
முகமெல்லாம் வியர்த்து, ஓடி வந்த அப்பாவின் பதற்றத்தை கண்ட கணேசன், ''என்னப்பா?'' என்றான்.
''நம் வயலை...'' என்றவர், மேற்கொண்டு பேச்சு வராமல் தவித்தார்.
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும் என காத்திருந்தான், கணேசன்.
கணேசன் பிறந்ததுமே, அவரின் மனைவி இறந்து போனார். வேறு திருமணம் செய்து கொள்ளாமல், கணேசை வளர்ப்பதில் கருத்தாக இருந்தார்.
''சொல்லுப்பா... எதுக்காக பதறியடிச்சு ஓடி வந்தே?'' கேட்டான், கணேசன்.
''நம் வயலை பிரிச்சு கூறு போடுறாங்கப்பா... வீட்டுமனையாக்கி விற்கப் போறாங்களாம். புல்டோசர் ஓடுது...'' என்றார்.
''நம் வயல் தான் கைவிட்டுப் போச்சே. யாரோ என்னமோ செய்துட்டுப் போறாங்க... உங்களுக்கு என்ன?'' என்றான்.
அவரால் அதை ஏற்க முடியவில்லை. அவர் நினைவிலும், உயிரிலும் கலந்துவிட்ட, 40 ஆண்டு உறவு. அதை பிரிய மனமில்லாமல் ஏங்கித் தவித்தார்.
தினசரி வயக்காட்டுப் பக்கம் போய் வரவில்லை என்றால், அப்பாவுக்கு அன்றைய பொழுது விடிந்ததாகவே இருக்காது என்பது, கணேசுக்குத் தெரியும். அப்படி போனவர் தான் இதை பார்த்துவிட்டு, அலறியடித்து ஓடி வந்திருக்கார்.
நிலத்தையும், விவசாயத்தையும் மறந்து, வாசல் திண்ணையில் அமர்ந்து, தெருவை வேடிக்கைப் பார்ப்பதும், கோவிலுக்கு சென்று வருவதும், வீட்டில் படுத்துறங்குவதுமாய் பொழுதை கழிக்கிறார். எல்லாம் தன்னால் தானே என, நினைவுகளின் பின்னே பயணித்தான், கணேசன்.
'வயலை விற்க முடிவு பண்ணிட்டீங்களாப்பா?'
'ம்...' அந்த வார்த்தைகூட அப்பாவிடமிருந்து மெதுவாகத்தான் வந்தது. அதற்கு முன், கண்ணீர் வேகமெடுத்தது.
'வேறென்ன செய்ய...' கண்ணீரோடு கேட்டார், அப்பா.
கணேஷிடம் பதில் இல்லை.
'எனக்காக எதையும் விற்க வேண்டாம்...' என சொல்ல, வாய் வரவில்லை.
எந்த திசையில் இருந்து பார்த்தாலும் பசுமை தெரியும் அந்த வயற்காட்டை விற்று தான், கணேசன் உயிரை காப்பாற்ற முடியும் என்பதால், அப்பா யோசிக்கவே இல்லை. பரிதவிப்பை எல்லாம் மனசுக்குள்ளேயே புதைத்து, வேகமாக விற்பனைக்கான முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார்.
பூச்சிகளிடமிருந்து பயிரை காப்பாற்றுவது போல், விபத்தில் எழுந்து நடக்க முடியாமலிருந்த மகனை, இரண்டு ஆபரேஷன்களை செய்து, எழுந்து நடமாட வைத்து விட்டார். ஆனாலும், வயற்காட்டை கடக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுவார்.
நிலத்தை வாங்கிய ராமு, 'கவலைப்படாதீங்க. வாங்கினது நானா இருக்கலாம். ஆனா, உரிமை எல்லாம் உங்களுக்குத்தான். எப்பவும் போல நீங்க இங்கே வரலாம்; போகலாம்...' என்றான்.
அவன் பேசவும், அவர் கேட்கவும் அவ்வளவு ஆசையாயிருந்தது.
'தத்து கொடுத்தாலும் பிள்ளை உங்களது தான்...' என்றவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷமடைந்தார்.
