PUBLISHED ON : ஜன 08, 2023

கறுப்பு நிறம், அந்தக் குறையை மறைக்கும் பொலிவான முக வெட்டு, சிறிய கண்கள். ஆனால், அதில் காந்தம் போன்றதோர் ஈர்ப்பு. வில்லன் நடிகரின் முகம் ஜெய்சங்கருக்குள் என்னவோ சொன்னது.
'வாழ்த்துகள். எனக்கு மிகவும் பிடித்த இயக்குனரான பாலசந்தரின் கையால் குட்டு பட்டவர்கள் யாரும், இதுவரை சோடை போனதில்லை. நீங்களும், எதிர்காலத்தில் நல்ல புகழடைவீர்கள்...' என, உள்ளன்போடு வாழ்த்தினார், ஜெய்சங்கர்.
படப்பிடிப்புகளில் அந்த நடிகரின் சுறுசுறுப்பு, அடக்கமான பண்பு ஆகியவை, அவர் மீது ஜெய்சங்கருக்கு ஒரு நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியது.
ஜெய்யின் சுறுசுறுப்பு, கலகலப்பான பேச்சு, பெரிய நடிகர் என்ற பந்தா இன்றி பழகும் தன்மை, குறிப்பாக, படத்தின் நலனுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் எளிமை ஆகியவை, வில்லன் நடிகருக்கு, ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது.
மற்ற நடிகர்களிலிருந்து மாறுபட்டு, எளிய மனிதர்களை தயாரிப்பாளராக்கிய ஜெய்யின் அரிய பண்பையும், உதவும் குணத்தையும் மற்றவர்கள் மூலம் அறிந்து, அவர் மீது வில்லன் நடிகருக்கு பெரும் மரியாதை உருவாகியது. படம் நிறைவடைந்தபோது, இருவரும் சகோதரர்களாக ஆகிவிட்டனர்.
ஜெய்சங்கர், அந்த நடிகருக்கு வழங்கிய ஆசியும், சில ஆண்டுகளில் பலித்தது. ஆம், குறுகிய காலத்தில் திரையுலகின் புகழின் உச்சியைத் தொட்டார், அந்த வில்லன் நடிகர். நாளுக்கு நாள், அவரது புகழ் கூடிக்கொண்டே இருந்தபோதும், இறுதி வரை ஜெய்சங்கர் மீது அதே மாறாத அன்பையும், மரியாதையும் கொண்டிருந்தார்.
ஜெய்சங்கரின் குணத்தை பின்பற்றியே பிற்காலத்தில், தனக்கு உதவியவர் களுக்காக, சில படங்கள் நடித்துக் கொடுத்தார் என்பதும், இந்த இடத்தில் சொல்ல வேண்டிய தகவல்.
தனக்கு வில்லனாக நடித்த நடிகரின் படத்தில், பிற்காலத்தில், தான் வில்லனாவோம் என, ஜெய்சங்கர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். காலம் போடும் கணக்கை யார் அறிவார்? வில்லன் நடிகர் யார் என, புரிந்து கொண்டிருப்பீர்களே... அவர் தான், ரஜினிகாந்த்!
கடந்த, 1977ம் ஆண்டின் மத்தியில், முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியிடமிருந்து, ஜெய்சங்கருக்கு அழைப்பு வந்தது. கட்சியில் சேர அல்ல, தங்கள் நிறுவனத்தின் படத்தில் நடிக்க!
கருணாநிதியின் அரசியல் சகாவான எம்.ஜி.ஆர்., தன் செல்வாக்கால், தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த நேரம் என்பதால், அந்த அழைப்புக்கு என்ன அர்த்தம் வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.
ஒரு மாலைப் பொழுதில், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார், ஜெய்சங்கர். தங்களது சொந்த நிறுவனமான, 'பூம்புகார் புரொடக் ஷன்ஸ்' தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என, அவரை கேட்டுக் கொண்டார், கருணாநிதி.
அந்த சந்திப்புக்கு முன்பு வரை, கருணாநிதியுடன் அவருக்கு நட்பு இருந்ததில்லை. ஆனால், அரசியலைத் தாண்டி எழுத்து, பேச்சு என அளவிட முடியாத திறமைகளை கொண்ட எழுத்தாளரான, கருணாநிதி மீது, நல்ல அபிப்ராயம் இருந்தது.
