
பா - கே
'இப்பல்லாம், ஹிந்து மத கதைகளை அடிப்படையா வைத்தோ அல்லது அதன் பின்னணியை கொண்டிருக்கும் திரைப்படமோ, நாவலோ வெளிவந்து, பேசு பொருள் ஆனா போதும், உடனே அதை எதிர்த்து நிற்க ஒரு கூட்டம் தயாரா இருக்குது; அது பேஷனாவும் போயிட்டுது...' என்று அலுத்தபடி, 'பீச்' மீட்டிங்கில் வந்து அமர்ந்தார், குப்பண்ணா.
'ஓய் குப்பண்ணா, புலம்பறதை விட்டுட்டு, விஷயம் என்னன்னு சொல்லும்வே...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.
'பொன்னியின் செல்வன் படம் வந்தாலும் வந்தது, இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. தொடராக வெளி வந்தபோதோ, புத்தகமாக வந்தபோதோ, இந்த மாதிரி விமர்சனங்கள் வரவில்லை... அப்ப, கதையை கதையா ரசிச்சாங்க... இப்ப, 'பகுத்தறிவு' ரொம்பவே வளர்ந்துடுச்சோ, என்னவோ...' என்றார், லென்ஸ் மாமா.
'இப்படித்தான், முன்பு, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், தெலுங்கில், 'நெளகா சரித்திரம்'ன்னு ஒரு நாடகம் எழுதினார். பாகவதத்துல இல்லாத ஒரு கற்பனை கதை அது...' என்று சொல்ல ஆரம்பித்தார், குப்பண்ணா:
கோபிகா பெண்களோட கர்வத்தை, கண்ணன் அடக்கறதா அமைஞ்ச ஒரு நாடகம்.
அந்த நாடகத்தை எழுதி முடிச்ச உடனே, அதை அவரோட சீடர் ஒருத்தர்கிட்ட கொடுத்தார், தியாகராஜர். அவர் பேர், வேங்கடரமண பாகவதர்.
அவரு அதை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போய் படிச்சதும், ரொம்ப பிடித்து போனது.
அப்புறம் இந்த, 'நெளகா சரித்திரம்' வெளியிடப்பட்டது. எல்லாரும் படிச்சுப் பார்த்தாங்க. அதோட கற்பனை நயம் ரொம்ப அருமையா இருந்தது. சங்கீத வித்வான்கள்லாம் அதைப் பத்தியே பேச ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும், வேற சில ஆஸ்தான வித்வான்களால இதை பொறுத்துக்க முடியல. அவர்களுக்கு பொறாமை வந்துட்டுது.
அந்த காலத்துலயும் இது மாதிரி எல்லாம் உண்டு போல. பொறாமை வந்தவுடனே, அந்த வித்வான்களால சும்மா இருக்க முடியல. நேரா தஞ்சாவூர் மகாராஜாகிட்ட போய், பத்த வைக்க ஆரம்பிச்சுட்டாங்க.
'தியாகராஜர், புதுசா ஒரு நாடகம் எழுதியிருக்கார். கண்ணனை பத்தியும், கோபிகா பெண்களை பத்தியும் அதுல ரொம்ப மோசமா எழுதியிருக்கார். அதைப் படிச்ச ஜனங்கள் மனசு கெட்டுப் போயிடும். அதனால, உடனே, அதை தடை செஞ்சுட்டா தேவலை'ன்னு புகார் பண்ணினாங்க.
யோசனை பண்ணினார், மகாராஜா.
தியாகராஜர் இது மாதிரி தவறான காரியம் செய்ய மாட்டாரேன்னு நினைச்சு, 'அப்படியெல்லாம் இருக்காதே'ன்னு சொல்லிப் பார்த்தார்.
இருந்தாலும் வித்வான்கள் விடல.
'இல்லைங்க மகாராஜா, அதை எப்படியும் தடை பண்ணித்தான் ஆகணும். அதுக்கு சரியான மூல நுால் எதுவும் சமஸ்கிருதத்தில இருந்தா, ஒப்புக்கொள்ளலாம். இல்லேன்னா, அதை தடை செய்யறது தான் நியாயம்'ன்னாங்க.
வேற வழி இல்ல, உடனே தியாகராஜருக்கு, 'நெளகா சரித்திரத்தோட நீங்க அரண்மனைக்கு வரணும்'ன்னு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார், மகாராஜா.
உடனே, அரண்மனைக்கு வந்து சேர்ந்தார், தியாகராஜர். நெளகா சரித்திரத்தை கொடுத்தார்.
அதை வாங்கி படிச்சு பார்த்தார், ராஜா.
