PUBLISHED ON : ஜூன் 25, 2023

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ். ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!
கோவை ரயில் நிலையத்தில் வந்திறங்கிய நான், எங்கே செல்வது என நீண்ட நேரம் சிந்தித்து, சென்னை செல்ல முடிவெடுத்து, ரயிலில் ஏறினேன்.
காலையில், சென்னை வந்து சேர்ந்தேன். சென்னை, ஒற்றைவாடைத் தியேட்டரில், என்.எஸ்.கே., நாடக சபை நடந்து கொண்டிருந்தது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தி, என்.எஸ்.கே.,வை சிறையில் அடைத்து வைத்திருந்த நேரம்.
அப்போது, டி.ஏ.மதுரம் அம்மையார் பொறுப்பில், நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நிர்வாகத்தில், அந்த சபை நடந்து வந்தது. அவரே நாடகத்தில் முக்கிய வேடமேற்று நடித்து வந்தார். நான் நேராக, என்.எஸ்.கே., நாடக குழுவினர் தங்கியுள்ள கம்பெனி வீட்டுக்கு போனேன்.
'நான், சில நாட்கள் இங்கேயே தங்கப் போகிறேன்...' என்றேன்.
'தாராளமாக, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நீ தங்கலாம்...' என்றார், எஸ்.வி.சகரஸ்ரநாமம்.
ஏனெனில், என்.எஸ்.கே.,வுக்கும், எனக்கும் உள்ள பிடிப்பு, அங்கு அனைவருக்கும் தெரியும்.
இந்த சமயத்தில், கோவையிலிருந்து, ஜூபிடர் பிக்சர் சார்பில், அபிமன்யு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டு, கதை, வசனம் எல்லாம் தயாராக இருந்தது. அதற்கு கதை, வசனம் எழுதியவர், கருணாநிதி. புராண படத்திலும், அன்றைய அரசியலை சம்பந்தப்படுத்தி, சாமர்த்தியமாக எழுதியிருந்தார்.
ஆக, அபிமன்யுவாக நடிக்க, ஓர் இளம் நடிகரை போட வேண்டுமென முடிவெடுத்து இருந்தனர். அங்கு, மாத சம்பளத்திற்கு நடித்துக் கொண்டிருந்த, எம்.ஜி.ஆர்., 'இந்த வேடத்துக்கு பொருத்தமான நடிகர், எஸ்.எஸ்.ஆர்., தான்...' என, பட அதிபர் மற்றும் இயக்குனரிடம் சொல்லியுள்ளார்.
அவர்களுக்கும் என்னைப் பற்றி தெரியுமாதலால், உடனே தயாரிப்பு நிர்வாகியை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவர், விபரத்தை சொன்னார். அவருடன் கோவைக்கு புறப்பட்டேன்.
கோவை சென்றதும், ஒப்பனை அறையில் என் கூடவே இருந்து, 'மேக் - அப்' மற்றும் உடை அலங்காரம் எல்லாம் கவனித்தார், எம்.ஜி.ஆர்.,
கருணாநிதியின் வீர வசனங்களை, நான் பேச, ஒத்திகை காட்சிகள் படமாக்கப்பட்டு, அடுத்த நாள், நான் நடித்த காட்சியை பார்த்தனர். நான் அந்த பரீட்சையில் தேறி விட்டேன்.
ஒருநாள், பட அதிபர் சோமுவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. சோகமாக வீற்றிருந்த அவர், ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினார்.
அதில், 'எஸ்.எஸ்.ராஜேந்திரன், எங்கள் நாடக குழுவில் நடிப்பதற்கு ஏற்கனவே போட்ட ஒப்பந்தம் முடிய, இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. இந்த விபரம் தெரியாமல் நீங்கள் அவரை, அபிமன்யு படத்தில் நடிக்க ஏற்பாடு செய்துள்ளீர்கள்.
'இந்த முயற்சியை நீங்கள் நிறுத்தாவிட்டால், நீதிமன்றம் சென்று, படத் தயாரிப்பை நிறுத்தி விடுவோம். இப்படிக்கு டி.கே.முத்துசாமி - டி.கே.எஸ்., சகோதரர்கள்...' என, எழுதப்பட்டிருந்தது.
இதுபற்றி அறிந்ததும், மிகவும் சங்கடப்பட்ட எம்.ஜி.ஆர்., 'காலம் உங்களுக்காக காத்திருக்கிறது. தைரியமாக இருங்கள்...' என, தேற்றினார்.
