PUBLISHED ON : ஜூலை 23, 2023

பா -கே
வேலுார் மாவட்டம், பேரணாம்பேட் அடுத்த, பாஸ்மார் பெண்டா என்ற மலை கிராமத்தை சேர்ந்த மாணவர்களை, தினமும் ஆட்டோவில் அழைத்து வரும், அரசு பள்ளி ஆசிரியரைப் பற்றி, சமீபத்தில் நாளிதழில் படித்து, இப்படி ஒரு ஆசிரியரா என்று வியந்தேன்.
அதேசமயம், மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றி, பயணக்கட்டுரை எழுதுவதில், பிரபல எழுத்தாளரான பிலோ இருதயராஜ் எழுதிய புத்தகத்தில், எப்போதோ படித்தது நினைக்கு வர, அலுவலக நுாலகத்திலிருந்து அந்த புத்தகத்தை தேடி எடுத்தேன்.
அதில் அவர் எழுதியுள்ளதில் சிறு பகுதி...
'காட்டு பகுதிகளுக்கும், மலை பகுதிகளுக்கும் பயணம் சென்றபோது, பல புதுப் புது அனுபவங்கள் கிடைத்தன. விலங்குகள் வருவதை, சில சத்தங்கள் மற்றும் வாசனை மூலமாக அறிந்து கொள்ளலாம் என்பதை, அங்கு வசிக்கும் மக்கள், எனக்கு சொல்லியுள்ளனர்.
'ஒருநாள், அரைத் துாக்கத்திலிருந்த என்னுடைய மூக்கு, பசுமை வாசனையை மோப்பம் பிடித்து விட்டது. பசுமை வாசனை காட்டில் வீசினால், துாரத்தில் யானைக் கூட்டம் வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம். ஏனெனில், யானைக் கூட்டம், இலை, தழைகளை பிய்த்து கீழே போட்டும், கிளைகளை முறித்தபடியும் வருவது வழக்கம்.
'இதனால், பச்சை மரங்கள் மற்றும் செடிகளின் வாசனை வந்ததும், காட்டு யானைகள் வருவது அறிந்து, உஷாராக இருப்பேன்...' என்று எழுதியிருந்ததை படித்தபோது, அருகில், நல்லெண்ணையில் தாளித்த புளியோதரை வாசனை மூக்கை துளைத்தது.
நிமிர்ந்து பார்க்க, உ.ஆசிரியை ஒருவர், டிபன் பாக்சை திறந்து வைத்தபடி நின்று கொண்டிருந்தார்.
'மணி... இந்தா உனக்காக தான், பெருமாள் கோவிலில் செய்வது போன்று, ஸ்பெஷலாக புளியோதரை செய்துள்ளேன். 'டேஸ்ட்' செய்து பாரேன்...' என்றார்.
இரண்டொரு ஸ்பூன் வாயில் போட்டு, 'அருமையா செஞ்சுருக்கீங்க. வாசனையே ஊரை கூட்டுதே...' என்றேன்.
'வாசனை என்றதும், ஒரு விஷயம் நினைவுக்கு வருது மணி. வாசனைகளுக்கும், நினைவுகளுக்கும் தொடர்பு இருக்கிறதா சமீபத்தில் கண்டுபிடிச்சிருக்காங்க...' என்றார், 'திண்ணை' நாயகனான, நடுத்தெரு நாராயணன்.
ஆச்சரியமாக அவரை பார்க்க, 'நீ போய் சாப்பிடும்மா...' என்று, உ.ஆ.,வை அனுப்பி வைத்தார்.
உ.ஆசிரியையை வழிமறித்து, அவர் கையிலிருந்த டிபன் பாக்சை வாங்கி, மடக் மடக்கென்று புளியோதரையை அள்ளி விழுங்கி, பாதியை காலி செய்து, 'கேன்டீனில், சூடா மசால் வடை போடறாங்க, வாங்கிக்கோ. புளியோதரைக்கு சரியான, காம்பினேஷன்...' என்று கூறி அனுப்பி வைத்தார், மாமா.
கம்மிங் பேக் டு த பாயின்ட்.
வாசனை பற்றி, 'திண்ணை' நாராயணன் சொல்ல ஆரம்பித்தார்:
மலரும் நினைவுகள் என்ற வார்த்தையை, இப்ப அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கோம் அல்லவா! அதைப்பற்றி இப்ப வேற விதமா ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. அது என்னென்னா...
மலருக்கும், நினைவுக்கும் சம்பந்தம் உண்டுன்னு தான் பதில் சொல்றாங்க, ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில், நல்லதோ, கெட்டதோ, ஒரு நிகழ்ச்சி, வாசனையோட சம்பந்தப்பட்டிருந்தா, அது சுலபமா மறந்து போறதில்லேன்னு, அவங்க சொல்றாங்க.
