PUBLISHED ON : ஜூன் 25, 2023

பா - கே
சென்னையின் பிரதான பகுதியில் அமைந்திருக்கும் நட்சத்திர ஹோட்டல் அது. இதனுள் இருக்கும் மதுபான கூடத்தில், சினிமா பிரபலங்களை அதிகம் பார்க்கலாம். வாய்ப்பு தேடி, இவர்களை சந்திக்க வரும் இளம் வயதினர் கூட்டத்துக்கும் பஞ்சமிருக்காது.
அன்று, தனியார் இன்ஷுரன்ஸ் நிறுவனம் ஒன்றின் மேலதிகாரியாக இருக்கும் நண்பர் அழைப்பை ஏற்று, லென்ஸ் மாமா, நான், மூத்த செய்தியாளர் ஆகியோர் அங்கு சென்றிருந்தோம்.
நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து இரண்டு மேஜை தள்ளி, ஸ்டைலிஷாக ஆங்கிலம் பேசக்கூடிய, 50 வயது தாண்டியவரான, தமிழ் பட இயக்குனர் ஒருவருடன், நான்கு இளம் பெண்கள் மற்றும் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர்.
ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட் அணிந்து, பிரெஞ்ச் தாடியுடன் ஹாலிவுட் நடிகர் போல் தோற்றமளித்த அந்த இயக்குனர், அங்கு நிலவிய மேற்கத்திய இசைக்கு ஏற்ப, அமர்ந்தவாறே உடலை வளைத்து, நெளிந்து ஆடிக்கொண்டிருந்தார். இடையிடையே, கண்ணாடி கோப்பையில் இருந்த, உ.பா.,வையும் ஏற்றிக் கொண்டிருந்தார்.
என் அருகில் அமர்ந்திருந்த லென்ஸ் மாமாவும், மூத்த செய்தியாளரும் கடகடவென, இரண்டு மூன்று கோப்பை, உ.பா.,வை காலி செய்திருந்தனர்.
இன்ஷுரன்ஸ் நிறுவன மேலதிகாரி, பொறுமையாக சரக்கை உள்ளே இறக்கிக் கொண்டிருக்க, நான், லைம் - சோடாவை பருக ஆரம்பித்தேன்.
திடீரென, 'காப்பீடு தொகை பெற எப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்யறாங்க தெரியுமா மணி... தினமும் இவர்களோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கு...' என்று புலம்ப ஆரம்பித்தவர், பிரான்சில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூற ஆரம்பித்தார்:
கற்பனையை விட, சுவாரஸ்யமான சம்பவங்கள்லாம் கண் முன் நடந்துக்கிட்டிருக்கு.
பிரான்ஸ் நாட்டில், கார் ஒன்று எரிஞ்சு போச்சு. அதுல போனவரும் இறந்துட்டார்.
உடனே, அங்கே போய் சேர்ந்தது, போலீஸ்.
கார் நம்பரை பார்த்து, ஆள் யார்ன்னு கண்டுபிடிச்சு, அவரோட வீட்டுக்கு தகவல் குடுத்தாங்க. அந்த ஆளுக்கு மனைவியும், ஒரு காதலியும். ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம ஒற்றுமையாவே இருந்தாங்க.
சேதி கேள்விப் பட்டு, உடனே, இருவரும் கறுப்பு டிரஸ் போட்டுக்கிட்டு விபத்து நடந்த இடத்துக்கு வந்து, கருகிப் போன சடலத்தை பார்த்தாங்க.
அது, எங்க கணவர்தான்னு அடையாளம் காட்டினாங்க. அதுக்கப்புறம் முறையான பிரேத பரிசோதனை நடந்தது. அந்த ஆள், விபத்துல இறந்து போனது உறுதி ஆனதும், அவங்களும், சடலத்தை வாங்கிக்கிட்டு போய் எரிச்சுட்டாங்க.
இறந்து போன அந்த ஆள், மூன்று இன்ஷுரன்ஸ் கம்பெனிகள்ல, எட்டு ஆயுள் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்திருந்தாராம்.
அந்த மூன்று கம்பெனிகள்ல ரெண்டு கம்பெனிகள், அவர் மனைவிக்கு இன்ஷுரன்ஸ் பணத்தை குடுத்துட்டுது. ஒரு கம்பெனி மட்டும் பணம் குடுக்காம, கொஞ்சம் தாமதம் பண்ணினது.
அந்த கம்பெனி, ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி, துப்பறியும் நிபுணர் ஒருவரை வாடகைக்கு அமர்த்தி, இறந்ததாக சொல்லப்படும் ஆளோட விதவை மனைவியையும், காதலியையும் கண்காணிக்க சொல்லிச்சு.