தமிழக முதல்வராக இருந்த அவரிடம், சினிமா உலகப் பிரச்னைகளை கொண்டு சென்றால், திரையுலகைச் சேர்ந்தவர் என்ற முறையில், அக்கறையுடன் தீர்வு காண்பவர் என்ற அளவில் ஒரு மரியாதை இருந்தது.
சம்மதம் சொல்லித் திரும்பியவரை பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கி விட்டனர், நண்பர்கள். கருணாநிதியுடன் நெருங்கினால், எம்.ஜி.ஆரின் விரோதத்தை சம்பாதிக்க நேரிடும் என்பது, அவர்களின் வாதம். இதே அபாயத்தையே, உறவினர்களும் சுட்டிக் காட்டினர்.
குழப்பமடைந்த போதும், ஒரு கலைஞன் என்ற முறையில், எம்.ஜி.ஆர்., தன்னைப் புரிந்து கொள்வார் என, அவர்களுக்கு சமாதானம் சொன்னார், ஜெய்சங்கர்.
சில நாட்களில், வண்டிக்காரன் மகன் மற்றும் நெஞ்சுக்கு நீதி என, இரண்டு படங்கள், கருணாநிதி கதை வசனத்தில், ஜெய்சங்கர் நடிப்பதாக, 'தினத்தந்தி' நாளிதழில் விளம்பரம் வந்தது. பட உலகில், அது பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்பார்த்தது போலவே, இந்தப் படங்களின் ஆரம்ப விழாவே சர்ச்சைக்கு வித்திட்டது.
'அண்ணாதுரையின் கதை, கருணாநிதி கதை - வசனம், ஜெய்சங்கரின் நடிப்பு, இவை நாட்டில் புரட்சியை உண்டு பண்ணப் போகின்றன...' என, கருணாநிதியை குளிர்விக்கும் விதமாக விழாவில் பேசினர்.
இறுதியாக பேசிய கருணாநிதி, 'என் கதை வசனத்தில் பேசுவதன் மூலம், நண்பர் ஜெய்சங்கர், என் கொள்கைகளை நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லப் போகிறார் என, இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
'நான் எழுதும் வசனங்களை பேச, அவர் தயங்க மாட்டார் என நம்புகிறேன். இந்த படம், ஜெய்சங்கர் வாழ்க்கையில் ஒரு திருப்பம். இதை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதனால், அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமானால், அவருக்கு பாதுகாப்பு அளிக்க நாங்கள் (தி.மு.க.,) தயாராகவே இருக்கிறோம் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்...' என, அரசியல் சாதுர்யமாக, தன் பேச்சை முடித்தார்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. தன் மகன் மு.க.முத்து மூலம், சினிமா தொழிலுக்கு இடைஞ்சல் தந்தார், கருணாநிதி. இப்போது அரசியலில் குடைச்சல் தர, தன்னுடன் ஜெய்சங்கரை கூட்டு சேர்த்துக் கொண்டதாக கருதி, எம்.ஜி.ஆர்., கோபத்தில் இருப்பதாக, திரையுலகில் பேசிக் கொண்டனர்.
தான் வசனம் எழுதும் படங்களின் படப்பிடிப்புக்கு செல்லும் வழக்கமுடையவர், கருணாநிதி. வண்டிக்காரன் மகன் படம் வளர்வதை பார்க்க, அடிக்கடி படப்பிடிப்புக்கு வந்தார். கருணாநிதி என்ற அரசியல் ஆளுமையுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஜெய்சங்கருக்கு உருவானது.
இதை பார்த்தவர்கள், மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு, அரசியல் ஆசை துளிர் விட்டிருப்பதாக, வதந்தி கிளப்பினர்...
- தொடரும்
திரையுலகில் புகழோடு விளங்கிய காலத்தில், ரசிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஜெய்சங்கருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டு, அவை ஆராதிக்கப்பட்டன.அவற்றில், 'மக்கள் கலைஞர்' பட்டம் தான், வாழ்நாள் வரை, அவரோடு பயணித்தது. ஜூன், 1969ல், மதுரை, புதுப்பட்டி கிராமத்தில், 'மதுரை ஜெய்சங்கர் ரசிகர் மன்றம்' சார்பில், தொழு நோயாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் கலைவிழாவில், 'மக்கள் கலைஞர்' என்ற பட்டம், அவருக்கு வழங்கப்பட்டது.அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான, பெண்ணை வாழ விடுங்கள் என்ற படத்தில் தான், 'மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடிக்கும்' என, முதன் முறையாக திரையில் அந்த பட்டம் இடம்பெற்றது.
- இனியன் கிருபாகரன்
