sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (17)

/

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (17)

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (17)

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (17)


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசியலைத் தாண்டி, காமராஜர் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் என, இரு பெரும் தலைவர்களிடமும் ஜெய்சங்கர் அபிமானம் கொண்டவர் என்பது, நெருக்கமானவர்களுக்கு தெரியும்.

நவம்பர், 1974, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், 11வது நினைவு விழா, அவர் பிறந்த ஊரான, பசும்பொன்னில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினரான ஜெய்சங்கர், 'இந்தியாவில், வீரத்திற்கு எடுத்துக்காட்டாக இரண்டு சிங்கங்கள் நம்மிடையே வாழ்ந்தன. ஒன்று, கங்கை கரையில் வாழ்ந்த, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ். இன்னொன்று, வைகை கரையில் வாழ்ந்த, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

'தேவர் என்றால், முத்துராமலிங்கத் தேவர் ஒருவர் தான், நம் மனக்கண் முன் தெரிவார். அவரது தொண்டால், தேச பக்தியால், தியாகத்தால், தேவராகவே வாழ்ந்தாரே தவிர, ஜாதியால் அல்ல. தேவர் என்றால், அவரைப் போல் தேசப் பக்தி, தெய்வ பக்தி இருக்க வேண்டும். அது ஒரு ஜாதிப் பெயர் என்று கருதக் கூடாது.

'இந்த புனித பூமிக்கு வந்ததால், அவரிடமிருந்த நல்ல குணங்கள் எனக்கும் வந்து, என்னையும் தேவர் என்று சொன்னால், அதை பெருமையாக கருதுவேன். 'பாரத ரத்னா' பட்டம் பெற்றது போல் மகிழ்ச்சி அடைவேன்.

'தேர்தலில் போட்டி போடுபவர்கள், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யக் கூடாது என, சட்டம் இருக்கிறது. எந்த அரசியல்வாதியும், அந்த அளவுக்குள் செலவு செய்தவர்கள் அல்லர்;   அதிகமாகத்தான் செலவு செய்திருப்பர்.

'ஆனால், இந்தியாவில் இருவர் மட்டும் அந்த, 15 ஆயிரம் ரூபாய் கூட செலவு செய்யாமல், வெற்றி பெற்றனர். நேருவும், தேவரும் தான், அவர்கள்; மக்களுக்காகவே உழைத்த தலைவர்கள்...' என்று, ஜெய்சங்கரின் இந்த பேச்சு, அன்று அரசியல் வட்டாரத்தை ஊன்றிப் பார்க்க வைத்தது.

அதே காலகட்டத்தில், சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள, 'பேன்ந்தர்ஸ்' என்ற சமூக சேவை சங்கம், நடிகர் ஜெய்சங்கரிடம், 1,500 ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் வழங்கின.

அவற்றை, 'மெர்சிஹோம், வாலிகான் சமூக நிலையம்' மற்றும் 'வேடந்தாங்கல் சமூக நிலையம்' உள்ளிட்ட, கருணை இல்லங்களுக்கு வழங்கிப் பேசிய ஜெய்சங்கர், 'இப்போது, நடிகர்களை, நாட்டில் பலரும் பல வகைகளில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

'என்னைப் பொறுத்தவரை, பெரிதாக எதற்கும் பயன்படாவிட்டாலும், இதுபோன்ற நல்ல காரியங்களுக்கு ஓரளவாவது முடிந்தவரை பயன்பட வேண்டும் என எண்ணுகிறேன்.

'சுதந்திரம் பெற்று, 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சுதந்திரம் வாங்கிய பிறகு, நாம் எல்லாருமே, மக்களை ரொம்பவே கெடுத்து விட்டோம். அதற்கு முன், சுதந்திரம் வாங்க வேண்டுமென்ற ஒருவித வெறி இருந்தது. ஆர்வமும், உழைப்பும் இருந்தன.

