
பா-கே-ப
காலை, 11:30 மணி. அலுவலகத்தில், என் கேபினில் அமர்ந்து, 'இ-மெயிலில்' வந்திருந்த வாசகர்களின் கடிதங்களை படித்துக் கொண்டிருந்தேன். லென்ஸ் மாமா, உதவி ஆசிரியர்கள் மற்றும் பலரும், தத்தம் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, உள்ளே வந்த எழுத்தாள நண்பர் ஒருவர், என் அருகில் வந்து அமர்ந்தார். எப்போதும் கலகலப்பாக பேசுபவர், அன்று சோர்ந்து காணப்பட்டார்.
'மணி... தலை வலிக்குதுப்பா, உன் உதவியாளரிடம், சூடா ஒரு கப் காபி கொண்டு வரச் சொல்லுப்பா. இன்று காலை, என் வீட்டுக்காரம்மா, காபியில் சர்க்கரை போடாமலும், ஆறியும் கொடுத்துட்டாங்க.
'காபி குடித்த மாதிரியே இல்லை. 'என்னம்மா, சர்க்கரை போடலையா'ன்னு கேட்டா, சற்று விழித்து, 'இந்த வயசுக்கு பிறகு, சர்க்கரை அதிகம் சேர்த்துக்கக் கூடாது'ன்னு, டாக்டர் சொல்லியிருக்கார். அதான், சர்க்கரை போடலை...' என்றார்.
'உண்மையில், சர்க்கரை போடவே மறந்துட்டாங்க. அதை மறைக்க, இந்த சமாளிப்பு. உலக மகா நடிப்புடா சாமி...' என்று, கவுண்டமணி ஸ்டைலில் கூறினார்.
இதைக் கேட்ட லென்ஸ் மாமா, 'சரியா சொல்றப்பா... இந்த பொண்டாட்டிங்க செய்ற அலப்பறை இருக்கே... அப்பப்பா! அவங்களை சமாளிப்பது லேசுப்பட்ட காரியமில்லை.
'அவங்களோட சமாளிப்பிகேஷன்களை நாம கண்டுபிடிச்சு மடக்கினா, உடனே முகத்தை அஷ்டகோணலாக்கி, ஒரு, 'லுக்' விடுவாங்க பாரு... சகிக்காது...' என்றவர், உதவி ஆசிரியைப் பார்த்து, 'நான் சொல்றது சரிதானே...' என்று வம்புக்கு இழுத்தார், மாமா.
அவரோ, தாடையை தோளில் இடித்து, 'அழகு' காட்டி, வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
'பொழுது விடிஞ்சு பொழுது போனா எதையாவது சமாளிப்பதே வாடிக்கையா ஆயிடுச்சு...' என்று அலுத்துக் கொண்டார், எழுத்தாள நண்பர்.
அச்சமயம், வேட்டி - ஜிப்பா, தோளில் அங்கவஸ்திரத்துடன் புது, 'கெட் - அப்'பில் வந்தார், திண்ணை நாராயணன்.
'இதென்ன ஓய், புது வேஷம்; புது வருஷ ஸ்பெஷலா...' என்றார், மாமா.
அவருக்கு பதில் கூறாமல், 'நான் வரும்போது, ஏதோ வாழ்க்கை, சமாளிப்புன்னு பேச்சு அடிபட்டுதே... என்ன விஷயம்?' என்றார், நாராயணன்.
எழுத்தாள நண்பர், சுருக்கமாக கூற, 'ஐயோ, ஏதாவது தகவலை எடுத்து விடுவாரே... நான் கிளம்புகிறேன்...' என்று, கேமரா பை சகிதம் வெளியேறினார், லென்ஸ் மாமா.
'அப்பாடா...' என்று தன்னை ஆசுவாசப்படுத்தியவர், 'இன்று ஒரு தகவல் புகழ், காலஞ்சென்ற தென்கச்சி சுவாமிநாதன் தெரியும் தானே... அவர், வானொலி நிலையத்தில் பணியாற்றிய போது நடந்த சுவாரஸ்யமான சமாளிப்பு சம்பவங்களை, ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்...' என்று கூற ஆரம்பித்தார், நாராயணன்:
சமாளிப்புங்கிறது ஒரு தனி சாமர்த்தியம். அது எல்லாருக்கும் சுலபமா வந்துடாது. முக்கியமா கலைஞர்களுக்கு சமாளிப்பு, சாமர்த்தியம் ரொம்ப அவசியம்.
இப்பல்லாம் வானொலி நாடகங்களை முன்பே ஒலிப்பதிவு பண்ணி, இசையெல்லாம் சேர்த்து அழகு பண்ணி, 'டேப்'ல தயாரிச்சு, தேவையான நேரத்துல ஒலிபரப்பிடறாங்க.
முன்னேயெல்லாம் இந்த வசதி இல்ல. நேரடியாவே வசனம் பேசி, நடிக்கணும். அப்படியே அது ஒலிபரப்பாகும். தேவைப்படற நேரத்துல இசை, சத்தம் இதையெல்லாம் தனியா ஒருத்தர் போட்டுக்கிட்டு இருப்பார்.
கதாநாயகன் காபி ஆத்தறார்ன்னா, நிஜமாவே ஒருத்தர் தனியா ஒரு மைக் முன், காபியையோ, தண்ணியையோ ஆத்தி அந்த சத்தத்தை உண்டாக்கிக்கிட்டு இருப்பார். இப்ப, அந்த சத்தத்தை தனியா, 'ரெக்கார்ட்' பண்ணி, வசனத்தோட சேர்த்து விடும் வசதி வந்து விட்டது.