அன்று நான் துாங்கவில்லை. தாங்க முடியாத மனச்சுமையோடு, இரவு கழிந்தது. காலையில், ஜூபிடர் சோமு, என்னை அழைத்து, 1,000 ரூபாய் கொடுத்தார். அந்த காலத்தில் அது பெரிய தொகை.
'அபிமன்யுவில் நீ நடிக்காவிட்டாலும், எங்களது வேறு படத்தில் நடிப்பதற்கு, 'அட்வான்ஸ்' தொகையாக இதைப் பெற்றுக் கொள்...' என, அன்புடன் அனுப்பி வைத்தார்.
பிறகு, அந்த ஒப்பந்தத்தை ஒரு வழியாக முடித்து, சென்னைக்கு திரும்பி, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன்.
என்.எஸ்.கே., பிலிம்ஸ் சார்பில், பணம் என்ற படத்தை இயக்கி, தயாரித்தார், என்.எஸ்.கே.,
அப்படத்தில், சிவாஜி கணேசனும், நானும் இரு கதாநாயகர்களாக நடித்தோம். கதை, வசனம், கருணாநிதி. என்.எஸ்.கே., - மதுரம் ஜோடியும் உண்டு.
வேலுாரை அடுத்த குடியாத்தம் பகுதியில், பணம் படத்துக்கான வெளிப்புறப் படப்பிடிப்பு காட்சிகளை எடுப்பது என, முடிவு செய்து, அதற்கான ஏற்பாட்டை செய்தனர், குழுவினர்.
'டேய் ராஜா, நீ என் கூட காரில் வர்றே...' என்றார், என்.எஸ்.கே.,
ஏனெனில், அந்த சமயத்தில், அரசியல் மற்றும் வேறு விஷயங்கள் பற்றி பேசுவதற்கு நான் தான் தோதான ஆள் அவருக்கு.
சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையர், கேமரா மேன் உட்பட அனைவரும் புறப்பட்டு சென்று விட்டனர். கார் டிரைவர் பக்கத்தில் நான். பின் சீட்டில், என்.எஸ்.கே.,வும், மதுரம் அம்மையாரும் அமர்ந்திருந்தனர். மாலை, 4:00 மணியளவில், 'ராஜா, காரை நிறுத்து...' என்றார்.
ஓரமாக ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தோம். டிபன், காபி எடுத்து வைத்தார், மதுரம் அம்மையார்; சாப்பிட்டோம்.
திடீரென, என்.எஸ்.கே.,வின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக வீங்கி, பெரிதாக ஊத ஆரம்பித்து விட்டது. அப்போதும் சிரித்துக் கொண்டே, 'டேய், என்னை நல்லா பாருடா... பலுான் மாதிரி வீங்கி பெரிசாயிக்கிட்டே போறேன்...' என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அழ ஆரம்பித்து விட்டார், மதுரம் அம்மையார்.
'டிரைவரை உடனே கூப்பிடு. உங்க அண்ணனை வேலுார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்...' என்றார், மதுரம் அம்மையார்.
அதற்குள் முகம், உடம்பெல்லாம் வீங்கி விட்டது.
பிறகு என்ன நடந்தது?
- தொடரும்.
நான் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயம், என் அம்மாவைப் பெற்ற பாட்டி, சினிமா படங்களை பார்க்கும் போது, படத்துடன் ஒன்றியப் போய், அதில் கெட்டவர்களாக நடிப்பவர்களை திட்டுவார். அருகிலிருப்போர் அமைதிப்படுத்துவர் குறிப்பாக, பி.எஸ். வீரப்பா, டி.எஸ். பாலையா ஆகியோரை படத்தில் பார்த்தாலே, திட்ட ஆரம்பித்து விடுவார், பாட்டி.ஒரு சமயம், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில், பிள்ளைக் கனியமுது என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு, அதில், என்னை கதாநாயகனாக நடிக்குமாறு பேச, என் இல்லத்துக்கு வந்தார், பி.எஸ்.வீரப்பா. மாடியில் என் அறையில் இருந்தேன்.பி.எஸ்.வீரப்பா வந்திருப்பதை பார்த்துவிட்ட பாட்டி, வேகமாக என் அறைக்கு ஓடி வந்தார். 'டேய் ராஜா, எத்தனையோ குடும்பங்களை கெடுத்தவன், அந்த வில்லன் வீரப்பா, இங்கே உன் குடும்பத்தையும் கெடுக்க வந்திருக்கான்டா. நீ பேசாம தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு இங்கேயே இருந்துடு...' என்றார்.பாட்டியை சமாதானப்படுத்தி, பி.எஸ்.வீரப்பாவை சந்தித்தேன்.
எஸ். எஸ். ராஜேந்திரன்