'நல்லாத்தான் இருக்கு. ஆனாலும், இதுக்கு சமஸ்கிருதத்தில மூல பதிப்பு இருக்கா? இருந்தா எடுத்துக்கிட்டு வந்துடுங்களேன். இந்த வித்வான்களெல்லாம் அதைத்தான் ஆதாரமா கேட்கறாங்க. அது இருந்தா இவங்க ஒத்துக்கறதுக்கு தயார்ன்னு சொல்றாங்க'ன்னார், ராஜா.
வீட்டுக்கு வந்தார், தியாகராஜர்.
ஸ்ரீராமனை நினைச்சார்.
'ராமா, இது என்ன சோதனை? தெலுங்கில எழுதின இந்த நாடகத்துக்கு, சமஸ்கிருத நுால் வேணும்னா அதுக்கு நான் எங்கே போவேன்'ன்னார்.
அந்த நேரம் பார்த்து, அவரோட சீடர் வேங்கடரமண பாகவதர், அவரை சந்திக்க வந்தார்.
'என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க'ன்னு விசாரிச்சார்.
அரண்மனையில் நடந்த விஷயத்தை சொன்னார், தியாகராஜர்.
அதைக் கேட்டு, 'இவ்வளவு தானே, இதுக்கு போய் ஏன் கவலைப்படறீங்க. சமஸ்கிருதத்தில எழுதப்பட்ட, 'நெளகா சரித்திரம்' என்கிட்ட இருக்குதே'ன்னார்.
'அது எப்படி இருக்க முடியும்'ன்னார், இவர்.
'சுவாமி, ரொம்ப வருஷத்துக்கு முன்ன நீங்க எழுதின, நெளகா சரித்திரத்தை என்கிட்ட கொடுத்தீங்க. படிச்சுப் பார்த்தேன்; ரொம்ப அருமையா இருந்தது. சமஸ்கிருதத்துல மொழி பெயர்க்கலாமேன்னு தோணிச்சு.
'உடனே மொழி பெயர்த்து வச்சு, அதை உங்ககிட்ட தெரிவிக்காம இருந்துட்டேன். அதை எடுத்துக்கிட்டு வரேன். கொண்டு போய் காட்டுங்க. அதுக்கப்புறம் அந்த வித்வான்கள் வாயைத் திறக்க மாட்டாங்க'ன்னார்.
உடனே புறப்பட்டு அய்யம்பேட்டைக்கு போனார். அதுதான் அவரோட சொந்த ஊர். முன்பு எழுதி வச்சிருந்த ஓலைச்சுவடியை எடுத்து வந்து கொடுத்தார்.
அரண்மனைக்கு எடுத்துக்கிட்டு போய் காட்டினார், தியாகராஜர்.
பொறாமைப்பட்ட ஆஸ்தான வித்வான்களெல்லாம் அடங்கிப் போயிட்டாங்க.
- இப்படி குப்பண்ணா கூறி முடித்ததும், 'இது மாதிரிதான் ஏதாவது செய்து, இவங்கள அடக்கணுமோ என்னவோ...' என்றார், அண்ணாச்சி.
ப
ஒருசமயம், பம்பாய் தமிழ் சங்கத்துல, பாரதி விழா நடந்தது. அந்த விழாவுல கலந்துக்கறதுக்காக, தமிழ்நாட்டுலேர்ந்து ஒருத்தர் அங்கே போனார். நாலு நாள் அங்கே தங்கியிருந்து, தமிழ்ச் சங்க விழாவுல இவர் பேச வேண்டியிருந்தது.
ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப் போறதுக்கு முன், தான் கட்டியிருந்த வேட்டியை துவைச்சு காயப் போட்டுட்டு, ஒரு லுங்கியைக் கட்டிக்கிட்டு படுத்துக்குவார். மறுநாள் காலையில அந்த வேட்டியை எடுத்து கட்டிக்கிட்டு விழாவுல பேசறதுக்கு போயிடுவார்.
இவர் ஏன் இப்படி பண்ணினார்ன்னா... அவர்கிட்ட அப்போ இருந்தது, ஒரே ஒரு வேட்டி தான்.
இதை அங்கே இருந்த தமிழ் சங்க உறுப்பினர்கள் புரிஞ்சுக்கிட்டாங்க. உடனே அவங்க, 12 மில் வேட்டிகளை வாங்கிட்டு வந்து, அதை அவருக்கு பரிசா குடுத்தாங்க.
இவரு அதை வேணாம்ன்னு சொல்லல, பேசாம வாங்கி வச்சுக்கிட்டார். ஆனா, அதையெல்லாம் என்ன பண்ணினார் தெரியுமா?
பம்பாயை விட்டு புறப்படறதுக்கு முன், அந்த வேட்டிகளையெல்லாம் ஏழைகளுக்கு கொடுத்துட்டு, மெட்ராசுக்கு ரயில் ஏறினார்.
அந்தப் பெரிய மனிதர் யார் தெரியுமா?
அவர் தான், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான, ப.ஜீவானந்தம்.

