PUBLISHED ON : ஜூலை 23, 2023

கலியமூர்த்தி சாதகத்தை முடித்து விட்டு, நாற்காலியில் அமரவும், இஞ்சி டீயோடு, உமா வந்து எதிரில் அமரவும் சரியாக இருந்தது.
''இன்னைக்கு என்ன சீக்கிரம் முடிச்சுட்டீங்க?''
வேகமாக தலையாட்டியபடி, ''இல்லயே எப்பவும் போல தான்,'' என்றார், கலியமூர்த்தி.
''அதான் இல்ல. நீங்க சாதகம் பண்ணப் போகும்போது குக்கர் வச்சா, மூணாவது விசிலுக்கு தான் எழுந்து வருவீங்க. இன்னைக்கு இரண்டாவது விசிலுக்கே வந்தாச்சு,'' அசட்டையாய் சொன்னாள், உமா.
''அடிப்பாவி, சாதகம் பண்றதை, சாதம் வடிக்கிறதோட சேர்த்து வச்சு கணக்கு பண்றியா?''
''உங்களுக்கு, சாதகம் சரியா வரணும்; எனக்கு, சாதம் சரியா வேகணும்.''
இருவருக்கும் வாக்குவாதம் முற்றுவதற்குள், யாரோ கதவைத் தட்டினர். திறந்தாள், உமா.
அவர்கள் வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வீட்டு வேலை செய்த, நளினி நின்று கொண்டிருந்தாள். பின்னால் அவள் மகள் வெண்ணிலா.
கணவன், மனைவி இருவருக்கும் அதிர்வு.
மெல்லிய அதிருப்தியை பிரதிபலித்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ''வா நளினி, எப்படி இருக்க?'' என்றாள், உமா.
''நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க. ஐயா இருக்காங்களா?'' குரல் குழைச்சலில், அத்தனை பணிவு.
இருவரையும் உள்ளே அழைத்தாள், உமா.
வெண்ணிலாவின் முகத்தில் குழப்பமும், ஒருவித தயக்கமும் மண்டிக் கிடந்தது.
தாயும், மகளும் நிறைய மாறி இருந்தனர். வார இறுதியில் அந்த முன்னணி, 'டிவி'யில் நடக்கும், பாட்டுப் போட்டியில், ஜூனியர் பிரிவில் பாடிக் கொண்டிருக்கிறாள், வெண்ணிலா.
ஏராளமான ரசிகர் பட்டாளமும், கணக்கில்லாத பாராட்டும், வாரா வாரம் ஆரவாரம் தான் அவளின் இந்த இசைப் பயணம். உண்மையில், 'டிவி'யில் இதைப் பார்க்கும்போது சந்தோஷமாகத் தான் இருந்தது, கலியமூர்த்திக்கு.
விளிம்பு நிலை வாழ்க்கையிலிருந்து தன்முனைப்புடன் முன்னேறிய பெண்ணாய் அச்சிறுமியின் மீது, மிகப்பெரிய மரியாதை உண்டு அவருக்கு.
உமாவின் மனது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போய் நின்றது. நளினிக்கு எந்த குறையும் இல்லாமல் தான் நடத்தினர்.
திடீரென உமாவின் கர்ப்பப்பையில் ஏதோ கோளாறு வர, அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியதாகியது. வீடு முழுக்க வந்து போகும் உறவுக்கூட்டங்கள். சரியாக அந்நேரம் பார்த்துத் தான், விடுப்பு போட்டு, போனை அணைத்து வைத்து, தன் வேலையை காண்பித்தாள், நளினி.
உதவிக்கும், கை துணைக்கும் ஆள் தேவைப்படும் போது, முதுகில் குத்திவிட்டு வேலையை விடுவது என்பது, என்ன மாதிரியான செயல்? தவித்துப் போனாள், உமா.
