
மார்க் ஆண்டனி படத்தில், புதிய முயற்சி!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் கதைப்படி, அப்பா - -மகன் மற்றும் 'ஹீரோ' - வில்லனாக நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி இருவருமே. 'ஹீரோ- - வில்லன்' என, இரட்டை வேடங்களில் நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, கடந்த காலங்களில், 'ஹீரோ' இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேடங்களில் நடித்திருப்பார். ஆனால், வில்லன், இரண்டு வேடங்களில் இதுவரை எந்த படத்திலும் நடித்ததில்லை. அந்த வகையில், மார்க் ஆண்டனி படம், கோலிவுட்டில் ஒரு சுவாரஸ்யமான புதிய முயற்சியாக கூறப்படுகிறது.
சினிமா பொன்னையா
இளசுகளை ஏமாற்றும், கிரண்!
சினிமாவில் வலம் வந்து, ஓய்ந்து விட்ட, நடிகை கிரணுக்கு, தற்போது, பட வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், 'கிளாமர்' புகைப்படங்களை வெளியிட்டு, இளவட்ட ரசிகர்களை ஈர்த்து வருகிறார், தற்போது, செயலி ஒன்றை துவங்கி இருக்கிறார்.அதன் மூலம் தன்னுடன், ஐந்து நிமிடம் பேசுவதற்கு, ௧௦ ஆயிரம் ரூபாய் என்றும், வீடியோ காலில், 15 நிமிடம் பேச, 14 ஆயிரம் ரூபாய் என்றும், வசூலித்து வருகிறார்.
கவர்ச்சி உடையில் அமர்ந்தபடி, கவர்ச்சிகரமான வார்த்தைகளால் பேசி, இளசுகளை வசியம் செய்து, பணம் சம்பாதித்து வருகிறார், கிரண்.
ஒரு நடிகையே இப்படி தங்களுடன் நேரடியாக பேசுவதால், அவரது செயலிக்கு, ரசிகர்கள் குவிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த விவகாரம், கோடம்பாக்கத்தில் கசிந்ததை அடுத்து, 'இளவட்ட ரசிகர்களை இப்படித்தான் ஏமாற்றி பிழைக்க வேண்டுமா?' என்று, அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
— எலீசா
ராஷ்மிகாவுடன் மோதும், மாளவிகா மோகனன்!
விஜயின், மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கு தீவிர முயற்சி எடுத்து வந்த, ராஷ்மிகா மந்தனாவுக்கு வாய்ப்பு கிடைத்தும், 'கால்ஷீட்' பிரச்னை காரணமாக, அதை இழந்தார். இதனால், அந்த படத்தில், மலையாள நடிகை, மாளவிகா மோகனன் ஒப்பந்தமானார்.
அதே போல், தற்போது, விக்ரமின் 61வது படத்தில் நடிப்பதற்கு, ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சு நடத்தினர். ஆனால், கடைசி நேரத்தில், இந்த படத்தில் இருந்தும், 'கால்ஷீட்' பிரச்னை காரணமாக வெளியேறினார்.
விளைவு, மாஸ்டர் படத்தை போலவே, ராஷ்மிகாவின் இந்த படத்தையும், கைப்பற்றி இருக்கிறார், மாளவிகா மோகனன்.
— எலீசா
62ம், 28ம்!
கடந்த, 10 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த, ராமராஜன், தற்போது, தன், 62வது வயதில், சாமானியன் என்ற படத்தில் மீண்டும், 'ஹீரோ'வாகவே நடிக்கிறார். இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பல நடிகையரிடம் பேச்சு நடத்தியபோது, 'அப்பா வயது, 'ஹீரோ'வுடன், 'டூயட்' பாடுவதா...' என்று, ஓட்டம் பிடித்து விட்டனர்.
தற்போது, தடம், மூக்குத்தி அம்மன் மற்றும் மாறன் உட்பட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ள, ஸ்மிருதி வெங்கட் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
28 வயதாகும் இவர், ராமராஜனுக்கு ஜோடி என்றதும், முதலில் அதிர்ச்சி அடைந்தார். என்றாலும், இதுவரை, 'ஹீரோயின்' வாய்ப்புகளே கிடைக்காமல் அல்லாடி வந்ததால், இந்த படத்தின் மூலமாவது அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று, ஒப்பந்தமாகி விட்டார்.
அதோடு, கடந்த காலங்களில், கரகாட்டக்காரன் மற்றும் எங்க ஊரு பாட்டுக்காரன் என, கிராமத்து கதைகளாக, ஆட்டை சுற்றி, மாட்டை சுற்றி பாடி நடித்து வந்த, ராமராஜன், சாமானியன் படத்தில், வங்கி மோசடி குறித்த கதையில் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* கார்கி என்ற படத்தை தயாரித்த, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது, குமாரி என்ற படத்தை தயாரித்து, கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என, மூன்று மொழிகளில் தயாராகிறது.
* தமிழில் முன்னணி, 'ஹீரோ'கள், கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்பளிக்காத போதும், தெலுங்கில் மகேஷ் பாபுவை தொடர்ந்து, நானி உடன், தசரா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!

