தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

புயல் மழை, புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் ஓய்ந்த ஒரு ஞாயிறு மாலை வேளை, 'பீச்' மீட்டிங்கில் நண்பர்கள் குழுவினர், கலகலப்பாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

நண்பர்கள் குழாமில், பாளையங்கோட்டையை பூர்வீகமாக கொண்ட நண்பர், எப்போது, 'பீச்' மீட்டிங்குக்கு வந்தாலும், தன் ஊர் பெருமையை சொல்லாமல் இருக்க மாட்டார். 'கட்டபொம்மன் ஆண்ட வீரம் விளைந்த மண்...' என்று பெருமை அடித்துக் கொள்வார்.

குழுவில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரும் வழக்கமாக, 'பீச்' மீட்டிங்குக்கு வருவார்.

அன்றும் வழக்கம் போல், பாளையங்கோட்டை நண்பர், ஊர் பெருமை பேச, கடுப்பான சிவகங்கை மாவட்ட நண்பர், 'நிறுத்தும் ஓய்... கட்டபொம்மன் வீரமானவர் தான். எங்க ஊர் மருது பாண்டியரும், அவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல. அதற்கு எத்தனையோ உதாரணம் சொல்லலாம்...' என்று, எதிர் குரல் கொடுத்தார்.

எங்கே வாக்குவாதம் முற்றிவிடப் போகிறதோ என்று, 'அவர், சொல்ல வந்ததை சொல்லட்டுமே...' என்றேன், நான்.

சிவகங்கை மாவட்டக்காரர் சொல்ல ஆரம்பித்தார்:

ஒருமுறை, எதிரிகளுடன் போரிட்டு, அவர்கள் கையில் சிக்காமல், குதிரையில் பாய்ந்தோடி தப்பித்து, விடிகாலை ஒரு கிராமத்தை வந்தடைந்தார், மருது பாண்டியர்.

அங்கு ஒரு கூரை வீட்டின் வாசலில், கோலம் போட்டுக்கிட்டிருந்தாங்க, வயசான அம்மா. அங்கே போய் குதிரை நின்னுது. அந்த அம்மா நிமிர்ந்து பார்த்தாங்க.

மருது பாண்டியருடைய கம்பீரமான தோற்றத்தை பார்த்து, 'யாரப்பா நீ, உனக்கு என்ன வேணும்...'ன்னு கேட்டாங்க.

'அம்மா... எனக்கு பசியா இருக்கு, தாகமாகவும் இருக்கு... ஏதாவது இருந்தா குடுங்களேன்...' என்றார்.

'ராத்திரி தண்ணியில போட்டு வச்சுருக்கிற பழைய சோறு இருக்கு... வா போடறேன்னு...' சொல்லி, அன்பா உபசரிச்சாங்க.

'அம்மா... ராத்திரி பூரா நான் துாங்கல. இங்கே மறைவா ஒரு இடம் கிடைச்சா, குதிரையை கட்டிப் போட்டுட்டு துாங்கலாம்ன்னு பார்க்கறேன்...' என்றார், மருது பாண்டியர்.

'அதுக்கென்ன... வீட்டுக்கு பின்னாடி ஒரு கொட்டகை இருக்கு. அங்கே, குதிரையை கட்டிப் போட்டுட்டு படுத்துக்க... யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க... குதிரைக்கும் தீனி போட்டுடறேன்...'னு சொன்னாங்க.

மருது பாண்டியருக்கு, ராஜ போஜனத்தை விட, அந்தப் பழைய சோறும், பண்பாடும் ரொம்ப பெரிசா தெரிஞ்சுது.

அந்த அம்மா கொடுத்த ஓலைப் பாயை வாங்கிக்கிட்டு குடிசைக்கு பின்பக்கம் போனார். குதிரையை கட்டினார். பாயை விரிச்சு படுத்து அசந்து துாங்கிட்டார்.

கண் விழிச்சப்போ, சூரியன் உச்சியில இருந்தான்.

அந்தக் கூரை வீட்டுல சாப்பிட்ட சாப்பாடும், துாங்கின துாக்கமும், உடம்புலயும், மனசுலயும் ஒரு புது உற்சாகத்தை அவருக்கு கொடுத்துது.

நன்றியுணர்வோடு அந்த வயசான அம்மாவை பார்த்தார்.

சமயத்துல அவங்க காட்டின அன்புக்கு, இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாதுன்னு நினைச்சார்.

'அம்மா... உங்க வீட்டுல, ஒரு எழுத்தாணி இருந்தா கொண்டாங்களேன்னு...' சொன்னார்.

'என் பிள்ளைகள், ஒரு விசேஷதுக்காக, வெளியூர் போயிருக்காங்கப்பா... அதெல்லாம் எங்கே வச்சிருக்காங்கன்னு தெரியலையே...' என்றார்.