பத்து நாட்கள் கழித்து வந்து நின்ற நளினி, எதுவுமே நடக்காதது போல், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்ன பொய்யால், உமாவின் கோபம் இரட்டிப்பானது.
'ஒரு வார்த்தை போன் பண்ணிச் சொல்லக்கூடத் தோணல இல்ல. எத்தனை செய்திருப்பேன், உனக்கு நன்றி கிடையாது...' உமாவின் கோபத்தில் நியாயம் இருந்தாலும், செய்ததை சொல்லிக் காட்டி இருக்கக் கூடாது தான்.
அது, நளினியின் கோபத்தைக் கூட்ட, அவளும், 'ஆங் பொல்லாததை செய்திட்டீங்க. வீடு முழுக்க ஆட்களை சேர்த்து வச்சிட்டு, வா வான்னா யார் வருவா... திங்கறதை கழுவறதும், மலை மாதிரி அழுக்கு துணியை துவைக்கிறதும்... இந்த மாச சம்பளத்திலேயே கழிச்சுக்கலாம்ன்னு பார்த்து இருப்பீங்க? ஏன்னா, வேலை செய்றவங்களைப் பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியும் பாருங்க...' என்றாள்.
உமாவின் கண்கள் கலங்கியது. மற்றவர்கள் எப்படியோ, அவளுக்கு அப்படி பழக்கமில்லை. அந்த மாத சம்பளத்தில் ஆயிரம் சேர்த்து தரவேண்டும் என்று முன்னமே திட்டமிட்டு தான் இருந்தாள். அவள் பேச்சால், மனம் குன்றிப் போனது. அன்றே நளினியின் கணக்கை முடித்து அனுப்பி விட்டாள்.
'டிவி'யில் தாயையும், மகளையும் பார்க்கும்போது, மனது பழைய சம்பவங்களை துளி நிமிடம் நினைக்காமல் இருக்காது. ஆனால், ஏனோ அந்தக் குழந்தை, இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று, மனதார ஆசைப்பட்டாள்.
பரஸ்பர விசாரிப்புக்கு பிறகு தயக்கத்தோடு ஆரம்பித்தாள், நளினி...
''ஐயா, இது என் பொண்ணு. உங்களுக்குத் தெரியுமில்லியா?''
''உன் பொண்ணை இன்றைக்கு தமிழ்நாடு முழுக்கத் தெரியுமே,'' என்றார், கலியமூர்த்தி.
வெண்ணிலாவின் முகத்தில் வெட்கம் அரும்பியது.
வெண்ணிலாவுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமும், சமூக வலைதளங்களில் ஆதரவும் வெகு அதிகம். அதற்கு அவள் பாடும் திறமை மட்டும் காரணமில்லை, சேனல் நிர்வாகம் டி.ஆர்.பி.,காக போட்டியாளர்கள் பற்றி போடும் குறும்படமும் தான்.
அதில் ஒளிபரப்பான வெண்ணிலாவின் வாழ்வியல் வறுமையும், அவளின் முயற்சியும், ரசிகர்கள் மத்தியில் அவளுக்கென்று பரிவான இடத்தைப் பெற்றுத் தந்திருந்தன.
இறுதிப் போட்டியில் வெண்ணிலா தான் வெற்றி பெறுவாள் என்பது, அத்தனை பேரின் யூகமாக இருந்தது. இறுதிப் போட்டிக்கு போட்டியாளர்களை தேர்வு செய்யும் பன்முக சுற்றில் முக்கிய நடுவராக இருந்தார், கலியமூர்த்தி.
அதற்காக தான் நளினி, தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்று, கலியமூர்த்திக்கு நன்றாகவே புரிந்தது.
''ஐயா, உங்களுக்குத் தெரியாதது இல்ல. இந்த இடத்துக்கான போராட்டம் எங்களை மாதிரியான ஆட்களுக்கு சாதாரண விஷயமில்லை. இன்னும் ஒரு படி தான் இருக்கு. எப்படியாச்சும் இறுதி போட்டிக்கு போயிட்டால், மக்கள் ஆதரவோட என் பொண்ணு ஜெயிச்சிடுவா.
