தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூலை 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

என்னுடைய தீவிர வாசகி அவர். தமிழகத்தின் தென் கோடி மாவட்டத்தை சேர்ந்தவர். அரசு பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியராக பணிபுரிபவர்.

'சென்னையிலுள்ள டி.பி.ஐ., அலுவலகத்துக்கு, ஒரு வேலையாக வருகிறேன். உங்களை சந்திக்க இயலுமா...' என்று, 'மெசேஜ்' அனுப்பியிருந்தார்.

'தாராளமாக வரலாம்...' என்று பதில் அனுப்பியிருந்தேன்.

கடந்த வாரம் சென்னை வந்து, தன் வேலையை முடித்து, அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

'பள்ளிகள் திறந்தாயிற்று. வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு...' என்று விசாரித்தேன்.

'அதுக்கென்ன மணி... வழக்கம் போல்தான். ஆனா, மாணவர்களின் அட்டகாசம் தான் தாள முடியவில்லை. அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்குள், ஆசிரியர்களான எங்களுக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. எதற்கும் கட்டுப்படுவதில்லை. கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டாலும், வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுகின்றனர், பெற்றோர். நாங்க தான் பக்குவமா நடந்துக்க வேண்டியிருக்கு.

'ஆனா, மணி. இந்த நிலை அக்காலத்தில் கூட இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில், வாரியார் சுவாமிகளே சொல்லியிருக்காரே...' என்றதும், 'அது என்ன?' என, என் அருகில் இருந்த உ.ஆசிரியர் ஒருவர் ஆர்வமாக கேட்க, சொல்ல ஆரம்பித்தார்:

கல்வி கற்கும் மாணவர்களோட பல வகையான புத்திகள் பற்றி, வாரியார் சுவாமிகள் விளக்கியிருக்கார். அது என்னென்னா...

மிருத்து புத்தி: 'மிருத்து'ன்னா மண்.

மண் சுவர்ல ஆணி அடிக்கிறது சுலபம், அதை பிடுங்கி எடுக்கறதும் சுலபம். அது மாதிரி சிலர், குரு சொல்லிக் கொடுப்பதை, சுலபமா கேட்டு தெரிஞ்சுக்குவாங்க. கொஞ்ச நேரத்துல மறந்துடுவாங்க. இது, மிருத்துப் புத்தி.

தாரு புத்தி: தாருன்னா மரம்.

பச்சை மரத்துல ஆணி அடிக்கிறது சுலபம். ஆனால், அதை எடுக்கறது கஷ்டம். அது மாதிரி ஆசிரியர்கிட்ட கேட்டதை கவனமா மனசுல பதிய வச்சுக்கிட்டு, அதை மறக்காம இருக்கறது, தாரு புத்தி.

பட்ட மரமா இருந்தா, அதுல ஆணி அடிக்கறது கஷ்டம். அடிக்கிற ஆணியும் சீக்கிரம் நழுவி விடும். அது மாதிரி கேட்கற விஷயம், மனசுல பதியறதும் கஷ்டம். அப்படியே பதிஞ்சாலும் அது நீடிச்சு இருக்கறதும் கஷ்டம். கொஞ்ச காலத்துல மறந்துடும்.

சிலா புத்தி:

சிலான்னா கல். ஒரு கருங்கல்லுல நான்கு துளையை போட்டு, ஒரு துளையில உளியை வச்சு அடிச்சா, மற்ற துளைகள் வழியாக பிளந்து கல் ரெண்டாயிடும். குறிப்பான ஒரு பொருளை சொன்னா, அதைக் கொண்டு மத்ததையும் தெரிஞ்சுக்கறது தான், சிலா புத்தி.

வேணு புத்தி:

வேணுன்னா, மூங்கில். மூங்கில் கணுவுல ஒரு பக்கம் உளி வச்சு அடிச்சா, ரெண்டு பக்கமும் பிளந்துடும். அது மாதிரி ஒரு செய்தியை கேட்டுக்கிட்டு இருக்கிறப்பவே அதோட முன் - பின் தொடர்களையும் தெரிஞ்சுக்கணும். அது, வேணு புத்தி.