'சரி, பரவாயில்லை...'ன்னு வீட்டுக் கூரையிலேர்ந்து ஒரு பனை ஓலையும், பக்கத்து வேலியிலிருந்து ஒரு முள்ளையும் எடுத்தவர், 'அந்த கிராமம் பூராவும், அந்த அம்மாவுக்கே சேர வேண்டியது...'ன்னு எழுதி, கையெழுத்துப் போட்டார்.

முள்ளால எழுதிய அந்த தர்ம சாசனத்தை, அவங்ககிட்ட கொடுத்து, 'அம்மா... சிவகங்கை சமஸ்தான அதிகாரிகள்கிட்ட இதை நீங்க கொடுத்தா, உங்களுக்கு ஏதாவது அனுகூலம் உண்டாகும்...'ன்னு சொல்லி, குதிரை மேல ஏறி போயிட்டார்.

ஊரிலிருந்து பிள்ளைங்க வந்ததும், இதை எடுத்துக்கிட்டு போய், சமஸ்தானத்துல காட்டலாம்ன்னு, அந்த அம்மா நினைச்சாங்க. ஆனா, அதுக்குள்ள பகைவர்கள் சமஸ்தானத்தைக் கைப்பற்றியதாக சேதி வந்தது.

அதுக்கப்புறம், மருதுபாண்டியரை பிடிச்சு சிறையில் அடைச்சுட்டாங்க, பகைவர்கள். ரொம்ப காலம் கழிச்சு, அவருடைய கடைசி காலத்துல, மருது பாண்டியரிடம், 'உங்க கடைசி விருப்பம் என்ன சொல்லுங்க...'ன்னு கேட்டாங்க, பகைவருடைய அதிகாரிகள்.

அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா?

'நான், யார் யாருக்கு, எந்தெந்த கிராமத்தை எழுதிக் கொடுத்திருக்கேனோ, அதெல்லாம் அவங்க அவங்களுக்கு சொந்தமாகணும். அதுதான் என் பிரார்த்தனை. வேற ஒண்ணும் இல்ல...' என்றார்.

இதைக் கேட்டதும், அவருடைய விரோதிகளே ஒரு மாதிரியா ஆயிட்டாங்க. அவருடைய நன்றியுணர்வுக்கு மரியாதை குடுத்து, அவருடைய இறுதி ஆசையை நிறைவேத்தினாங்க.

மருது பாண்டியர் கொடுத்த பொருட்களெல்லாம் உரியவர்களுக்கு வழங்கப்படுதுன்னு கேள்விப்பட்டு, இந்த அம்மா தன்கிட்ட இருந்த ஓலையை குடுத்தனுப்பிப் பார்த்தாங்க.

அந்த கிராமம் அவங்களுக்கு கிடைச்சது. அப்படி கிடைச்ச கிராமம் தான், பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்.

தன் வீட்டுல பழைய சோறு சாப்பிட்டது, மருது பாண்டியர்ங்கிற விஷயமே, அந்த அம்மாவுக்கு, அப்பத்தான் தெரிந்தது.

அந்த அம்மா, சாகற வரைக்கும் அதைச் சொல்லி சொல்லி மகிழ்ந்துள்ளார்.

- இப்படி, சிவகங்கை நண்பர் சொல்லி முடிக்கவும், முதல் ஆளாக, கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், பாளையங்கோட்டை நண்பர்.

மண் வாசத்துக்கும், வீரத்துக்கும் பேதம் கிடையாது என்பதற்கேற்ப பாளையங்கோட்டை நண்பரின் செயலை எண்ணி மகிழ்ந்தேன்.



ஒரு பெரியவர், உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

'நாம் தினமும் ஒரு நல்ல காரியமாவது செய்ய வேண்டும்...' என்றார்.

'ஐயா... நான் இன்றைக்கு, இரண்டு நல்ல காரியங்கள் செய்தேன்...' என்றார், எதிரே இருந்தவர்.

'அப்படியா... மகிழ்ச்சி, என்ன அது சொல்லுங்கள்...' என்றார், பெரியவர்.

'வரும் வழியில், சாலை நடுவில் ஒரு பாறாங்கல் கிடந்தது. அதை எடுத்து ஓரமாய் போட்டேன்...' என்றார்.

'மிக நல்ல காரியம். அடுத்தது?' என்றார்.

'பாதை ஓரமாய், வயதானவர் ஒருவர் அடிபட்டுக் கிடந்தார். அவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தேன்...' என்றார்.

'ஆகா... அற்புதம். அது சரி, அவருக்கு எப்படி அடிபட்டது?' என்றார்.

'நான் துாக்கிப் போட்ட கல், அவர் மேலே தானே விழுந்தது...' என்றாராம்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us