பிறகு எங்கிருந்து தான் வந்ததோ ராமுவுக்கு பணத்தாசை. அறுவடை முடிந்ததும், மீண்டும் பயிர் போடுவான் என நினைத்தால், அதை தரிசாக்கி வீட்டுமனையாக்கத் துடித்தான்.
அந்த செய்தியை கேட்டதும், ஓரிடத்தில் அமராமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருந்தார். வயல்வெளிகளை புதிதாக பார்ப்பது போலவும், அங்கே இதுவே கடைசியாக நிற்பது போலவும் பரிதவித்தார்.
'வயலை அதன் உயிர் கெடாமல் பாதுகாப்பேன் என உறுதி தந்தாயே... ஏன் இப்படி செய்கிறாய்...' என, ராமுவிடம் கேட்டார்.
'வேலி போட்டு, பயிர் செய்து, புழு, பூச்சி தாக்காம உரமடிச்சு, களையெடுத்து, அறுவடை பண்ணி என்ன கிடைக்கப் போகுது? ரோட்டு மேல கிடக்கற இடம், என்னைக்கு இருந்தாலும் நல்ல விலை போகும். தரிசா போட்டு வை. வீட்டுமனையாக்கலாம்ன்னு வி.ஏ.ஓ.,வே சொல்றாரு...' என்றபோது, அப்பாவுக்கு அழுகை வந்ததை, இவன் கவனித்தான்.
'மனிதர்கள் பணம் என்றால் எப்படி எல்லாம் நிறம் மாறி விடுகின்றனர். பசுமையாக இருந்த வயலை தரிசா போட எப்படித்தான் மனசு வருதோ இவர்களுக்கு?' ஆதங்கமாய் கேட்டார், அப்பா.
நிலத்தை விற்றபின், ஒருநாள் கணேசை அழைத்து, 'சொந்தமா வயல் இல்லையேன்னு விவசாய வேலைய மறந்துடாதே. நகரத்திற்கு வேலைத் தேடிச் சென்றாலும் விவசாய வேலைக்கு முக்கியத்துவம் கொடு...' என, அன்பாகச் சொன்னார்.
மகனுக்கு திடீர் விபத்து, ஆபரேஷன், ஆஸ்பத்திரி செலவு என வந்திருக்கா விட்டால், அவர் இதை விற்றிருக்கப் போவதில்லை.
என்ன செய்ய, வாழ்க்கையில் எது எப்படி நடக்கும் என்று தீர்மானிப்பது, நம் கையிலா இருக்கிறது என, மனதை திடப்படுத்திக் கொண்டார், அப்பா.
இந்நிலையில் தான், வீட்டுமனையாக பிரிப்பதை தாங்க முடியாமல் பதறி, கணேசனிடம் கூறினார்.
''இந்த வயலை வாங்கி, 30 வருஷம் இருக்குமாப்பா,'' என்றான், கணேஷ்.
''கடந்த, 1980ல வாங்கினது. திருமணமான கையோட பிழைக்க வழிவேணுமேன்னு அம்மாவோட நகையை அடமானம் வச்சு, இந்த வயலை, 200 ரூபாய்க்கு வாங்கினேன். அதுதான் குடும்பம் நடத்த செலவுக்கு உதவுச்சு.
''மாசச் செலவுக்கு மட்டுமல்ல, உன்னை படிக்க வைக்க, மீனாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்க எல்லாம், அதுதான் உதவியா இருந்துச்சு... இப்போ, ஏக்கர் ஆறு லட்சம் போகும்ன்னு சொல்றாங்க.
''ஆனா, நான் பேராசை படல; நிலத்தை வாங்குறவன், கட்டிக் கொடுக்கற மகளை கண்கலங்காம பார்த்துக்கற புருஷனா இருக்கணும்ன்னு தான் ஆசைப்பட்டேன். புரோக்கர்கிட்ட ஆறு வேண்டாம், நாலு சொன்னாப் போதும்ன்னு சொன்னேன்,'' என, தேம்பி அழுதார்.
அழட்டும், அழுகையும் ஒரு ஆறுதல் தானே.