தைல புத்தி: தைலம்ங்கிறது எண்ணெய் போன்றது. தண்ணியில ஒரு துளி தைலத்தை விட்டா, அது தண்ணி முழுவதும் பரவுறது மாதிரி, ஆசிரியர், சுருக்கமா ஒரு கருத்தை சொன்னா, அதை வச்சுக்கிட்டே பூரா விஷயங்களையும் தெரிஞ்சுக்கறது, தைல புத்தி.

கற்பூர புத்தி: கற்பூரம் தீ பட்டவுடனே பிடிச்சுக்குது. ஆசிரியர் சொன்னவுடனே, நுண்ணறிவோட பாடங்களை புரிஞ்சுக்கறது, கற்பூர புத்தி.

கரிப்புத்தி: கரியில நெருப்பை வச்சு தொடர்ந்து விசிறினால், நெருப்பு பத்திக்கும். அது மாதிரி காலை - மாலை வேளைகள்ல ஆசிரியர் வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார். அதை வைத்து புரிஞ்சுக்கிறது இந்த வகை.

கதலிக் தண்டு புத்தி: கதலிங்கிறது வாழை மரம். வாழைத் தண்டுல தீ வைக்கிறது எவ்வளவு சிரமமோ அவ்வளவு சிரமத்தோட கல்வி கற்கிறது கதலித் தண்டு புத்தி.

இதைத் தவிர இன்னும் சில வகையா கூட, மாணவர்களை இனம் பிரிக்கிறது உண்டு.

ஆசிரியர் சொன்னதுல, நல்லதை மட்டும் எடுத்துக்கறவன், அன்னம்.

ஆசிரியர் நடத்தும் பாடத்தை கேட்டுக்கிட்டு, பிறகு, தனியா உட்கார்ந்து சிந்தித்து புரிஞ்சுக்கிறவன், பசு.

பசு மாடு அப்படித்தானே. புல் கண்ட இடத்துல மேயும். அப்புறம், நிதானமா அசை போடும்.

ஆசிரியர் சொன்னதை தவிர வேற எதையும் சொல்ல முடியாதவன், கிளி.

பல இடங்கள்ல பாடம் கேட்டு, கடைசியில ஒண்ணும் புரியாம போறவன், ஆடு. ஆடு ஒரு செடியில வயிராற மேயாது. இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு அங்கேயும் இங்கேயும் அலையும்.

சிலருக்கு எருமைன்னு பேரு. எருமை, குளத்து நீரை கலக்கி தான் குடிக்கும். அது மாதிரி ஆசிரியர் மனதை நோகச் செய்து பயில்கிற மாணவர்கள்லாம் இந்த ரகம் என்று சொல்லி இருக்கிறார்.

இந்த காலத்து மாணவர்கள்லாம் ஒரு தனி ரகம். தானாவும் கத்துக்க மாட்டாங்க; ஆசிரியர் சொல்றதையும் கேட்டுக்க மாட்டாங்க...

- இவ்வாறு கூறி முடித்தார், வாசகி.

'அனுபவம்தான் சிறந்த ஆசிரியர்ன்னு சொல்வாங்களே கேள்விப்பட்டதில்லையா? அந்த அனுபவங்கள், அவர்களுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும்...' என்றேன், நான்.

அதை ஆமோதித்து, அவரது ஊர் ஸ்பெஷல், ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை கொடுத்து, விடை பெற்றார், வாசகி.



ஒரு மணி நேரம் ரொம்பவும் விபரமா வகுப்பு எடுத்தார், ஆசிரியர் ஒருத்தர்.

கடைசியாக, 'மாணவர்களே... ரொம்பவும் எளிமையா, விளக்கமா எல்லா விபரமும் சொல்லியிருக்கேன். அதனால, இதுல உங்களுக்கு சந்தேகம் வர்றதுக்கான வாய்ப்பே இருக்காது. இருந்தாலும், கேட்க வேண்டிய கடமை. இதுவரைக்கும் நடத்தினதுல, யாருக்காவது ஏதாவது சந்தேகம் உண்டா?' என, கேட்டார்.

'எனக்கு ஒரே ஒரு சந்தேகம் சார்...' என, எழுந்து நின்றான், ஒருத்தன்.

'என்ன?' என்றார்.

'இதுவரைக்கும் நீங்க என்ன பாடம் சார் நடத்துனீங்க?' என கேட்டான், அவன்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us