ஒரு காலத்துல, ஜெர்மனியில, மக்களுக்கு, 'குளோரின்' வாசனைன்னாலே வெறுப்பு. அதனால, அதை வேணாம்ன்னு சொல்லி, தள்ளியே வெச்சுருந்தாங்களாம்; எதுக்கும் உபயோகப்படுத்தாம இருந்திருக்காங்க.
குளோரின் வாசனை அடிச்சாலே, அவங்களுக்கு, உலக மகா யுத்தம் ஞாபகத்துக்கு வந்துடுமாம். யுத்த சமயத்துல, குண்டு விழுந்த இடங்களை சுத்தப்படுத்தறதுக்கு, அதிகளவு குளோரின் உபயோகப்படுத்தி இருக்காங்க. அந்த வாசனை, பழைய சோகத்தை ஞாபகப்படுத்தி இருக்கு. அதுதான் வேணாம்ன்னு சொல்லியிருக்காங்க.
அந்த காலத்துல, மனுஷ உடலிலிருந்து வீசும் வாசனையை வச்சே, அவருக்கு என்ன நோய் என்பதையும் கண்டுபிடிச்சிருக்காங்க.
சுட்ட ரொட்டியின் வாசனை மூச்சுக் காற்றுல தெரிஞ்சா, அது டைபாய்டு ஜுரம்.
ஒருத்தருடைய மூச்சுக் காற்று, பொருட்களை நொதிக்க செய்யிற அளவுக்கு இருந்தா, அவர், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ஈரல்ல புண் இருந்தா, அந்த ஆளை சுற்றி ஈக்கள் மொய்க்குமாம்.
ஆர்சனிக் விஷம் குடிச்சவன் மேல, பூண்டு வாசம் இருக்குமாம்.
- இப்படியெல்லாம் சொல்லுது ஆராய்ச்சி முடிவு என்றார், நாராயணன்.
'நம்மூர்ல, யாராவது அருகில் வந்தால், வியர்வை நாற்றம் தான் மூக்கை துளைத்து, திக்குமுக்காட வைக்கிறது. என்ன செய்ய, நம்மூர் வெயில் அப்படி...' என்று அலுத்துக் கொண்டார், லென்ஸ் மாமா.
ப
சரியான துாக்கம் இல்லையென்றால், உடலில், மனதில் மாற்றங்கள் ஏற்படும்.
துாக்கம் சரியாக வராமல் இருக்கும்போது, அது நோயாக கருதப்படுகிறது. அதைதான் துாக்கமின்மை, ஆங்கிலத்தில், 'இன்சோமேனியா' என்று சொல்வர்.
துாக்கம் இல்லையென்றால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறோம் தெரியுமா?
* நல்லபடியாக சிந்திக்க முடியாது
* பிரச்னைகளுக்கு தீர்வு அல்லது முடிவு எடுக்க முடியாது
* இதயம் படபடப்பாக இருக்கும்
* தேவையற்ற கோபம் வரும்
* உடல் பருமன், எடை அதிகமாகும்
* சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்
* இதயம் சார்ந்த நோய்கள் வரும்
* முகத்தில் களைப்பு, சோர்வு, சோகம் காணப்படும்
* கண்களை சுற்றி கருவளையும் ஏற்படும்
* ஞாபக மறதி பிரச்னைகள் அதிகமாக ஏற்படும்
* முகம் பார்க்க சிடுமூஞ்சியாக இருக்கும், கோபமாக பேசுவர்
* துாக்கம் இல்லையென்றால், காதுகளில் பிரச்னை ஏற்படும். சீழ் வடியும், கேட்கும் திறன் குறையும்
* நரம்பு சார்ந்த நோய் தாக்கும், நரம்புத் தளர்ச்சி ஏற்படும். குறிப்பாக, ஆண்களுக்கு, ஆண்மை குறைவு ஏற்படும்
* பெண்களுக்கு, சிறு வயதில் துாக்கம் இல்லையென்றால், மாதவிடாய் பிரச்னை ஏற்படும். அதனால், குழந்தை பிறப்பதில் தாமதம் அல்லது பிரச்னை ஏற்படும்
* துாக்கம் இல்லையென்றால், மன நோய்கள் வந்து வாழ்க்கையே பாதிக்கும். மன நோய் வந்தவர்கள், துாங்க முடியாமல் தவிப்பர்
* தசைகள், எலும்புகள் மற்றும் உடல் வளர்ச்சி இருக்காது. புதிய உயிரணுக்கள், செல்கள் உருவாவதில் பாதிப்பு ஏற்படும்
* சரியான துாக்கம் இல்லையென்றால், வயதான தோற்றம் ஏற்பட்டு, முகம் பொலிவிழந்து காணப்படும். நோயுற்றது போல் தோற்றம் இருக்கும்.
- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!
