PUBLISHED ON : ஜூலை 23, 2023

* கோவி. திருநாயகம், கடலுார்: வாசகனாகிய நான் எத்தனை முறை கேள்விகள் அனுப்பினாலும், அந்துமணி, கேள்வி - பதில் பகுதியில் இடம்பெறுவதே இல்லை. அதுபோல, முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவியைப் பற்றி எத்தனை கடிதங்கள் எழுதினாலும், ஜனாதிபதியிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கப் போவதில்லை. ஒப்பீடு சரியா?
இந்த வாரம், உங்களுக்கு பதில் சொல்லி விட்டேன். ஆனால், இன்னும் மூன்று ஆண்டுகள் ஆனாலும், ஜனாதிபதியிடமிருந்து, ஸ்டாலினுக்கு பதில் கிடைக்கப் போவதில்லை!
கே.எம். நஜ்முதீன், சென்னை: லஞ்சத்தை எப்படி ஒழிக்கலாம்?
அரபு நாடுகளில் உள்ளது போன்ற சட்டங்களை, நம் நாட்டிலும் கொண்டு வந்தால், லஞ்சம் மட்டுமல்ல, பலவித குற்ற செயல்களையும் முடிவுக்கு கொண்டு வரலாம். செய்யுமா அரசு?
ஆர். மகிழினி, சென்னை: 'லஞ்சம் வாங்கும் ஒரு சில கறுப்பு ஆடுகளால், மொத்த காவல்துறையினரையும் களங்கப்படுத்தக் கூடாது...' என, அவர்கள் கூறுகின்றனர்... இது என்ன நியாயம்?
நியாயமே இல்லை; அத்துறையில், லஞ்சம் வாங்காதவர்களே இல்லை. 'காவல் நிலையம்' என்ற, 'போர்டு'க்கு பதில், 'லஞ்ச நிலையம்' என, 'போர்டு' வைத்தால், பொருத்தமாக இருக்கும்!
* க. முருகன், திருச்சி: எனக்கு, 70 வயதாகிறது. கண் பார்வை குறைந்துள்ளது. என் சொந்தங்கள் என்னை, 'குருடன்' என்று சொல்கின்றனரே...
கண் பார்வையற்றவனை குருடன் என்றே சொல்ல முடியாது. தன் குற்றம், குறையை, எவன் உணராமல் இருக்கிறானோ, அவனே சரியான குருடன்.
க. கோமளம், நம்பிபுரம்: அடுத்தடுத்து, காவலர்களும், அரசு பஸ் ஓட்டுனர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனரே... ஏன்?
அவர்களது பணிச்சுமை தான் காரணம். அவர்களுக்கு, பணி நேரமும் கிடையாது, வாரம் ஒருநாள் விடுமுறையும் கிடையாது. இதனால், அவர்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. மன உளைச்சல் அதிகமாகி விடுகிறது. இதுதான் அவர்களின் தற்கொலைக்கு காரணம்.
