
பி.சி. ரகு, விழுப்புரம்: இனி, 'போஸ்ட் கார்டு'களில் படைப்புகளை அனுப்ப வேண்டாமா, அந்துமணி சார்...
'இ - மெயில்' தினசரி, 10 தான் வருகிறது... 'கார்டு, இன்லேண்டு' மற்றும் 'கவர்' தினசரி, 100க்கு மேற்பட்டவைகள் வருகின்றன... அவற்றை படிக்காமல் இருக்க முடியுமா? இதோ நீங்கள் கேட்ட கேள்வியும், 'போஸ்ட் கார்டில்' எழுதி அனுப்பியது தானே!
* எம்.பி. தினேஷ், கோவை: உங்களின் பதில்களில், நேர்மை, துணிவு, உண்மையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் உமக்கு, மிரட்டல்கள் வருவதுண்டா?
இதுவரை வந்ததில்லை... இனி ஒருநாளும் வராது... அப்படி வந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன்!
கே. மணிவண்ணன், நெல்லை: நான் இறந்ததும், நரகம் போகக் கூடாது... சொர்க்கம் போக வேண்டும் என்று நினைக்கிறேன்... இதற்கு என்ன செய்ய வேண்டும்?
தேவையான பிறருக்கு தினமும் உதவுவது தான், சொர்க்கத்துக்கு போவதற்கான சுலபமான வழி; சிறப்பான வழியும் கூட!
லெ.நா. சிவக்குமார், சென்னை: காங்கிரசின் புதிய தலைவர், மல்லிகார்ஜுன கார்கே, அவர் முன் உள்ள சவால்களை சமாளித்து விடுவாரா?
சோனியாவும், ராகுலும் சமாளிக்க முடியாதவைகளை, இவரால் முடித்து விட முடியுமா? அடுத்த மாத குஜராத் சட்டசபை தேர்தலில், இவரின் திறமை தெரிந்து விடும்!
என். நாராயணன், கோவை: என் நண்பனிடம் ஒழுக்கம் இல்லையே...
ஒழுக்கம் இருந்தால் மேன்மை கிடைக்கும் என்பதை சொல்லுங்கள்... அது இல்லாவிட்டால், தேவையில்லாத பழிகள் எல்லாம் வந்து சேரும் என, அறிவுறுத்துங்கள்!
* ஆர். ஆனந்தன், சென்னை: ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளித்து விட்டதே... இனி வரும் மழைக்காலம் எப்படி இருக்கும்?
முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்கனவே துாக்கம் வரவில்லை... இனிமேலும் துாக்கம் வராமல் செய்துவிடும்!