கொஞ்ச நேரம் தேம்பி அழுது ஆறுதல் அடைந்தவர், துண்டால் கண்களை துடைத்துக் கொண்டார்.
''கவலைப்படாதீங்கப்பா... அந்த பூமிய திரும்ப நாமளே வாங்கலாம்,'' என்றான், கணேசன்.
''எப்படி?'' என கேட்டார்.
அவர் கேள்விக்கு அவனிடம் எந்த பதிலும், திட்டமும் இருக்கவில்லை. ஆனாலும், அவருக்கு அந்த நேரத்தில் ஒரு ஆறுதலாக இருக்கட்டுமே என்று சொல்லி வைத்தான்.
''முடியும்ப்பா, வாங்கலாம்...'' என்றான்.
பூமியை விற்கும் முன், கொஞ்சம் மண்ணை எடுத்து, வீட்டுக்கு கொண்டு வந்து கோவில் மாடத்தில் வைத்து வணங்கி வந்தார். விரலில் எடுத்து நெற்றியில் திருநீராக அதைப் பூசிக் கொண்டார்.
தாம் வாழும் காலத்திலேயே மண்ணை கிழித்துக் கூறு போடுவர் என, அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதை பார்த்ததில் இருந்து, அவர் காலடியில் பூமி நழுவுவது போல உணர்ந்தார்.
முதுமையால் நடுங்கிய உடலை, வேகமாய் துடித்த இதயத்தை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாமல் தடுமாறினார். கண்கள் இருண்டு வர, முற்றத்து துாணை கெட்டியாக பிடித்து கீழே உட்கார்ந்தவரை தேற்றினான், கணேசன்.
ராமுவிடம் சென்று, ''வயலை நாங்களே திரும்ப வாங்கிக்கிறோம்,'' என, கணேசன் கூற, அவன் சிரித்தான்.
''ஏன் சிரிக்கறே?''
''இதை உன்னால் வாங்க முடியாது.''
''ஏன்?''
''பத்து லட்சம் தருவியா... உன்னால முடியுமா?'' என்றான்.
''பாவி, எங்கக்கிட்ட நாலுக்குத்தானே வாங்கினே.''
''ஆமா, வாங்கினேன். ஆனா, அதற்கே தர முடியுமா?''
''ஒரு பராமரிப்பு செலவும் இல்லையே உனக்கு... வாங்கினதை அப்படியே கைமாத்தறே. அவ்வளவு தானே?''
''ஆமா, முதலுக்கு லாபம் வேண்டாமா?''
''அதுக்காக இவ்வளவு விலையா?''
''அது என் இஷ்டம். பிளாட் போட்டு வித்தா, இன்னும் லாபம். வாங்குறதுக்கு வெளியூர், 'பார்ட்டி' தயாரா இருக்கு,'' என்றான்.
''சரி, அவசரப்படாதே... இது, எங்க அப்பன் சம்பாதிச்ச சொத்து. அவருக்கு எப்பவும் இது நினைப்பாவே இருக்கு. ஒரு வாரம் அவகாசம் கொடு, பணம் புரட்ட முடியுமான்னு பார்க்கறேன். முடியலைன்னா யாருக்கு வேணும்னாலும் வித்துக்கோ,'' என்றான்.
வீராப்பாக ராமுவிடம் சொன்னாலும், அந்தத் தொகையை கேட்கவே மலைப்பாக இருந்தது கணேசுக்கு. அப்பாவிடம் வந்து சொன்னான்.
''பாவி, அவ்வளவா சொல்றான்; அவ்வளவு பணத்துக்கு எங்கே போறது?'' சோகமானார்.
அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்ணில் நீர்கோர்ப்பதையும், முகம் சுருங்குவதையும் கவனித்தான்.
மறுநாள் -
அப்பா, வழக்கம்போல் எழுந்திருக்கவில்லை; வயக்காட்டுப் பக்கம் போகவில்லை. ஏதோ அசம்பாவிதம் என்பதை உணர்ந்தவன், துாங்கிக் ொண்டிருந்த கட்டிலருகே வந்து, அவரைத் தொட்டு திருப்பினான். உடம்பு, 'ஜில்'லென்று இருந்தது.
