பு ரசம் என்றதும், முக்கால்வாசி பேர் அதை கொண்டு வந்தனர். என் மகனும், இப்போது பணம் கேட்காமல், கொடுப்பதை வாங்கிச் செல்கிறான். பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை, அவர்களுக்கு பிடித்த பாணியில் சொல்லி புரிய வைக்க வேண்டும் என, தெரிந்து கொண்டேன். இதன்பின், மற்ற மாணவர்களின் பெற்றோரும், என் மகனை பாராட்டினராம்.
- பி. பிரவீண் காமராஜ், சென்னை.
பேரன் - பேத்திகளை பராமரிப்பவரா நீங்கள்?
எங்களுக்கு இரண்டு பெண்கள். இருவரையும் நன்கு படிக்க வைத்து, திருமணம் செய்து, பேரன், பேத்தியும் எடுத்து விட்டோம். பெண் வேலைக்கு செல்வதால், பேரன், பேத்தியை பார்த்துக் கொள்கிறோம்.
'உங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்தாச்சு. இப்போ, மறுபடியும் இரண்டாவது ரவுண்ட் ஓடுறீங்களே; பணி ஓய்விற்கு பின், நன்கு ஓய்வு எடுத்தோமா... நாலு கோவில், குளம் சுற்றினோமா என்ற பாக்யம் உங்களுக்கு இல்லையே...' என, அக்கம்பக்கத்தினர் நம்மை தளரச் செய்வர். அவர்களுக்கு நான் தரும் பதில் இதுதான்:
கோடி புண்ணியம் செய்தவர்களுக்குத்தான் பேரன், பேத்தியை வளர்க்கும் பாக்யம் கிடைக்கும். பேரன், பேத்தியுடன் அதிக நேரம் செலவிடுவதால், நீங்கள் ரொம்ப இளமையாக இருப்பீர்கள். குழந்தைகளின் மனம், மிகவும் துாய்மையானது. அவர்களுடன் இருப்பது நமக்கு, 'பாசிட்டிவ் எனர்ஜி' தரும்.
பேரன், பேத்தியை அன்போடு வளர்க்கும்போது தான், நம் வாழ்க்கையே முழுமை பெறும். இப்படி, நிறைய பலன்கள் உள்ளன. நம்மைத் தளரச் செய்பவர்களை தவிர்த்து, பேரன் - பேத்திகளுடன் இருப்பதால், நாங்களும் மனதளவில் மிக நலமாகவும், இன்பமாகவும் உணர்கிறோம்.
எம். காந்திமதி கிருஷ்ணன், நாகர்கோவில்.