அந்த நாள்ல இதையெல்லாம் ரொம்பவும் எச்சரிக்கையோட செய்யணும். ஏதாவது தப்பா ஒலிபரப்பு ஆச்சுன்னா, அதை திருத்தறதுக்கு வழி இல்லாமல், நேயர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும்.
அது மாதிரி சமயத்துல, 'சமாளிப்பு' ரொம்ப அவசியம்.
அந்த காலத்துல, அரை மணி நேர நாடகம் ஒண்ணு, நேரடியா ஒலிபரப்பாகியது.
நடிகர்களான, டி.கே.சண்முகமும், திரவுபதியும் நடிச்சுக்கிட்டிருக்காங்க. ஒரு இடத்துல, குழந்தை விறீட்டு அழணும். உடனே, கணவன், மனைவியை பார்த்து, பொறுப்பில்லாம குடும்பம் நடத்தறதான்னு ஏசணும். இதுதான் காட்சி.
ஒரு இசைத்தட்டுல, இந்த மாதிரி, 'எபெக்ட்ஸ்'லாம் பதிவு பண்ணியிருந்தாங்க. அதுல குழந்தை அழற சத்தம், நாய் குரைக்கிற சத்தம், ரயில் போற சத்தம், பூனை கத்தற சத்தம் இப்படி நிறைய இருக்கும். அதுல, குழந்தை அழற சத்தத்தை அந்த நேரத்துல போடணும், ஒருவர்.
அந்த இசைத்தட்டுல, அது ரெண்டாவது ஐட்டமா இருந்துச்சு. ஆனா, அந்த ஆளு தவறுதலா, மூணாவது ஐட்டத்தைப் போட்டுட்டார். என்ன ஆச்சு தெரியுமா, குழந்தை அழறதுக்குப் பதிலா, நாய் குரைக்க ஆரம்பிச்சுட்டுது. எல்லாரும் பதறி போயிட்டாங்க. என்ன பண்றதுன்னு புரியல.
அப்போ, நாடகத் தயாரிப்பாளரா இருந்த பேராசிரியர், அ.ச.ஞானசம்பந்தன், திகைச்சுப் போய், டி.கே.எஸ்., முகத்தைப் பரிதாபமா பார்த்தார்.
சண்முகம் கொஞ்சம் கூட பதறாம, 'ஏன்டி, வாழற வீட்டுல இப்படி நாயை கொண்டாந்து வளர்க்க வேணாம்ன்னு, எத்தனை தடவை நான் சொல்றது... குழந்தை அலற சத்தத்தை கூட, நாய் சத்தம் அடக்கிப்புடுது பார்த்தியா'ன்னார்.
ஒலிபரப்பு அறைக்குள்ளே நடந்த ஒரு தவறு, வெளி உலகத்துக்கு தெரியாமலே போயிட்டுது. இதுக்குக் காரணம், அந்த கலைஞரோட புத்திசாலித்தனமான சமாளிப்பு.
இதே மாதிரி தான், ஒரு வரலாற்று நாடகம் நடந்துக்கிட்டு இருந்தது.
'இளவரசர், போரில் வெற்றி பெற்று வந்து கொண்டிருக்கிறார்...'ன்னு சொல்ல வேண்டியவர், 'மைக்' முன்னாடி வந்து, 'அரசே, இளவரசர் தோற்றுப் போய் வந்து கொண்டிருக்கிறார்...'ன்னு சொல்லிட்டார்.
நாடக தயாரிப்பாளர், துறைவன், இதைக் கேட்டவுடனே எழுந்திருச்சி, 'மைக்' முன் ஓடி வந்து, 'இளவரசர் தோற்கவில்லை. வெற்றி வாகை சூடி விரைந்து இங்கு வந்து கொண்டிருக்கிறார். எதிரியின் ஒற்றன் இவன், பொய் சொல்லி ஓடப்பார்க்கிறான். இவனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்...'ன்னு சொல்லி, அவனை அடிக்க ஆரம்பிச்சுட்டார்.
இது மாதிரியான சாமர்த்தியமான சமாளிப்புகள், பெரிய தவறுகள் வெளியே தெரியாம காப்பாத்தறதுக்கு உதவியா இருந்திருக்கு.
ஒரு மேடை நாடகம். கலைவாணர், என்.எஸ்.கே., நடிச்சுக்கிட்டு இருக்கார். அவர் இன்னொருத்தரை பார்த்து வசனம் பேசறார்...
'அடிக்கிற அடியில, பல்லு, 31ம் உடைஞ்சுடும்...'ன்னு ஏதோ ஞாபகத்துல சொல்லிட்டார்.
அவரோட நடிச்சுக்கிட்டு இருந்தவர் சிரிச்சுக்கிட்டே, 'ஒரு பல்லை வுட்டுட்டீங்களே...'ன்னார்.
'அந்த ஒரு பல்லுலே, பல்லு வலி வந்தே நீ சாகணும். அதுக்காக வுட்டு வச்சிருக்கேன்...' என்று சமாளித்தார்.
- என்று நாராயணன் கூறி முடிக்கவும், 'சமாளிப்பு ஒரு கலை தான் போலிருக்கு...' என்று, நினைத்துக் கொண்டேன், நான்.