''பழைய விஷயங்கள் எதையும் மனசுல வச்சுக்காதீங்க. என் பொண்ணின் வாழ்க்கைக்கு ஒரு விடிவிளக்கை காட்டுங்க,'' என்றபடியே, சட்டென்று கலியமூர்த்தியின் கால்களில் விழுந்தாள், நளினி.
விக்கித்துப் போயினர் கணவனும், மனைவியும்.
''இதோ பாரும்மா, போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. இப்படி அவசியமில்லாத முயற்சிகள் செய்யிறதை கை விட்டுட்டு, கடுமையான பயிற்சி செய்ய வைங்க. எப்போதும் வெற்றியை அடையணும்; வாங்கக் கூடாது. நான் உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன்,'' என, வெண்ணிலாவின் தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தார், கலியமூர்த்தி.
அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த நாட்களிலும், போனில் அழைத்து, நினைவூட்டிக் கொண்டே இருந்தாள், நளினி.
நளினி மீதிருந்த ஆற்றாமை முற்றிலும் விடுபட்டு விலகி, 'பாவம் வெண்ணிலா. ஜெயிச்சா அவளோட எதிர்காலத்துக்கு உதவும்...' என்று மறைமுகமாய், தன் சிபாரிசை பதிவு செய்து கொண்டே இருந்தாள், உமா.
'ஆனால், வெண்ணிலா ஜெயிக்கணும்ன்னா, அவளை விடவும் திறமையான தகுதியுள்ள ஒரு குழந்தை தோற்கணுமே...' தனக்குள் முணுமுணுத்தார், கலியமூர்த்தி.
இரவு போனில் அழைத்து, ஒருபாட்டம் தன் ஆதங்கத்தை கண்ணீரில் கொட்டித் தீர்த்திருந்தாள், நளினி.
''ஐயாவைதான்மா நான் மலை போல நம்பி இருக்கேன்,'' மேட்டூர் டேமை விழுங்கியவள் போல் குரலில் அத்தனை தளதளப்பு.
போட்டி நாள் வந்தது, மூன்று சுற்றுகள். மற்ற போட்டியாளர்கள், 100, 98 மேல் தங்கள் திறமையை பதிவு செய்து, மதிப்பெண்களை குவித்திருக்க, வெண்ணிலாவின் பங்கு, 60 சதவிகிதம் தான்.
கலியமூர்த்தி வழங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில், வெண்ணிலா வெளியேற்றப்பட, சமூக வலைதளங்களில் அவளின்ன் அனுதாபிகள், அவரை திட்டித் தீர்த்தனர்.
தான் அத்தனை சொல்லியும் துளி கூட மதிப்புத் தராமல், கணவன் நடந்து கொண்டாரோ என்று, உமாவுக்கு மனசு உறுத்தியது.
உமாவிற்கும் வருத்தம் தான். அவள் எதிர்ப்பார்த்தது போல் அன்று மாலையே, நளினி, மகளை அழைத்துக் கொண்டு வீட்டில் வந்து நின்றாள். அவளின் கண்ணீரை எதிர்கொள்ள முடியாமல், கணவரை ஆதங்கமாய்ப் பார்த்தாள், உமா.
''இதைத்தான் செய்வீங்கன்னு நினைச்சேன். நம் வீட்டில வேலை பார்த்தவளோட மகளுக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கையாங்கிற பொறாமை. ஏன், நாங்க எல்லாம் ஜெயிக்க கூடாதா... வசதி வாய்ப்போட வாழக் கூடாதா...