''அப்பா...'' கதறினான்.
அவன் எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்ந்தே விட்டது. அப்பா மரணித்து விட்டார். விஷயம் ஊருக்குள் வேகமாய் பரவி, ஒவ்வொருவராக துக்கம் கேட்க வந்தனர்.
எல்லாம் முடிந்து, 16ம் நாள் கருமாதி போட்டு அமர்ந்திருக்கையில், அவனைப் பார்க்க இன்சூரன்ஸ் ஏஜன்ட் வந்தார்.
அவன் அப்பா, இன்சூரன்ஸ் எடுத்திருந்ததை சொல்லி, விண்ணப்பங்களில் கையெழுத்தும், வங்கி விபரமும் வாங்கிக் கொண்டார். இன்சூரன்ஸ் பணத்தோடு, அம்மாவின் நகையை விற்று, கடன் வாங்கி, மொத்த பணத்தையும் திரட்டி, வயலை மீட்டான்.
''இவ்வளவு விலை கொடுத்து இந்த வயலை வாங்கணுமா, ஏன் தான் இப்படி ஏமாளியா இருக்கியோ தெரியல...'' என்றான், நண்பன்.
''என்னைக் காப்பாற்றத்தான் இந்த வயலையே வித்தார், அப்பா. வாங்கினவன் தரிசா போட்டு, பிளாட் போட்டு விற்கத் துணிவான்னு, நாங்க நினைக்கவே இல்லை. என்னைக் காப்பாத்துன அந்த வயல, நான் காப்பாத்த வேணாமா... அதனால தான், விலை கூடுதலா இருந்தாலும் பரவாயில்லைன்னு வாங்கினேன்,'' என்றான், கணேசன்.
நண்பனுக்கும் புரிந்தது.
வயலுக்குள் இறங்கி நடந்தான், கணேசன். ஒரு சோலைக்குள் இறங்கியது போல மிதமான குளிர் காற்று, அவனை இதமாக வருடிச் சென்றது. அப்பாவை போலவே கீழே கிடந்த மண்ணை அள்ளி நெற்றியில் பூசினான்.
வெகுநேரம் வரை அந்த மண்ணிலேயே உட்கார்ந்திருந்தான். காற்றில் அப்பாவின் வாசம் கலந்து வருவது போலவே அவனுக்கு இருந்தது.
அப்பா ஆசைப்பட்டது போலவே, வயலை மீண்டும் பசுமையாக்க எண்ணினான். அவனை ஆசீர்வதிப்பது போல, மழை பெய்து, மண்ணை ஈரமாக்கி கொண்டிருந்தது.
நாளையே உழவை துவங்கி விடலாம் என முடிவெடுத்தான். அப்பாவை இழந்தவனுக்கு, 'நான் இருக்கேன். கவலைப்படாதே...' என, ஆறுதல் சொல்வது போல் இருந்தது, அந்த பூமி!
பெ.பாண்டியன்வயது: 44படிப்பு: டி.இ.இ.இ., - எம்.ஏ.,பணி: இந்திய அஞ்சல் துறை தபால்காரர்சொந்த ஊர்: திருமயம்இதுவரை வெளியான படைப்புகள்: 500 கவிதைகள், 150 சிறுகதைகள், இரு நாவல்கள் மற்றும் ஒரு தொடர்கதை.
பெற்றுள்ள விருது: தமிழ் இசைச் சங்கம் - காரைக்குடியின் 50ம் ஆண்டு பொன் விழாவில், இளம் எழுத்தாளர் விருது.லட்சியம்: தினமலர் - வாரமலர் இதழில் முதல் பரிசு பெறுவது.கதைக்கரு பிறந்த விதம்: அன்றாட வாழ்வில் நாம் கண்டும், கேட்டும், உணர்ந்தும், அனுபவித்த சம்பவங்கள் தான், நம்மை துாண்டி, கதையாகவோ, கவிதையாகவோ எழுத வைக்கிறது. அந்த வகையில் இந்தக் கதை, என் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. வாரமலர் இதழில் வெளியாகும் என் முதல் கதை இது.