'காந்திஜிக்கு பின்னால் சென்ற இந்தியா, சுதந்திரத்திற்கு பின்னால் யார் யார் பின்னாலோ செல்கிறது...' என, பொடி வைத்துப் பேசினார்.

'காந்திஜி பின்னால் சென்ற இந்தியா யார், யார் பின்னாலோ செல்கிறது! அரசியல் தலைவர்கள் மீது ஜெய்சங்கர் கடும் தாக்கு' என, அன்றைய நாளிதழ்கள், இதற்கு முக்கியத்துவம் அளித்து, செய்தி வெளியிட்டன. ஜெய்சங்கருக்கு அரசியல் ஆசை தொற்றிக் கொண்டதாக, பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

தலைவர்களை விமர்சித்த, அவரது அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு, 'கலைஞர்களுக்கு அரசியல் வேண்டாம் என்று, நான் என்றுமே சொன்னதில்லை. அதற்கு ஒரு தகுதி வேண்டும் என்பது தான், என் வாதமாக எப்போதும் இருந்திருக்கிறது.

'நடிகர்கள் பலர், கலைக்காக உயிரையும் கொடுப்பேன், சேவை செய்கிறேன் என்பது போல் தான், இன்று, பலர் நாட்டிற்காக உயிரையும் தருவேன் என்று ஆரம்பித்து இருக்கின்றனர்...' என்று, ஒரு பத்திரிகை பேட்டியில் சொல்லியிருந்தார். இதுவும் பரபரப்பை கூட்டிவிட்டது.

'ஜெய், நிச்சயம் அரசியலில் நுழையப் போகிறார்...' என்ற எண்ணத்திற்கு இது வித்திட்டது.

இந்த சமயத்தில், அவர் நடித்த, உங்கள் விருப்பம் திரைப்பட வெளியீட்டு விழா, சென்னை, பாரகன் தியேட்டரில் கொண்டாடப்பட்டது.

அதில் பேசிய, தி.மு.க.,வை சேர்ந்த ராஜாராம், 'ஜெய்சங்கர், எந்தக் கட்சியிலும் சேராதவர். தமிழக ரசிகர் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளவர், எந்த கட்சியிலும் சேராமல் இப்படியே அனைவருக்கும் பொதுவானவராக இருந்து, மக்களை மகிழ்விக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்...' என்றார்.

ராஜாராம் மட்டுமல்ல, அன்று, ஜெய்சங்கரை நேசித்த லட்சக்கணக்கான மக்களின் விருப்பமும் அதுதான். அதன் பிறகு, அரசியல் விஷயத்தில் கொஞ்சம் அடக்கமாகவே நடந்து கொண்டார், ஜெய்சங்கர்.

அவரது அரசியல் நுழைவு, அவரது கருணை இல்லப் பணிகளை கொச்சைப்படுத்தி விடும் என்ற நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று, சினிமாவிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தத் துவங்கினார்.

எழுத்தாளர், சுஜாதாவின், காயத்ரி கதை, அதே பெயரில் திரைப்படமானது. கதாநாயகனாக, ஜெய்சங்கர். வில்லன் பாத்திரத்துக்கு அப்போது வளர்ந்து வந்த, ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்தனர்.

கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நடிகருக்கு, காயத்ரி ஆறாவது படம். படத்தின் இயக்குனர் ஆர்.பட்டாபி ராமன், ஒருநாள், அவரை, ஜெய்சங்கருக்கு அறிமுகப்படுத்தினார்.

அப்போது, 'உங்களுடன் நடிப்பதில் எனக்கு பெருமை சார். உங்கள் ஜேம்ஸ்பாண்ட் படங்களை நானும், என் நண்பர்களும் விரும்பிப் பார்ப்போம். எதிர்காலத்தில், 'ஸ்டன்ட்' படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால், உங்கள் படங்களைத் தான், நான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்வேன்...' என, மிகுந்த பணிவோடு சொன்னார், அந்த நடிகர்.

அவர்...

-தொடரும். - இனியன் கிருபாகரன்






      Dinamalar
      Follow us