விபத்து சம்பந்தமான ரிக்கார்டுகளை எல்லாம் பார்த்தார், அந்த நிபுணர். கார் தீ பிடிக்க எந்த காரணமும் இல்லேன்னு தெரிஞ்சுது. கருகின சடலத்தின் பல் அமைப்பு சம்பந்தமான குறிப்புகளை பார்த்தார்.
மனைவியும், காதலியும் போன் மூலமா பேசிக்கிறதை ரகசியமா ஒட்டு கேட்டார்.
எல்லாத்தையும் கவனிக்கும் போது, கார்ல செத்துப் போனது உண்மையிலயே அந்த ஆள் இல்லேங்கிறது தெரிஞ்சு போச்சு.
அப்படின்னா அந்த ஆள் எங்கே?
அந்த ஆசாமிக்கு, வயசு, 46 இருக்கும். அவனை காணல. ஆனா, அந்த மனைவியோடவும், காதலியோடவும் வேற ஒரு இளைஞன் அடிக்கடி பேசறதை கவனிச்சார்.
ஒருநாள் அந்த இளைஞனை பிடிச்சு விசாரிச்சப்ப, அவன் தான் அந்த ஆள்ங்கிறது தெரிஞ்சுது. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி, முகத்தையே மாத்திக்கிட்டிருக்கான்.
அப்படின்னா, அந்த கார் விபத்து?
இந்த ஆள் என்ன தில்லுமுல்லு பண்ணியிருக்கான்னா... முதல்ல ஒரு ஆஸ்பத்திரியில வேலை பார்க்கிற தன் நண்பரிடம், ஒரு அனாதை சடலம் ஏதாவது கிடைக்குமான்னு கேட்டிருக்கான்.
அந்த சமயத்துல, ஆஸ்பத்திரியில சடலம் எதுவும், 'ஸ்டாக்' இல்ல.
உடனே, ரெண்டு பேரும் சேர்ந்து, 'பிளான்' பண்ணி, ஒரு பிச்சைக்காரனை அழைச்சுக்கிட்டு வந்துருக்காங்க. அவனுக்கு அளவுக்கு மீறி துாக்க மாத்திரையை கொடுத்து காலி பண்ணி, அவனை தன் காரில் கொண்டு போய், ஒரு பாறையில் மோத விட்டு, தீயும் வச்சுருக்காங்க. அதுக்கப்புறம் இந்த ஆள், பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி தன் முகத்தையே அடையாளம் தெரியாம பண்ணிக்கிட்டானாம்.
எப்படி இருக்கு பாருங்க, இந்த ஏமாத்து வேலை?
அவன் திட்டம் மட்டும் நிறைவேறியிருந்தா, எட்டு கோடி ரூபாய் அவனுக்கு கிடைச்சிருக்குமாம். பாவம் மாட்டிக்கிட்டதில், ஆயுள் தண்டனை கிடைச்சு, கம்பி எண்ண வேண்டியதா போச்சு!
- இவ்வாறு, அவர் கூறி முடிக்கவும், ஹோட்டல் வாசலில் பெரும் கூச்சல். நான்கைந்து பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிக் கொண்டிருந்தனர், ஹோட்டல் ஊழியர்கள். காரணம் கேட்ட போது, போதைத் தலைக்கேறி, கலாட்டா செய்துள்ளதாக கூறினர்.
'இதுபோன்ற சர்ச்சை இங்கு அடிக்கடி நடக்கும்; அதிகமான கூட்டம் மற்றும் சினிமாக்காரர்களின் வரவு அதிகமாக இருக்கும்போது, இது சகஜம்...' என்றனர், அங்கிருந்தவர்கள்.
லென்ஸ் மாமாவையும், மூத்த செய்தியாளரையும் தாங்கி பிடித்தபடி அழைத்து வந்து, காரில் ஏற்றி அங்கிருந்து கிளம்பினோம்.
ப
'சுவாமி... எனக்கு நிம்மதி வேணும். அதுக்கு என்ன வழி...' என்று கேட்டான், ஒருவன்.
சாமியார் நிமிர்ந்து பார்த்து, 'நீ ஏகப்பட்ட பேர்கிட்ட கடன் வாங்கியிருக்க. அதையெல்லாம் திருப்பி கொடுத்தா தான், உனக்கு நிம்மதி கிடைக்கும்...' என்றார்.
இவனுக்கு ஆச்சரியம்.
'அது எப்படி சாமி... அவ்வளவு கரெக்டா நான் கடன் வாங்கினதை கண்டுபிடிச்சீங்க...' என்றான்.
'உனக்கு கடன் கொடுத்தே சாமியாராப் போன எத்தனையோ பேர்ல, நானும் ஒருத்தன் தான்டா. என்கிட்டயே வந்து நிம்மதிக்கு வழி கேட்கறியே... அதுதான்டா வேதனை...' என்றார்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!