''கைக்கு எட்டினதை வாய்க்கு எட்டாம செய்துட்டீங்களே... இன்னும் எத்தனை நாள் நாங்க எல்லாம் இப்படியே இருக்கணும்...'' மேற்கொண்டு பேசிக் கொண்டே போனவளை, கையை உயர்த்தி, இருவரையும் தீர்க்கமாய் பார்த்தார், கலியமூர்த்தி
''வெண்ணிலா, உன் கூட பாடின மற்ற மூவரையும் விட, நீ சிறப்பா பாடினியா? உண்மையைச் சொல்லணும்,'' குரலில் கனிவும், கண்டிப்பும் ஒரு சேர இருந்தது.
தலை தன்னால் தரையை பார்க்க, மறுப்பாய் தலை அசைத்தாள், வெண்ணிலா.
''அப்போ, எப்படி உன் அம்மா உனக்காக நியாயம் கேட்பதற்கு கிளம்பிய போது, நீ அமைதியாக வந்தே?'' என்றார்.
''சார், அது வந்து...''
''போட்டியில் ஜெயிக்கறதைப் பத்தி அப்புறம் பேசலாம். வாழ்க்கையில ஜெயிக்கணும்ன்னா முதலில் தோல்வியை கத்துக்கணும். உன் முயற்சியும், இந்த சூழலிலிருந்து நீ அடைந்திருக்கும் உயரமும் அசாத்தியமானது தான்.
''அதேநேரம், உன் சக போட்டியாளர்கள் மூன்று பேரும், உன்னை விட அதிக திறமையும், விடாமுயற்சியும், உழைப்பையும் தந்து இருக்காங்கங்கிறதை எப்படி மறுக்க முடியும். இது, திறமைக்கான போட்டியே தவிர, அனுதாபம் தேடுற இடமில்லை.
''இது ஒரு போட்டிக்களமா இல்லாம, பாடல் பாட வாய்ப்புக்கான களம் மட்டும் தான் என்றால், நான் கண்டிப்பா உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன். ஏன்னா, மற்ற குழந்தைகளை விட, உனக்கு அந்த வாய்ப்பு மிக மிக அவசியமானது.
''ஆனால், இது திறமைக்கான போட்டி. அங்கே உன்னை விடவும், திறமையான பலர் இருந்தாங்கன்னு, உனக்கும் தெரியும். அப்போ நான் எப்படி உன் சூழ்நிலையை சலுகையாக காட்டி, மற்றொரு குழந்தையின் நியாயமான வெற்றியை பறிக்க முடியும்?'' என்றார், கலியமூர்த்தி.
தலை குனிந்து விசும்பிக் கொண்டிருந்தாள், வெண்ணிலா.
''வெற்றி அடையறதுக்கு முன், தகுதியடையணும்கிறது தான், நியாயமான பாதை. அம்மா, உணர்ச்சி அடிப்படையில கோபப்படறாங்க. உன் வெற்றியை நான் தடுத்து நிறுத்தல. தற்காலிகமா தள்ளிப் போட்டிருக்கேன். அந்த இடத்துக்கு தேவையான தகுதியை, நீ வளர்த்து கொள்ளும்போது, அதை யார் தடுத்தாலும், உன்னை வந்து சேரும்.
''எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. நீ அற்புதமான போராளி. கண்டிப்பாக அந்த வெற்றிக்கு தகுதியான திறமைசாலியா உன்னை மாத்திக்குவேன்னு நம்பறேன். அதுக்கு முதல்படியா, நீ விரும்பினால், வார இறுதி நாட்களில் உனக்கு முறைப்படி சங்கீதம் கத்துத் தர்றேன்,'' என்று, கலியமூர்த்தி முடித்தபோது, அவர் கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்திருந்தாள், வெண்ணிலா.
அன்று, தாய் காலில் விழுந்ததற்கும், இன்று, மகள் விழுவதற்குமான இடைவெளியில் நிரம்பி வழிந்த நேர்மை, உமாவிற்கு அழகாய் புரிந்தது.
பர்வின் பானு
